தஞ்சை பெரிய கோயிலில் ருத்ரபாத தரிசனம்!
இறைவனின் திருவடியைத் தொழுதல் என்பது இந்து சமயம் கடைபிடிக்கும் முக்கியமான சம்பிரதாயமாகும்.


இறைவனின் திருவடியைத் தொழுதல் என்பது இந்து சமயம் கடைபிடிக்கும் முக்கியமான சம்பிரதாயமாகும். சைவ சமயங்களில் திருவடிச் சேவைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வைணவத்திலும், இறைவனை எழுந்தருள்வித்து தோளில் சுமந்து வருவோரை, "ஸ்ரீ பாதம் தாங்கிகள்' என்பர். வைணவ ஆலயங்களில் "சடாரி சேவை' என்பது தொன்றுதொட்டு வரும் மரபாகும். இறைவனுக்குச் செய்யும் சேவைகளில் திருவடிச் சேவையே பெரிதாகப் போற்றப்பட்டுள்ளது.
தஞ்சையை ஆண்ட ராஜ ராஜ சோழன், தன் பெயரை "சிவபாத சேகரன்' (சிவனின் பாதத்தை சிரசில் ஏந்தியவன்) என்ற பட்டப் பெயரை பூண்டவன். அவனது காலத்தில் தஞ்சாவூர் பெரிய கோயிலும், சைவமும் செழித்து வளர்ந்தன. தஞ்சை பெரிய கோயிலில் நித்திய பூஜைகளுடன் வார, மாத, வருட திருவிழாக்களை ஏற்படுத்தி அவைகள் சிறப்பாக நடைபெறுகிறதா என்பதைத் தகுந்த நபர்களைக் கொண்டு கண்காணித்து வந்ததுள்ளதை கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தஞ்சை பெரிய கோயிலில் நடைபெறும் சித்திரை பிரம்மோற்சவ பெருவிழா, 18 நாட்களுக்கு மிகப் பிரமாண்டமாக நடைபெறும் பெரிய விழாவாகும். இத்திருவிழாவில் எங்கும் இல்லாத சிறப்பாக, கொடியேற்றத்திற்கு முன்பே பிட்சாண்டேஸ்வரர் புறப்பாடு நிகழ்வுறும். விழா நாட்களில் தமிழ்மொழி சிறக்க உதவிய சைவ சமயாச்சாரியார்கள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்குத் தரிசனம் அருளுவர்.
இவ்விழாவில், "அஷ்டத்துவஜாரோகணம்' என்ற எட்டு கொடிகள் ஏற்றும் நிகழ்வு தஞ்சை பெரிய கோயில் திருவிழாவில் மட்டுமே காணக்கூடிய ஒன்றாகும். இது, ஸ்ரீதியாகராஜர் என்னும் சோமாஸ்கந்த மூர்த்தி புறப்பாட்டினை ஒட்டி நடைபெறுகின்றது.
உற்சவ நாட்களில், 18 ஆம் நாள் காலை ஸ்ரீதியாகராஜர் ருத்திரபாத தரிசனத்துடன் புறப்பாடு நடைபெறுகின்றது. அனைத்து உயிர்களுக்கும் முக்திபேறு அளிக்கத்தக்க "ருத்ரபாத தரிசன சேவை' வருடத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே காணப்பெறலாம். இந்தத் தரிசனம் மறுபிறவியை அறுக்கும் தன்மை உடையது என்பது அடியார்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
மே 12 ஆம் தேதியன்று 18 ஆம் நாள் திருவிழாவாகும். இதில்,
ஸ்ரீதியாகராஜரின் ருத்ரபாத தரிசனமும் ஸ்ரீநடராஜரின் நான்கு ராஜ வீதி புறப்பாடும், யதாஸ்தான பிரவேசமும் நடைபெறுகின்றது. பின்னர், பஞ்ச மூர்த்திகள் புறப்பாட்டுடன் திருவிழா இனிதாக முடிவடைகிறது.
தொடர்புக்கு: 04362 274476 / 04362 223384.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...