டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

காக்கும் தெய்வம் பொற்பனை முனீஸ்வரர்!

புதுக்கோட்டைக்கு கிழக்கே சுமார் 6 கிமீ தொலைவில் பொற்பனைக்கோட்டை பகுதியில் அமைந்துள்ளது

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:33 am

ஆா்.மோகன்ராம்

புதுக்கோட்டைக்கு கிழக்கே சுமார் 6 கிமீ தொலைவில் பொற்பனைக்கோட்டை பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு பொற்பனை முனீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயம் குறித்து கர்ணபரம்பரை கதையாக கூறப்படும் சில சம்பவங்கள் உள்ளன. தங்கப் பனை மரக்கோட்டை என்ற தெய்வம் குடிகொண்டுள்ள இந்த ஆலயம் உருவான கதை இது:

இந்தப் பகுதியைச் சேர்ந்த சிவபக்தர் புஷ்பதத்தன் தவ வாழ்க்கை மேற்கொண்டு சிவபெருமானின் அருள் வேண்டி கடும் தவம் புரிந்தார். அப்போது, அவருக்கு காட்சியளித்த சிவபெருமானிடம், நான் நினைத்தது கைகூட வேண்டும். தவத்தின் வலிமையால் மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்ய வேண்டும், பிணியால் வாடும் மக்களின் பிணி தீர்க்க வேண்டும் என கூறினார்.

அதற்கு சிவபெருமான், 108 ஆண்டுகள் கடும் தவம் புரிய வேண்டும், உன்னால் முடியுமா என்றார். நிச்சயமாக முடியும் எனக் கூறிய புஷ்பதத்தன், வனப் பகுதியில் நீராவிக் குளக்கரையில் உள்ள வேப்பமரத்தடியில் தவத்தை தொடங்கினார். மழை, வெயில், இரவு, பகல் என 108 ஆண்டுகளை நிறைவு செய்தார்.

இதையடுத்து, பார்வதிதேவி சிவபெருமானிடம், உங்களை நினைத்து ஒரு பக்தன் நீங்கள் சொன்னபடி கடும்தவம் புரிகிறார். அவரை இன்னும் சோதிக்கலாமா எனக் கேட்கிறார்.

அதற்கு சிவனும், சரி பார்க்கலாம் எனக்கூறி புஷ்பதத்தனை காசிக்கு வருமாறு அழைத்தார். காசிக்குச்சென்ற புஷ்பதத்தனுக்கு சிவனும், பார்வதியும் காட்சியளித்தனர். தொடர்ந்து, தேவலோகத்துக்கு செல்வோம் எனக் கூறி, தங்களது ரதத்தில் புஷ்பதத்தனை ஏற்றிக் கொண்டு, ஒரு பொற்குடையை தத்தனிடம் கொடுத்து தங்கள் மீது வெயில் படாமல் பிடித்து வருமாறு பணித்தனர்.

வழியில் தத்தன் தவமிருந்த பகுதியில் சப்த கன்னியர்களை சிவபெருமான் உலவச்செய்தார். அது பார்வதியின் கண்களுக்கு புலப்படாதவாறும், புஷ்பதத்தனுக்கு மட்டும் தெரியுமாறு பார்த்துக்கொண்டார்.

அப்போது, அங்கு ஆளை மயக்கும் கன்னிப்பெண்கள் நீராடிக் கொண்டிருந்ததைப் பார்த்த புஷ்பதத்தன் மதி மயங்கி அந்த இடத்திலேயே குடையுடன் நின்றுவிட்டார்.

ரதத்தில் இருந்த பார்வதியின் மேல் வெயில்பட்டதால், குடை எங்கே, நிழல் எங்கே என்று சிவனிடம் கேட்டார். அங்கே பார் புஷ்பதத்தன் பனைமரம் போல நின்றுகொண்டிருக்கிறான் என்றார். சுயநினைவுக்கு வந்த புஷ்பதத்தனோ தனது தவறை உணர்ந்து, சிவபெருமானின் காலில் விழுந்து கதறி அழுதார். அதற்கு நீ மரமானது ஆனதுதான். ஆனால், தங்கத்தால் ஆன மரம் ஆவாய் எனக் கூறிவிட்டு, சிவனும், பார்வதியும் மறைந்தனர்.

இதைத்தொடர்ந்து, சிவனின் வாக்குப்படி புஷ்பதத்தன் தான் தவமிருந்த இடத்திலேயே பொற்பனையாக மாறினார். அங்கு வேட்டையாட வந்த வேடர்கள் பனை மரத்தில் தினமும் கீழே விழுகின்ற ஒரு தங்கப் பனம்பழத்தை எடுத்துச்சென்று அது தங்கம் என்று தெரியாமலேயே அருகிலுள்ள கலசமங்கலத்தில் இருந்த வணிகரிடம் கொடுத்தனர். வணிகனும் அவர்களிடம் தினமும் பழத்தை எடுத்து வருமாறு கூறினார். வேடர்களும் தினமும் பனம்பழத்தை அவரிடமே கொடுத்து தானியங்களை வாங்கிச்சென்றனர்.

ஆயிரக்கணக்கான பனம்பழங்கள் வணிகரிடம் சேர்ந்தன. இதையறிந்த புஷ்பதத்தன் (பொற்பனையான்) வணிகருக்கும், பக்தர்களுக்கும் தன் சக்தியை உணர்த்த நினைத்தார். அப்போது, தஞ்சையை ஆண்ட மன்னருக்கு தொழுநோய் பாதிப்பு ஏற்பட்டது. குணப்படுத்த வழியில்லாமல், ஒரு சமயம் தற்கொலை செய்துகொள்ளத் துணிந்தார்.

அந்த இரவில் உறங்கிக்கொண்டிருந்த மன்னருக்கு கனவில் சில இடங்கள் தெரிந்தன. குளக்கரை, வேப்பமரம் அந்த நிழல் விழும் பகுதியில் சிறிய குளம். அந்தக்குளத்தின் நீரை உடலில் தெளித்துக் கொண்டால் தொழுநோய் குணமாகும் என்ற அசரீரியின் ஒலிகேட்டது.

இதைத்தொடர்ந்து தனது படை பரிவாரங்களுடன் இப்பகுதியில் தேடியலைந்தபோது, அவர் கனவில் கண்ட குளமும், வேப்பமரமும் கண்ணுக்கு முன்னே தெரிந்தது. இதையடுத்து, அந்த நீராவிக்குளத்தில் இறங்கி உடல் முழுவதும் நனைய நீராடிய மன்னருக்கு தொழுநோய் முழுவதும் குணமானது.

அப்பகுதியில் தங்கிய மன்னர், அங்கு நடமாடியவர்களை அழைத்துவருமாறு வீரர்களைப் பணித்தார். அவர்கள் வேடனையும், மனைவியையும் அழைத்து வந்தனர். அவர்களிடம் இந்தக் காட்டில் எப்படி உயிர் வாழ்கிறீர்கள் என மன்னர் விசாரித்தார்.

அப்போது, அருகேயுள்ள கோயிலுக்கு படையல் போட்டு, அதை உண்டு வாழ்வதாகவும், அங்குள்ள பனைமரத்திலிருந்து நள்ளிரவில் விழும் பனம்பழத்தை வணிகரிடம் கொடுத்து, அவர் தரும் தானியங்களில் ஜீவனம் செய்வதாகவும் அவர்கள் கூறினர்.

மறுநாள் வேடன் வழக்கம் போல வணிகரிடம் பனம்பழத்தை கொடுத்து, கூடுதலாக தானியங்களை கேட்டார். அதற்கு வணிகர் கொடுக்கமுடியாது என மறுத்தார். அப்போது, மாறுவேடத்தில் மறைந்திருந்த மன்னரும், வீரர்களும் வணிகரிடம் இத்தனை நாட்கள் வாங்கிய பனம்பழங்கள் எங்கே என விசாரித்தனர்.

வந்திருப்பது மன்னர்தான் என்பதை அறிந்த வணிகர், தவறை மறைக்க வழியின்றி வீட்டின் அறைக்கு அழைத்துச் சென்று காண்பித்தார். அதை வீரர்கள் மூலம் அள்ளி வந்து எண்ணிப் பார்த்தபோது 4,420 தங்கப் பனம்பழங்கள் இருந்தன.

அவற்றை பறிமுதல் செய்த மன்னர், அதன்மூலம் திருவரங்குளம், திருவுரையார்பட்டி ஆகிய ஆலயங்களைக் கட்டும் பணிகளைத் தொடங்கினார். தொடர்ந்து, கிடைத்த பனம்பழங்களை சேமித்து வைக்க மன்னர் உத்தரவிட்டதால், அதன்மூலம் சேர்ந்த தங்கப் பனம்பழங்கள் மூலம் பின்னாளில் வந்த மன்னர்களும் கோயிலைக் கட்டிமுடித்தனர்.

இந்தத் திருவிளையாடல்களை நடத்திக்காட்டிய புஷ்ப தத்தன் (பொற்பனையான்) குடிகொண்டிருக்கும் ஆலயம்தான் பொற்பனைக்கோட்டை.

புதுக்கோட்டைக்கு காவல் அரணாக இன்றுவரை திகழ்கிறது இந்த ஆலயம். இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் முழுவதும் திருவிழா நடைபெறுகிறது. அதில், விசாக நட்சத்திர நாளில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி, மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை திருவிழா நடைபெறுகிறது. தினமும், சிறப்பு ஆராதனை, அலங்காரத்துடன் திருவிழா களைகட்டும்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி வழிபாடு நடத்துகின்றனர். மேலும், தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய பிறகு இங்கு வேல் ஊன்றுவது முக்கிய நிகழ்வாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.