விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மகளுக்கு அமையும் நல்ல வாழ்க்கை !

பரத்வாஜ மகரிஷி. குழந்தைச் செல்வம் இல்லையே என்ற கவலையில் ஆழ்ந்திருந்தார். யாகங்களில் கரை கண்ட அவருக்கு, உடனிருந்த முனிவர் பெருமக்கள் "புத்திர காமேஷ்டி யாகத்தைச் செய்யலாமே' என்று ஆலோசனை கூறினர்.

News image
Updated On :30 மே 2013, 10:23 am

மயில் வாகனன்

பரத்வாஜ மகரிஷி. குழந்தைச் செல்வம் இல்லையே என்ற கவலையில் ஆழ்ந்திருந்தார். யாகங்களில் கரை கண்ட அவருக்கு, உடனிருந்த முனிவர் பெருமக்கள் "புத்திர காமேஷ்டி யாகத்தைச் செய்யலாமே' என்று ஆலோசனை கூறினர். அவருக்கும் சரியென்று பட்டது. புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார் பரத்வாஜர். யாக பலனாக அவருக்கு பார்வதி தேவியே மகளாகப் பிறந்தாள். பரத்வாஜருக்குத் தெரியாமலா போகும்.. பருவம் வந்த தன் மகளுக்கு ஏற்ற மணமகன் சிவபெருமானே எனத் தீர்மானித்தார். சிவனாரைத் துதித்து தம் ஆசையை விவரித்தார். அவர் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து சிவபெருமானும் மணக்கோலம் பூண்டு பூவுலகு எழுந்தருளினார். இதனை உணர்ந்து கொண்ட பரத்வாஜர், தன் ஆஸ்ரமம் நோக்கி வந்த அவரை எதிர்கொண்டு வரவேற்றார். அவ்வாறு அவர் வரவேற்ற தலம் எதிர்கொள்பாடி என்று வழங்கலாயிற்று. சிவபெருமானுக்கு திருஎதிர்கொள்பாடியுடையார் என்ற திருநாமம் ஏற்பட்டது..

ஒருமுறை துர்வாச முனிவர் சிவபெருமானை பூஜித்துவிட்டு, அவரிடம் இருந்து பெற்ற பிரசாதமான மலர்களுடன் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இந்திரன் தன் யானை ஐராவதத்தின் மேலேறி அவ்வழியே வந்தான். தனக்குக் கிடைத்த பகவத் பிரசாதத்தை இந்திரனுக்கும் மரியாதையுடன் அளித்தார் துர்வாசர். அதனைப் பெற்றுக் கொண்ட இந்திரனோ அலட்சியத்துடன் ஐராவதத்தின் தலையின் மீதே வைத்தான். அதன் பெருமை அறிந்திராத ஐராவதமோ தலையில் இருந்த மலரை எடுத்து காலில் போட்டி நசுக்கியது.

கோபத்துக்கு பேர் போன துர்வாசரோ இக்காட்சி கண்டு, கோபத்தின் உச்சிக்கே சென்றார். இந்திரனுக்கு ஒரு சாபம், ஐராவதத்துக்கு ஒரு சாபம் என அவரின் சாபக் கணைகள் விரிந்தன.

இந்திரன் பெரிதும் வருத்தம் கொண்டு சாப விமோசனம் வேண்டினான். ஐராவதமும் தவறுணர்ந்து பாப விமோசனம் வேண்டியது. அதன்படி பூமிக்கு வந்த ஐராவதம் பல்வேறு தலங்களுக்கும் சுற்றித் திரிந்தது. அவ்வாறு வந்தபோது, இங்கே எதிர்கொள்பாடி தலத்தில் அருளும் ஈசனை வலம் வந்து, மலர் கொண்டு வழிபட்டு வேண்டிநின்றது. அதற்கு அருள் புரிந்ததால், பெருமான் "ஐராவதேஸ்வரர்' எனப்பட்டார். யானை உண்டாக்கியதால் தல தீர்த்தமும் "ஐராவத தீர்த்தம்' எனப்பட்டது.

மேற்கு நோக்கி அமைந்த மூன்று நிலை ராஜகோபுரத்துடன் திகழ்கிறது கோயில். கோபுர வாசலை அடுத்து, வெளிப் பிராகாரத்தில் கொடிமரத்து விநாயகர், பலிபீடம், அதிகார நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. கருவறையில் மேற்கு நோக்கிய சந்நிதியில் சதுர ஆவுடையார் மீது லிங்க ரூபியாக ஐராவதேஸ்வரர் திருக்காட்சி தருகிறார். இங்கே பெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு. தலத்தில் இறைவி சுகந்தகுந்தளாம்பிகை என்ற மலர்க்குழல்நாயகி தெற்கு நோக்கிய சந்நிதியில் அருள்கிறார். இங்கே பரத முனிவர் பெருமானை வழிபட்டாராம். முனிவர் வழிபட்ட பரதலிங்கம் பிராகாரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

கருவறை முன் மண்டபத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலக்ஷ்மி சந்நிதிகளும், வெளிப் பிராகாரத்தில் ஞானசரஸ்வதி, பைரவர், சனீஸ்வரர், துணைவந்த விநாயகர், சூரியன் சந்நிதிகளும் உள்ளன.

தலத்தின் சிறப்பு: சிவபெருமானே மணமகனாக வந்து பார்வதியைத் திருமணம் புரிந்து கொண்ட தலம் ஆகையால், இங்கே திருமணம் குறித்த நிகழ்வு சிறப்பான ஒன்று. நல்ல குணம் படைத்த மருமகன் அமைய ஐராவதேஸ்வரரை வேண்டிக் கொள்கிறார்கள். தனக்கு அமைந்த மருமகனால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு பெண்ணின் தந்தை வந்து வழிபட்டால் பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை. எனவே மகளுக்கு ஏற்ற மணமகன் அமைய, மாப்பிள்ளை பார்க்கும் முன்னர் இங்கே தங்கள் மகளை அழைத்து வந்து சிவபெருமானுக்கு அபிஷேகம், பூஜைகள் செய்து வழிபட்டு வேண்டிக் கொள்கின்றனர். அந்த வகையில், மகளின் வாழ்க்கை நன்றாக அமைய பெற்றோர் வழிபடும் தலமாகத் திகழ்கிறது இந்தத் தலம்.

மேலத் திருமணஞ்சேரி என்ற பெயருடன் திகழ்கிறது இந்தத் தலம். மேலும், பொருளை பறி கொடுத்தவர்கள், பதவி பறி போனவர்கள், வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள், வியாபாரத்தில் நஷ்டம் அடைந்தவர்கள், சரியான மண வாழ்க்கை அமையப் பெறாதவர்கள் என இங்கே பெருமானை வழிபட்டு துயரம் நீங்கியோர் பலர்.

இந்தத் தலத்தை சுந்தரர் ஒரு பதிகத்தினால் பாடியுள்ளார். எனவே இது தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமாகவும் திகழ்கிறது.

இருப்பிடம்: மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் உள்ள குத்தாலத்தில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவு.

குத்தாலத்தில் இருந்து பந்தநல்லூர் வழியாக திருமணஞ்சேரி செல்லும் சாலையில், முதலில் மேலதிருமணஞ்சேரி என்ற இந்தத் தலமும், பின்னர் இதே சாலையில் சிறிது தொலைவு சென்றால் திருமணஞ்சேரியும் வரும். மயிலாடுதுறையில் இருந்து திருமணஞ்சேரி செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

திருவிழா: சித்திரை இந்திர விழா, கார்த்திகை சோமவாரம், மார்கழி திருவாதிரை

தரிசன நேரம்: காலை 7 -11 வரை, மாலை 5- 8 வரை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.