

ஒரிசா மாநிலத்தின், ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ளது ஸ்ரீவிரஜா தேவியின் ஆலயம். 51 சக்தி பீடங்களில், 31வது பீடமாக விளங்கும் இது, அன்னையின் உடற்கூறுகளில் நிதம்பம் (இடுப்பு பின்பகுதி) விழுந்த இடமாகக் கருதப்படுகிறது.
ஒரிசா மாநிலத்தின் கலைக்கூடம் என புகழப்படும் ஜாஜ்பூரில் கோயில் கொண்டிருக்கும் அன்னை காளி, விரஜா அல்லது கிரிஜா எனவும், இறைவன் அஸிதங்கர் என்ற திருநாமத்துடனும் சேவை சாதிக்கின்றனர். மகிஷாசுரமர்த்தினியாகத் தோற்றமளிக்கிறாள் அன்னை. விரஜா என்றால் பாவமற்றவள், ரஜோ குணம் இல்லாதவள் என்று பொருள்.
முன்னொரு காலத்தில் தனு என்ற அரசன் இருந்தான். அவனுக்கு ரம்பன், கரம்பன் என இரு புதல்வர்கள். ரம்பனும் கரம்பனும் நன்மக்களைப் பெற, கானகம் சென்று தவம் புரிந்தனர். பஞ்சநதம் எனும் புண்ணிய நதியில் இடுப்பளவு நீரில் நின்று கரம்பன் பல்லாண்டு தவம் புரிந்தான். ரம்பன் அதன் கரையில் ஆல மர நிழலில் தவம் புரிந்தான். இவர்களது தவத்தால் கலக்கமடைந்த இந்திரன், முதலை வடிவில் சென்று கரம்பனின் காலைப் பிடித்து இழுத்து நீரில் மூழ்கடித்துக் கொன்றான். இதனால் மனம் வருந்திய ரம்பன், தன் சிரத்தை அறுத்து ஹோமத்தில் போட முயன்றான். அப்போது அக்னி தேவன் அவன் முன் தோன்றி, அவனைத் தடுத்து, அவன் விரும்பிய வரமளித்து மறைந்தான்.
இதன் பின் ரம்பன் காட்டுக்குள் சென்று, ஒரு பெண் எருமையுடன் கூடினான். பின்னர் விதிவசத்தால் அவன் இறந்தான். அவனது உடல் தீ மூட்டி எரிக்கப்பட்டது. அந்தப் பெண் எருமையோ அக்னியில் பாய்ந்து உயிர் விட்டது. அப்போது ரம்பனின் புதல்வன் எருமைத் தலையும், மனித உடலும் கொண்டவனாக அக்னியிலிருந்து வெளிப்பட்டான். பயங்கர உரு கொண்ட அவன், மகிஷன் என்ற பெயருடன் முடி சூடினான்.
பின்னர் மகிஷன் மேரு மலையை அடைந்து பிரம்மனை எண்ணி தவம் புரிந்தான். மகிழ்ந்த பிரம்மா, மகிஷனுக்கு தரிசனமளித்து, வேண்டும் வரம் கேட்கச் சொன்னார். மகிஷனோ சாகா வரம் வேண்டினான். அதற்கு மறுத்த பிரம்மதேவன், ""ஒரு பெண்ணால் மட்டுமே உன் மரணம் நிகழும்'' என்று வரமளித்தார். ஒரு பெண் நம்மைக் கொல்வதாவது என்ற மமதையில், கொடூரமாக நடந்து கொண்டான் மகிஷன்.
மகிஷனுக்கு பயந்து தேவர்கள் குகைகளில் பதுங்கினர். பின்னர் அனைவரும் ஒன்றுகூடி கயிலைநாதனைத் தஞ்சம் புகுந்தனர். அவர்களைக் காப்பதாய்ச் சொன்ன மும்மூர்த்திகளிடம் இருந்தும் ஒளிக் கதிர்கள் வெளிப்பட்டு சக்தி உருக் கொண்டது.
பதினெட்டு திருக்கரங்களுடன் பராசக்தியாக உருப்பெற்றாள் தேவி. தேவியின் அழகு குறித்துக் கேள்விப்பட்ட மகிஷன், அவள் மீது மையல் கொண்டு மணக்கத் தூது விட்டான். அதை ஏற்க மறுத்த அன்னையிடம் யுத்தம் புரிய முன்வந்தான். போரில் ஈடுபட்ட மகிஷன், இறுதியில் தேவியிடம் தோற்று தன் சுயஉருவான எருமை வடிவம் பெற்றான். தேவி திரிசூலத்தைச் சுழற்றி மகிஷனின் தலையைத் துண்டித்தாள். இதனால் ஆனந்தமடைந்த தேவர்கள் அன்னைக்கு மகிஷாசுரமர்த்தினி என திருநாமம் சூட்டி வணங்கினர்.
சக்திமிகு அன்னை மகிஷாசுரமர்த்தினியே இங்கே விரஜா, காளி என்ற திருநாமங்களுடன் எழுந்தருளியுள்ளாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.