உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

சிவராத்திரி கதைகள்

நமது புராணங்களில் சிவராத்திரியைப் பற்றிப் பல கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

News image
Updated On :19 பிப்ரவரி 2014, 11:27 am

மயிலை சிவா

நமது புராணங்களில் சிவராத்திரியைப் பற்றிப் பல கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஒரு யுக முடிவில் மகாப்பிரளயம் ஏற்பட சகல ஜீவ ராசிகளும் சிவனிடம் ஒடுங்கின. அண்டங்கள் அனைத்தும் சிறிது அசைவு கூடக் கிடையாது. அப்படியே சகலமும் ஸ்தம்பித்து நின்றன. உயிர்களிடம் பேரன்பு கொண்ட அன்னை பார்வதி அசையா நின்ற அண்டங்கள் அசையவும், மீண்டும் உயிர்கள் இயங்கவும் வேண்டி நான்கு ஜாமங்களிலும் சிவனைக் குறித்துத் தவம் செய்தாள். அம்பிகையின் தவத்துக்கு இறங்கி சிவபெருமான் தன்னிடம் ஒடுங்கியிருந்த சகல உலகங்களையும் மீண்டும் படைத்து உயிர்களையும் படைத்தருளினார். பார்வதி தேவி சிவபெருமானைப் பார்த்து, ""பிரபோ. அடியேன் உங்களைப் போற்றிப் பலனடைந்த இந்த நாள் "சிவராத்திரி' என்ற பெயர் பெற்று விளங்கி, நிறைவில் முக்தி அடைய வேண்டும்'' என்று வேண்டுகிறார். சிவபெருமானும் அப்படியே நடக்கட்டும் என்று வரம் அருளுகிறார். அந்தத் திருநாளே மகா சிவராத்திரி நாளாகும்.

இன்னொரு கதை: பாற்கடலைக் கடைந்தபோது முதலில் விஷம்தான் வெளிப்பட்டது. இதைக் கண்ட தேவர்கள் அமுதம் கிடைக்கும் என்று கஷ்டப்பட்டுக் கடைந்தால் விஷமல்லவா வருகிறது என்று பயந்து ஓடினார்கள். சிவனிடம் சரணடைந்தார்கள். சிவபெருமானும் "நஞ்சைக் கண்டு அஞ்சாதீர்' என்று அபயமளித்து அந்த நஞ்சினைத்தான் உண்டு தேவர்களைக் காத்தார். தேவர்களும், சிவன் அருந்திய விஷத்தால் அவர் பாதிப்புக்கு ஆளாகி விடக்கூடாதே என்ற எண்ணத்தில் இரவு முழுவதும் பூசித்தார்கள். தேவர்களைக் காக்க சிவபெருமான் விஷம் உண்ட அந்தத் தியாகத் திருநாளே மகா சிவராத்திரி நாளாகும் என்றும் கூறுவர்.

மற்றொரு கதை: கயிலாயத்தில் அன்னைப் பார்வதிக்கு ஒரு நாள் ஏதோ விளையாட்டு புத்தி. பின்பக்கமாக வந்து சிவனின் கண்களைப் பொத்தினார். அவ்வளவுதான். சகல புவனங்களும் ஒளியிழந்து இருள் சூழ்ந்தது. அம்பிகை திடுக்கிட்டுத் தன் பிழையை உணர்ந்து சிவனைப் பிரிந்து பூலோகம் வருகிறார். தன் பிழைக்குப் பிராயச்சித்தமாக காஞ்சிபுரம் கம்ப நதிக்கரையில் மணலால் சிவலிங்கம் உண்டாக்கி பூஜை செய்கிறார். திடீரென்று கம்பா நதியில் வெள்ளம் வர, மணல் லிங்கம் கரைந்து விடுமே என்று அஞ்சி அப்படியே சிவலிங்கத்தை ஆரத் தழுவிக் கொள்கிறாள். அன்னையின் தவத்தை மெச்சிய சிவன் ஏகாம்பரநாதராக அம்பிகையை (இங்கே காமாட்சி என்று பெயர்) மாமரத்தடியில் மணம் புரிந்து கொள்கிறார். அந்தத் திருநாளே சங்கரனைக் கொண்டாடும் சிவராத்திரி என்பார்கள்.

இன்னொரு கதையிலும் பார்வதி தேவி இப்படி சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடுகிறார். எங்கிலும் இருள் சூழ்ந்தது. உயிர்கள் அனைத்தும் வாட்டமுறுகின்றன. ஒளி இல்லாவிட்டால் உயிர்கள் பிழைப்பதும் தழைப்பதும் எப்படி? தேவி தன் கைகளைக் கண்களிலிருந்து அகற்றுகிறார். சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து பேரொளி .... ஆனால் அது நெருப்பைக் கக்கும் ஒளியல்லவா? தேவி அதைக் குளிர் ஒளியாக மாற்றி உயிர்களை உய்விக்க சிவனை வேண்டுகிறார். சிவனும் அப்படியே அருள் பாலிக்கிறார். இந்த நாளே சிவராத்திரித் திருநாளாகும் என்பர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.