

மேகாலயாவில் நார்டியாங் கிராமத்தில் அமைந்துள்ளது ஜெயந்தேஸ்வரி தேவியின் ஆலயம். சக்தி பீட வரிசையில் 34வது பீடமாக விளங்கும் இது, அன்னையின் உடற்கூறுகளில் இடது கணுக்கால் விழுந்த இடமாகக் கருதப்படுகிறது.
நார்டியாங்கில் கோயில் கொண்ட நாயகியின் திருநாமம் ஜெயந்தேஸ்வரி. பைரவர் க்ரம்தீஸ்வரர். மேகாலயாவில் உள்ள ஜெயந்தியா மலை மேல் உள்ள ஒரு சிறிய கோயிலில் வன துர்கையாக காட்சியளிக்கிறாள் ஸ்ரீஜெயந்தேஸ்வரி. ஜெயந்தியா மலை, கோபில் நதிக் கரையை ஒட்டியுள்ளது.
மேகாலய தலைநகர் ஷில்லாங்கிலிருந்து 65 கி.மீ. தொலைவில் உள்ளது நார்டியாங் கிராமம். இங்குள்ள ஜெயந்தியா மலைப் பிரதேசத்தை ஆண்ட அரசர்கள் ஜெயந்தியா வம்சத்தினர் என்றே அழைக்கப்பட்டனர். தற்போது கிராமமாகத் தோற்றமளிக்கும் நார்டியாங், மன்னர்கள் காலத்தில் கோடைக் காலத் தலைநகராக இருந்ததாம்.
கூச்பிஹார் மன்னன் லட்சுமி நாராயணன் மகளை, ஜெயந்தியா நாட்டு ராஜகுமாரன் திருமணம் செய்து கொண்டபோது அவனுக்கு வந்த சீர்வரிசையில் ஒரு துர்கை விக்ரகமும் இருந்ததாம். அந்த விக்ரகம் ஜெயந்தேஸ்வரி என்று அழைக்கப்பட்டது. ஜெயந்திய மலை துர்கை கோயில் அந்தக் காலத்தில் மிகப் புகழ் பெற்று விளங்கியது. இந்தக் கோயிலில் நவராத்திரி திருவிழாவை, அங்குள்ள மலைவாசி மக்கள் திரளாகக் கூடி பெரும்விழாவாக நடத்துகின்றனர்.
துர்கைக் கோயில் கருவறையில் ஒரு சுரங்கம் உள்ளது. பழங்காலத்தில் சிலரால் இந்தக் கருவறையில் நரபலி நடைபெற்றதாம். வெட்டப்பட்ட சிரம் சுரங்கத்தில் விழுந்து, உருண்டு பின்னர் மலை அடிவாரத்திலுள்ள கோபில் நதியில் வந்து விழுமாம். தற்போது, ஆட்டுக் கிடாக்களின் வெட்டப்பட்ட தலைகள் சுரங்கத்தில் வீழ்ந்து நதியை அடைகின்றதாம். இக்கோயிலுக்கு அருகில் பைரவர் திருப்பீடம் அமைந்துள்ளது.
இங்கே அன்னையை வனதுர்கை, சூலினி துர்கை, ஜாதவேதோ துர்கை, சாந்தி துர்கை, சபரி துர்கை, ஜ்வால துர்கை, லவண துர்கை, தீப துர்கை, ஆஸýரி துர்கை ஆகிய திருநாமங்களால் அழைக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.