கர்நாடகம், மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்கோட்டை என்ற சிற்றூருக்குப் பெரிய பெருமை உண்டு. திருநாராயணபுரம் என்றும் அழைக்கப்படும் இங்கே கருவறையில் மூலமூர்த்தியாக திருநாராயணன் சங்கு சக்ரத்துடன் சதுர்புஜம், அபயஹஸ்தம், தண்டாயுதம்(கதை), ரத்னம் இழைத்த தங்கக்கிரீடம், பூணூல், நாகாபரணம் முதலிய திவ்ய அலங்காரத்துடன் சேவை சாதிக்கிறார். தாயார் யதுகிரிநாச்சியார். ஆழ்வார் ஆசார்யர்களுக்கு தனி சந்நிதிகள் உள்ளன. இது ராமானுஜரின் அபிமானத் தலம், நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் செல்வநாராயணன், திருநாரணன், வண்புகழ் நாரணன், வாழ்புகழ்நாரணன் என்று நான்கு திருநாமங்களையும் அனுபவிக்கலாம். இவை எல்லாம் இந்தப் பெருமானுக்கே உரிய திருநாமங்கள்.