/

திருவையாற்றில் திருக்கயிலாயம்!

தனது முதுமை காலத்திலும் தலங்கள்தோறும் யாத்திரை மேற்கொண்டும், சிவாலயங்களில் உழவாரப்பணியும்

News image
Updated On :25 ஜூலை 2014, 7:03 am

எஸ். வெட்கட்ராமன்

தனது முதுமை காலத்திலும் தலங்கள்தோறும் யாத்திரை மேற்கொண்டும், சிவாலயங்களில் உழவாரப்பணியும் மேற்கொண்டிருந்த சைவ சமய குரவரான திருநாவுக்கரசருக்கு ஒருசமயம் கயிலையைக் காணவேண்டும் என்று விருப்பம் உண்டாயிற்று. அச்சமயம் திருக்காளத்தியில் இருந்த அவர், அங்கிருந்து புறப்பட்டார். பல ஊர்களின் வழியே வாரணாசி சென்றடைந்தார். உடன் வந்தவர்களை அங்கு இருக்கச் செய்துவிட்டுக் கயிலை நோக்கிப் புறப்பட்டார். நெடிய பயணத்தில் கால்களும் கைகளும் தேய்ந்தன. மார்பால் உந்திப் புரண்டு சென்றார். இறைவன் முனிவர் கோலத்தோடு தோன்றி ""உறுப்புகள் அழிய என்ன கருதிச் செல்கின்றீர்'' என வினவினார். கயிலைக் காணச்செல்வதாகக் கூறினார். "மனிதர்களால் கயிலையை அடைவது கடினம்'' என்றார்.

"ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்'' என மறுத்தார். முனிவராய் வந்த இறைவன், "நாவினுக்கரசே எழுந்திரும்' என்றதும், தேய்ந்த உடலுறுப்புகள் முன்போல் ஆயின. ""என்னை ஆட்கொண்டு அருளிய அண்ணல் கயிலையில் வீற்றிருந்த கோலத்தைக் கண்டு தொழுவதற்கு அருள்புரிவாயாக'' என்றார். இறைவன் ஆகாயத்தில் தோன்றி ""இப்பொய்கையில் மூழ்கித் திருவையாற்றில் கயிலைக் காட்சியைக் காண்பாயாக'' எனப்பணித்தார். அவ்வாறே திருநாவுக்கரசர் அங்குள்ள பொய்கையில் மூழ்கி, "வேற்றாகி விண்ணாகி' எனத் தொடங்கும் போற்றித் திருத்தாண்டகத்தைப் பாடியபடியே திருவையாற்றில் எழுந்து கயிலைக் காட்சியை கண்டார்.

யாதும் சுவடுபடாமல் ஐயாற்றுப் பொய்கையில் எழுந்த அவருக்கு, அங்குள்ள அனைத்தும் அம்மையப்பராகக் காட்சி அளித்தன. கயிலைக் காட்சியிலேயே திளைத்த நிலையில் திருவையாற்றில் "பொறையுடைய பூமி நீரானாய்' என்ற தாண்டகத்தையும், பாட்டான நல்ல தொடையாய் என்ற தாண்டகத்தையும் அருளினார்.

அப்பர் பெருமானுக்கு இறைவன் கயிலைக் காட்சி நல்கியது ஓர் ஆடி அமாவாசை நன்னாளாகும். ஐயாற்றுப் பெருமான் திருவருளாலும், தருமை ஆதீனம் 26 வது குருமகா சன்னிதானம் குருவருளாலும் இவ்வாண்டு இவ்வைபவம் ஜூலை 26 ஆம் தேதி சனிக்கிழமை திருவையாறு திருத்தலத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது. அன்று மதியம் 12 மணி அளவில் காவிரிக் கரையில், "அஸ்ரதேவர்' உற்சவ மூர்த்திக்குத் தீர்த்தவாரி நடைபெற்று, தொடர்ந்து மேட்டுத் தெருவில் அபீஷ்ட வரத மகாகணபதி ஆலயத்திற்கு எதிரில் உள்ள பஞ்சமூர்த்திகள் முன் உப்பங்கோட்டை என அழைக்கப்படும் திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். அப்போது, அப்பர் பெருமானின் உற்சவ திருமேனி குளத்தில் முக்கி எடுக்கப்படும். அதாவது வடக்கில் ஒரு பொய்கையில் மூழ்கிய திருநாவுக்கரசர் திருவையாற்றில் திருக்குளத்தில் எழுந்து வருவதாக

ஐதீகம். பஞ்சமூர்த்திகளுக்கும் தீபாரதûû வைபவங்கள் நடைபெறும். இரவு தென்கயிலாயத்தில் ஆயிரக்கணக்கில் ஓதுவார் பெருமக்களும் இசைக்கலைஞர்களும் பங்கேற்க தேவார இன்னிசை முழக்கத்துடன் அப்பர் பெருமான் உற்சவருக்கு விசேஷ அலங்காரங்களுடன் காட்சி தருவார்கள். தொடர்ந்து மாட வீதிகளில் 63 நாயன்மார்களும், அப்பர் பெருமானும், பஞ்சமூர்த்திகளும், ஆடிப்பூர நாயகியும் பவனிவர வேதகோஷங்கள், திருமுறை தேவார இன்னிசையுடன் வீதியுலா விடியவிடிய நடைபெறும். இவ்வைபவங்களைக் காண கண்கோடி வேண்டும். நாம் அனைவரும் கயிலை யாத்திரை மேற்கொள்வது என்பது கடினம். எனவே ஆடி அமாவாசையன்று திருவையாறு சென்று கயிலாய யாத்திரை பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த வைபவங்களை கண்ணாரக் காணலாம்.

தொடர்புக்கு: 04362 - 260332.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.