/

தரங்கிணி தந்த தயாபரர்

ஆந்திரத்தில் பிறந்து தமிழ்நாட்டில் வாழ்ந்து பக்தி நெறியைப் பரப்பிய மகான்களில் ஒருவர் நாராயண தீர்த்தர்.

News image
Updated On :6 மார்ச் 2014, 10:36 am

எஸ். வெட்கட்ராமன்

ஆந்திரத்தில் பிறந்து தமிழ்நாட்டில் வாழ்ந்து பக்தி நெறியைப் பரப்பிய மகான்களில் ஒருவர் நாராயண தீர்த்தர். மதுரநாயகனான கோபாலனின் ஜனனம் முதல் ருக்மணி கல்யாணம் வரை நிகழ்ந்த லீலா விநோதங்களை "கிருஷ்ண லீலா தரங்கிணி'' என்ற பெயரில் வடமொழியில் இசை நாடகமாக அளித்தவர். இவருடைய பக்திக்கு வசமாகி, பாலகோபாலனே இவர் பாட்டிற்கு நடனமாடி இவர் மகிமையை யாவரும் உணரச் செய்தான் என்பார்கள். இம்மகான் பஜனை சம்பிரதாயங்களுக்கும் பாகவத மேளா நாட்டிய நாடகங்களுக்கும் வழிவகுத்துக் கொடுத்துள்ளார்.

தரங்கிணி இடம்பெறாத கர்நாடக இசைக் கச்சேரிகள் முழுமை அடைவதில்லை என்று சொல்லும் அளவிற்கு அவரது கீர்த்தனைகள் பிரபலமானவை. கிருஷ்ண லீலா தரங்கிணியைத் தவிர இன்னும் பல பக்தி நூல்களையும் இயற்றியுள்ளார். சங்கீதத்திலும், நாட்டியத்திலும் நிகரற்ற புலமை உடையவராக இவர் திகழ்ந்தார் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

ஸ்ரீநாராயண தீர்த்தரின் 268வது ஆண்டு ஆராதனை விழா திருப்பூந்துருத்தியில் மார்ச் 6முதல் மார்ச் 8 வரை நாமசங்கீர்த்தனம் கருத்தரங்கம் மற்றும் பிரபல வித்வான்கள் பங்கேற்கும் இன்னிசைக் கச்சேரிகளுடன் நடைபெறுகிறது. மார்ச் 8ஆம் தேதி சனிக்கிழமை சுக்ல அஷ்டமி திதி மகானுடைய ஆராதனை நாள். அன்று காலை ஆராதனை குழுவினர் ஆதரவுடன் தரங்கவித்யாசாலா ஆசிரியர், மாணவ - மாணவிகள் தரங்க கானம் பாடி மகானுக்கு இசை அஞ்சலி செலுத்துகிறார்கள்.

அமைவிடம்: தஞ்சாவூர் - திருவையாறு சாலையில் கண்டியூரிலிருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவில் உள்ளது திருப்பூந்துருத்தி.

தகவலுக்கு 99440 82946.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.