சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தெய்வத்தின் குரல்

1958ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள், பத்தாம் நாள் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் சென்னை, குரோம்பேட்டைக்கு விஜயம் செய்தார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2014, 10:25 am

கைலாசம் சுப்ரமணியம்

"செல்வம் பெருகும் சிறந்த நலம் சேரும்

கல்வியும் கண்ணிய மும் கை கூடும் - நல்ல

குமரன் திருக் குன்றம் கூடித் தொழுதால்

அமர ரென வாழ்வார் அணிந்து''

என்று பாடுகிறார் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.

1958ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள், பத்தாம் நாள் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் சென்னை, குரோம்பேட்டைக்கு விஜயம் செய்தார். அப்போது "பங்களா மலை' (தற்சமயம் குமரன் குன்றம்) என்றழைக்கப்பட்ட குன்றினை சுட்டிக் காட்டி, "இது பிற்காலத்தில் ஸ்ரீசுப்ரமண்யஸ்வாமி சாந்நித்யம் பெற்ற பிரார்த்தனை ஸ்தலமாக விளங்கும்'' எனக்கூறி அருளாசி வழங்கினார். தெய்வத்தின் குரல் அல்லவா! அன்று அந்த மகான் கூறிய வண்ணம் இக்கோயில் பிரசித்தி பெற்றது. (9.2.2014) ஸ்ரீசுவாமிநாத ஸ்வாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்ட பந்தனமும், நூதன ஐந்து நிலை கொண்ட இராஜ கோபுரத்திற்கு கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளன.

சென்னைக்கு அருகில் குரோம்பேட்டை ரயில் நிலையத்திலிருந்தும், பேருந்து நிலையத்திலிருந்தும் 1 கி.மீ. தொலைவில் கிழக்கில் உள்ளது குமரன் குன்றம். "ஸ்ரீபாலசுப்ரமண்ய ஸ்வாமி சத்சங்கம்' என்ற அமைப்பை ஸ்ரீகாஞ்சி பெரியவர்கள் ஆசியுடன் தொடங்கி, இப்பகுதி வாழ் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் ஸ்ரீசித்தி விநாயகருக்கு மலையடிவாரத்தில் கோயில் எழுப்பினர். மலைமேல் வேல் ஒன்று கிடைத்தது. அவ்வேலை பக்தர்கள் பூஜித்தனர். பிறகு 9.2. 1979ஆம் ஆண்டு ஸ்ரீசுவாமிநாத ஸ்வாமியைப் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகத்தையும் சிறப்பாக நடத்தினர். தற்போதும் பிப்: 9ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவது சிறப்பு.

இவ்வாலயத்தில் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர், நவகிரகங்கள், இடும்பன் சந்நிதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீஜெயமங்கல தன்ம காளி, சூரியன், சந்திரன்,பைரவர், சரபேஸ்வரர், ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத நடராஜர், மாணிக்கவாசகர் முதலிய மூர்த்திகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ராஜகோபுரத்திற்கும், ஸ்ரீவிநாயகர் சந்நிதிக்கும் இடையில் கம்பீரமாக மண்டபம் ஒன்றும் எழுந்துள்ளது. இந்தப் புதிய மண்டபம் வழியாகச் சென்று மலையடிவாரத்தின் தென்புறத்தில் கிழக்கு நோக்கிய வண்ணம் தனிக்கோயிலாக அமைந்துள்ள ஸ்ரீசித்தி விநாயகர் சந்நிதியையும், வடபுறத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீவள்ளி - தேவசேனா சமேதராக ஷண்முகர் சந்நிதியையும் தரிசிக்கலாம். ஸ்ரீஷண்முகர், பெருமாளைப் போல சங்கு, சக்கரதாரியாகக் காட்சியளிப்பது சிறப்பு.

அடுத்து சிவன் கோயிலுக்குச் செல்கிறோம். ஸ்ரீசுந்தரேஸ்வரர் ஆவுடையார் மேல் பாணலிங்கமாக காட்சி தருகிறார். சிவன் சந்நிதியை அடுத்து ஸ்ரீமீனாட்சி அம்மன் சந்நிதி உள்ளது. அம்பிகையின் கருவறையைச் சுற்றி தெற்கில் மாகேஸ்வரியும், மேற்கில் வைஷ்ணவியும், வடக்கில் பிராம்ஹியும் கோஷ்ட மூர்த்திகளாக உள்ளனர். இங்குள்ள மற்றொரு தெய்வம் ஸ்ரீசிவகாமி அம்மை சமேத ஸ்ரீநடராஜர். தெற்கு நோக்கிய தனி சந்நிதி. மதுரை வெள்ளியம்பலத்தில் உள்ளது போல் கால் மாறியாடுவது இவரது தனிச் சிறப்பு.

கருவறையில் ஸ்ரீமுருகப் பெருமான் ஸ்ரீசுவாமிநாத ஸ்வாமி என்ற திருப்பெயருடன் வடக்கு நோக்கிய வண்ணம் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். வலது திருக்கரத்தில் தண்டம் தாங்கியும், இடது திருக்கரத்தில் இடது தொடையைத் தொட்ட வண்ணமும், ஊர்த்துவ சிகை மேல் நோக்கியும் பூணூல் கௌபீனம் தரித்தும் கம்பீரமாக புன்முறுவலுடன் அடியார்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இந்நிலையில் பிப்: 9ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் ஸ்ரீசித்தி விநாயகர், ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர், ஸ்ரீசுவாமிநாத ஸ்வாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், நூதன இராஜ கோபுரத்திற்கும் திருக்குடமுழுக்கு பெருவிழா நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.