பிரயாகை லலிதா

அலகாபாத் என்று அழைக்கப்படும் பிரயாகையில் அமைந்துள்ளது லலிதா தேவியின் ஆலயம்.
பிரயாகை லலிதா
Updated on
1 min read

அலகாபாத் என்று அழைக்கப்படும் பிரயாகையில் அமைந்துள்ளது லலிதா தேவியின் ஆலயம். 51 சக்தி பீடங்களில் 28வது பீடமாக விளங்கும் இது, அன்னையின் உடற்கூறுகளில் வலது கை விரல்கள் விழுந்த இடமாகக் கருதப்படுகின்றது. பிரயாகையில் வீற்றிருக்கும் அன்னையின் திருநாமம் லலிதா. úக்ஷத்ரபாலகர் பவபைரவர் என்ற திருநாமத்துடன் அருள் பாலிக்கிறார்.

இந்தத் தலத்தின் புராணங்களில் ஒன்று இது. சமுத்திர ராஜனின் மகன் சங்கன், சிறு பிள்ளை. ஒரு முறை வேத ரிக்குகளை (வேத ஸ்லோகங்கள்) வைத்து விளையாடிய அவன், அதை மறைத்து வைத்துவிட்டான். வேத ரிக்குகள் காணாமல் போயின. அதனால் பூஜைகளும் நியமங்களும் தடைபட்டன. எனவே தேவர்கள் வேத ரிக்குகளைத் தேடி அலைந்தனர். கடைசியில் அவற்றை யாரோ திருடிவிட்டதாக முடிவு செய்து விஷ்ணுவிடம் முறையிட்டனர்.

இது சங்கனின் வேலை என்பதை உணர்ந்த விஷ்ணு, தானும் ஒரு குழந்தையாக மாறி அவனிடம் விளையாடி, வேத ரிக்குகளைப் பற்றி விசாரித்தார். சங்கன், தான் மறைத்து வைத்த இடத்திலிருந்து ரிக்குகளை எடுத்துக் கொடுத்தான். "இனி நான் உங்கள் கரத்திலேயே இருப்பேன்' என்று அடம்பிடித்த சங்கன், திருமாலின் கரத்தில் ஏறினான். வேத ரிக்குகளை பெற்றுத் தந்த மகாவிஷ்ணுவுக்குத் தங்கள் நன்றியைத் தெரிவிக்க பெரும் விழா எடுத்தனர் தேவர்கள். இதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த இடமே பிரயாகை. இந்த இடம் தீர்த்த ராஜன் எனப்படுகிறது.

பிரயாகையை, வேள்விகளின் அரசன் என்றும் கூறுவர். ஒருமுறை பிரம்மதேவன் ஜீவராசிகளின் ஜனன மரணப் பிணைப்பை அறுக்கும் பொருட்டு கர்மபூமியான பாரதத்தில் பெரும் வேள்வி ஒன்றை மேற்கொண்டான். இதைத் தொடர்ந்து மேலும் பல வேள்விகளை அங்கு நடத்திய பிரம்மன், அனைத்துக்கும் உயர்வான அசுவமேத யாகமும் செய்தான். அத்தகு பெருமை வாய்ந்த இடமே பிரயாகை. இவ்வாறு பல்வேறு வரலாற்றுக் கதைகளைக் கொண்ட இப்பூவுலகில்தான் அன்னையின் வலது கையின் விரல்கள் விழுந்ததாகக் கருதப்படுகிறது. சக்தி பீடங்களாகக் கருதப்படும் இரண்டு தேவி ஆலயங்கள் பிரயாகையில் உள்ளன. ஒன்று தாராகஞ்சை அடுத்துள்ள அலோபிபாஹில் உள்ள அலோபி மாதா கோயில். இந்த தேவியின் உக்கிரத்தைத் தணிக்க சதுரமான குண்டம் ஒன்றின் அடியில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

மற்றொரு தேவி ஆலயம் மீராபூர் பகுதியில் உள்ளது. இந்த தேவியின் பெயர் லலிதா. இவருடன் லக்ஷ்மியும் சரஸ்வதியும் கருவறையில் தரிசனம் அளிக்கிறார்கள். பிரயாகையில் பீடேஸ்வரியான லலிதாம்பிகைக்குக் கோயில் கிடையாது. எனவே மீராபூர் லலிதாம்பாளை தரிசித்தால் அளவற்ற பேறுகளை அடையலாம். மேலும், திரிவேணி சங்கமத்தில் நீராடி நற்பயனையும் பெறலாம். திரிவேணியில் புனித நீராட ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கில் பக்தர்கள் இங்கே வருகின்றனர். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிரயாகையில் நடைபெறும் கும்பமேளா உலகப் புகழ் பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com