ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

சிவலிங்கத்தில் விநாயகர் தரிசனம்

ஊருக்கு ஒதுக்குப்புறம்,மூன்று விழுது விழாத ஆலமரங்கள்.அதன் அருகே அமைந்திருந்தது ஒரு கோயில்.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2014, 6:34 am

இரா. இரகுநாதன்

ஊருக்கு ஒதுக்குப்புறம்,மூன்று விழுது விழாத ஆலமரங்கள்.அதன் அருகே அமைந்திருந்தது ஒரு கோயில். கோயிலின் கொடிமரத்துக்கு அருகே 3 வாகனங்கள் பிரதிஷ்டை ஆகியுள்ளன.கருவறையில் சிவலிங்க சொரூபம் தெரிகிறது.பாலபிஷேகம் ஆகும்போது விநாயகர் சிவலிங்கத்தில் தத்ரூபமாக காட்சி அளிக்கிறார்.கருவறை சிவலிங்கம் சுயம்பு!சுயம்பு லிங்கத்தில் காட்சி தரும் விநாயகர் பொய்யா மொழி விநாயகர்.பொய்யாமொழி விநாயகர் திருக்கோயில் அமைந்திருக்கும் ஊர் தீவனூர் என்பதாகும்.தீ என்றால் தானம் என்றும் பொருள் உண்டு.தீவன் என்றால் தானம் செய்பவன் ஆகும்.தீவனூர்,விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து செஞ்சி செல்லும் சாலையில் 11 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது.

கிராமங்களில் ஆடு மேய்க்கும் சிறுவர்கள் சிலர் வயலில் அறுவடை ஆனபின்பு கிடக்கும் நெல்லை பொறுக்கிவந்து கல்கொண்டு குத்தி உண்ணும் பழக்கம் நெடுங்காலமாக தமிழக நாட்டுப் புறங்களில் உண்டு.அதுபோல் சில சிறுவர்கள் நெல் பொறுக்கி வந்து ஓரிடத்தில் சேர்த்து வைத்தனர்.நெல் குத்த யானைத்தலை போன்ற கல் ஒன்று கொண்டு வந்தனர்.அது தவிர வேறு கல் இருக்குமா எனத் தேடி எடுத்து வரச் சென்றனர்.ஆனால் அவர்கள் கொண்டு வந்த யானைத் தலைக் கல்லின் அருகில் இருந்த நெல் குத்தப்பட்டு உமி பிரித்து தனி அரிசியாக வைக்கப்பட்டிருந்தது கண்டு,அது கல் இல்லை.நம்மைப் போன்ற மக்களுக்கு உதவ வந்து இருக்கும் நெல்குத்திசாமி எனப் பேசிக்கொண்டு அந்தப் பச்சரிசியை நெருப்பு மூட்டி சட்டியில் இட்டு பொரித்து அந்தக் கல்லுக்கும் படைத்துவிட்டு அவர்களும் உண்டனர்.அந்தக் கல்லை பத்திரப்படுத்திவிட்டுச் சென்றனர்.

மறுநாள் அந்தக் கல்லைக் காணவில்லை.அதேசமயம் குளத்தினுள் ஓரிடத்தில் மட்டும் நீர்க்குமிழிகள் வருவது தெரியவே அங்கு சென்று பார்த்தபோது அந்தக் கல் இருப்பது தெரியவந்தது.அதை சாமியாக பாவித்து எடுத்துச் சென்று ஒரு மரத்தோடு சேர்த்து கட்டி வைத்தனர்.அன்றிலிருந்து விவசாயிகளின் நிலங்கள் நன்கு விளைந்தன.ஆனால் அவ்வூரில் நெல்லும் திருடு போகத் துவங்கியது.பஞ்சாயத்து கூடி விவாதித்தனர்.அந்த சாமிதான் திருடியிருக்கும் என சிறுவர்கள் சொன்னதை நம்பாமல் அந்தக் கல்லை ஊர்த்தலைவர் வசம் ஒப்படைத்தனர்.

ஊர்த்தலைவர் இரவு உறங்கும்போது கனவில் தோன்றிய விநாயகர்,"நானே சுயம்புவாய் கல் வடிவில் தோன்றியுள்ளேன்;கலியுகத்தில் மக்கள் வேண்டியதை எல்லாம் அருளுவதற்காக வெளிவந்துள்ளேன்.என்னை வணங்குவதற்காக பிரும்மா,விஷ்ணு,சிவன் மூன்று தேவர்களும் விழுது விழாத ஆலமரங்களாகத் தோன்றி என்னை வணங்கினர்.அந்த மரத்துடன் என்னை உங்கள் ஊர் சிறுவர்கள் கட்டிப் போட்டதால் அவர்களால் திரும்பிச் செல்ல முடியாக நிலை ஏற்பட்டது.அதனால் இங்கேயே மரவடிவில் காட்சி தருகின்றனர்.

எனவே என்னை நான் தோன்றிய இடத்தில் நிறுவி வழிபட்டால் வழிபட்டவர்களுக்கு வேண்டியதை அருள்வேன்' என கூறினார்.அதன் அடிப்படையில் மூன்று தேவர்களும் கல் ஆல மரமாய் தோன்றிய குளக்கரையில் லிங்க வடிவான விநாயகரை நிறுவி "நெற்குத்தி விநாயகர்' என்றழைத்து வழிபட்டனர்.விநாயகர் லிங்கவடிவில் இருப்பதால் நந்தி வாகனமும் அபிஷேகத்தில் அருவமாய் தோன்றி அருளுவதால் மூஞ்சூறு வாகனமும்,கஜாநனன் என்ற பெயர் பெற்று விளங்குவதால் யானைவாகனமும் சந்நிதிக்கு எதிரில் நிறுவப்பட்டு வழிபடப்படுகிறது.இந்த லிங்க வடிவில் இருந்து தோன்றும் விநாயகர் வரப்பிரசாதி.இவர் சந்நிதியில் நின்று எவரும் பொய் சொல்லக் கூடாது.பொய் சொன்னால் சொன்னபடியே நடந்துவிடும்.ஆனால் இவர் பக்தர்களுக்கு கேட்டபடி அருளும் ஆற்றல் படைத்தவர்.

ஒருமுறை வழி நடையாக வண்டி ஒன்றில் மிளகு மூட்டைகளை ஏற்றிச் சென்ற மிளகு வியாபாரி ஒருவர்,கோயிலில் வந்துத் தங்கினார்.கோயில் ஊழியர்கள் பிள்ளையார் நிவேதனத்திற்கு மிளகு இலவசமாகத் தரும்படி கேட்க,அவனோ மூட்டையில் மிளகு இல்லை.உளுந்துதான் உள்ளது என்று பொய் சொன்னான்.சந்தையில் சென்று மிளகு மூட்டையை அவிழ்த்துக்கொட்ட அனைத்தும் உளுந்தாக உருண்டு ஓடின.உண்மையை உணர்ந்த மிளகு வியாபாரி,நெற்குத்தி விநாயகரிடம் கதறி அழுது,தான் பொய் சொன்னதை மறந்து மன்னிக்குமாறு வேண்டினான்.விநாயகரும் அவனை மன்னித்து மீண்டும் உளுந்தை மிளகாக்கினார் என்பது வரலாறு.சொன்னபடி செய்பவர் என்பதால் அதுமுதல் நெற்குத்தி விநாயகர்,பொய்யாமொழி விநாயகர் (சொன்ன சொல் தவறாதவர்)என்ற பெயர் நிலைக்கத் தொடங்கியது.

திருக்கோயில் காலை 6.00 -10.00 மணி வரையும் மதியம் 12.00 -1.00 மணி வரையும்,மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரையும் தரிசனத்திற்காகத் திறந்து இருக்கும்.

தீவனூர் செல்ல பேருந்துகள் வசதிகள் நிறையவே இருப்பதால் இவ்வாலயத்துக்கு எளிதாகச் சென்று வரலாம்.

தொடர்புக்கு:94427 80813.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.