

அன்னை சக்திதேவியின் உடற்கூறுகள் விழுந்த 51 இடங்களில் உஜ்ஜயினி மகாகாளி பத்தாவது சக்தி பீடமாக விளங்குகிறது. மத்திய பிரதேசத்தில், உஜ்ஜயினி பகுதியில் மங்கள சண்டி என்ற பெயரில் அன்னை எழுந்தருளி இருக்கிறாள். இது தேவியின் மேல் உதடு விழுந்த இடமாக கருதப்படுகிறது.
ஒரு நாள் சிவபெருமானும், காளி தேவியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்த போது, சண்டன், பிரசண்டன் என்ற அசுரர்கள் அங்கே வந்து நந்தியைத் தாக்க முற்பட்டனர். அதன் காரணமாக சிவபெருமானும், காளி தேவியும் ஆடிய ஆட்டம் தடைப்பட்டது. கோபம் கொண்ட ஈசன் அசுரர்களை அழிக்க காளி தேவிக்குக் கட்டளையிட்டார். அதன்படி இரு அசுரர்களையும் போரிட்டு வதம் செய்தாள் காளி. அசுரர்களை அழித்த காரணத்தால் அன்னைக்கு ஹரசித்தி தேவி என்ற பெயர் ஏற்பட்டது.
இந்தத் தலத்தில் உள்ள காளிதேவி புராணப் பெருமையும் புகழும் பெற்றவள். அதற்கு காளிதாசனுக்கு அன்னை அருள்புரிந்த வரலாறே ஒரு சான்று.
ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூடன் ஒருவன் அமைச்சனின் சூழ்ச்சியால் மன்னன் மகளை மணம் முடிக்க நேர்கிறது. தன் கணவன் சகல கலைகளிலும் வல்லமை பெற்றவனாக இருப்பான் என்று எண்ணி அகம் மகிழ்ந்தாள் அரச குமாரி. ஆனால், சில நாட்களில் அவனுடைய உண்மையான ரூபம் வெளித் தெரிகிறது. தன் கணவன் படிப்பறிவு இல்லாதவன் என்பதை உணர்ந்த ராஜகுமாரி பெரும் துயரில் ஆழ்ந்தாள். நாட்டை ஆளும் தனக்கு நாயகனாக வந்தவன் எழுத்தறிவில்லாதவனாக இருந்தால் எல்லோரும் ஏளனம் செய்வார்களே என்று அஞ்சினாள் அவள்.
இதற்கு ஒரு வழி தேடினாள். தன் கணவனிடம் ஊர் எல்லையில் உள்ள மகாகாளியிடம் சென்று அம்பிகையின் அருள் பெற்று வாருங்கள் எனக் கூறி அனுப்பினாள். அரசியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அன்னையை நோக்கி கடும் தவத்தை மேற்கொண்டான் அவன். களங்கமில்லாத அவனுடைய வேண்டுதலைக் ஏற்ற காளி, அவன் முன்னே தோன்றி, அவன் நாவில் தன் சூலத்தினால் எழுதினாள். சரஸ்வதி தேவியும் மகிழ்ந்து அவனுக்கு அளப்பரிய ஞானத்தை வழங்கினாள். அதன் காரணமாக பின்னாளில் கவிச் சக்கரவர்த்தியாக மாறி காளிதாசன் என்கிற அழியாப் புகழினைப் பெற்றான்
இப்படிப்பட்ட வரலாற்று நிகழ்வுகள் இங்கே பிரசித்தம். இங்கே அன்னை, அசுரர்களை அழிக்கும் ஹரசித்தி தேவியாகவும், மகாகாளியாகவும், தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அசுர குணங்களை அழித்து மங்களம் அருளும் மங்கள சண்டியாகவும் விளங்குகிறாள். விக்ரமாதித்யன் ஆண்ட இந்த உஜ்ஜயினி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த போபால், இந்தோர் அருகில் உள்ள அழகான சிறிய ஊர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.