இறையனார் அகப்பொருள் வந்த வரலாறு!
மதுரை மாநகரை வம்ச சூடாமணி என்னும் பாண்டிய மன்னன் அரசாண்டு வந்த காலத்தில், கிரக நிலை மாற்றத்தால் மழையின்றி,


மதுரை மாநகரை வம்ச சூடாமணி என்னும் பாண்டிய மன்னன் அரசாண்டு வந்த காலத்தில், கிரக நிலை மாற்றத்தால் மழையின்றி, பெரும் பஞ்சம் மக்களை வாட்டியது. பசியால் வருந்திய தமிழ்ப் புலவர்கள் பாண்டியர்களைத் தஞ்சம் புகுந்தனர். பாண்டிய மன்னனும் அவர்களை அன்புடன் உபசரித்து உணவிட்டு ஓய்வான நேரங்களில் பழந்தமிழ் இலக்கியங்களை ஆராய அன்புக் கட்டளையிட்டான். புலவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அதேநேரத்தில் ஒரு சோகம்! அப்போது ஐந்து இலக்கணங்களில் எழுத்து, சொல், யாப்பு, அணி இவை இருந்தனவே தவிர முக்கியமான பொருள் இலக்கணம் சிதைந்து மறைந்தே விட்டது! இதைச் சுட்டிக் காட்டிய புலவர்கள் பொருள் இலக்கணமின்றி நூல்கள் ஆய்வது இயலாது என்று பாண்டியனிடம் கூறினார்கள்.
பாண்டிய மன்னன் சோமசுந்தரப் பெருமானை அனுதினமும் எண்ணற்ற செண்பக மலர்களால் அர்சித்து வணங்குபவன். இதனால் செண்பகப் பாண்டியன் என்ற பெயரும் பெற்றவன். அன்று பூசையின் போது, ஆலவாய் அழகன் முன் விழுந்து வணங்கி, ""தமிழ் தழைக்க அருள்புரிவீர்'' என்று கண்களில் கண்ணீர் மல்க வேண்டினான். பக்தர் கருத்து அறிந்து அருளும் சொக்கலிங்கப் பெருமான், உடனே அறுபது சூத்திரங்கள் அடங்கிய "இறையனார் அகப்பொருள்' என்ற நூலை அருளிச் செய்து பீடத்தின் கீழ் வைத்தார்.
மறுநாள் காலை அர்ச்சகர் அந்த நூலைக் கண்டு அதை மன்னனிடம் கொண்டு சேர்த்தார். மன்னனும் மிக்க மகிழ்ச்சியுடன் அதைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் ஒன்றும் அவனுக்குப் புரியவில்லை. உடனே புலவர்களிடம் அதைக் கொடுத்து, அந்நூலுக்கு "உரை காண்க!' என்றான்.
நக்கீரர், கபிலர், பரணர் முதலிய நாற்பத்தொன்பது புலவர்கள் போட்டா போட்டிக் கொண்டு உரை எழுதினார்கள். இப்போது இன்னொரு பிரச்னை உதயமாயிற்று. புலவர்கள் அனைவரும் தத்தம் உரையே சிறந்த உரை என்று கூறினர்! பாண்டியன் மீண்டும் சோமசுந்தரப் பெருமானிடம் முறையிட்டு சிறந்த உரையை அடையாளம் காட்டச் சொல்லி வேண்டினான். அப்போது விண்ணிலிருந்து ஓர் அசரீரி ஒலித்தது.
"வேந்தனே! இம் மதுரை மாநகரில் வணிகர் குலத்தில் கணபதி என்பானுக்கும் குணசாலினிக்கும் பெருந்தவத்தால் தோன்றிய ஒரு தெய்வப் புதல்வன் இருக்கிறான். உருத்திரசன்மன் என்று பெயர். ஆனால் அவன் பிறவி ஊமை! அவனிடம் சென்று உமது உரைகளை எல்லாம் படித்துக் காண்பியுங்கள். உண்மையான, சிறந்த உரை எது, என்பதை அவன் உறுதியாக அறிவிப்பான்'' என்றது. இருப்பினும் புலவர்களுக்கு ஐயம். அவன்தான் பிறவி ஊமை ஆயிற்றே. எது சிறந்த உரை என்று எப்படிச் சொல்லுவான்? என்பதே! அதற்கும் அசரீரி விடை பகர்ந்தது. ""அந்தக் கவலை வேண்டாம்.. உண்மையான உரையை அவன் கேட்கும்போது, கண்ணீர் சொரிந்து, உடல் ஸ்தம்பித்து ஆனந்தக் கூத்தாடுவான்'' என்றது! உடனே புலவர்கள், மேளம், தாளம், குடை, விருது, சாமரை பல்லக்கு முதலிய வரிசைப் பொருள்களுடன் சென்று அந்தக் குமரனைப் பணிந்து, சந்தனம் பூசி, செம்பட்டு ஆடையும், செம்மலர் மாலையும் புனைவித்து, பல்லக்கில் ஏற்றிக் கொணர்ந்து சங்கப்பலகை மீது எழுந்தருளச் செய்து சுற்றிலும் அமர்ந்து தத்தம் உரைகளை உரைத்தார்கள்.
உருத்திரசன்மராய் அவதரித்தவர் உண்மையில் கந்தக் கடவுளே! புலவர்களின் உரைகளைக் கேட்டுக் கொண்டிருந்தபோது சிலரது சொல் வைப்பைக் குறிப்பினால் இகழ்ந்தார். சிலர் சொல் அழகைக் கேட்டுப் புருவம் உயர்த்தினார். சிலர் பொருளாழத்தை மெல்ல தலையசைத்து ரசித்தார். சிலர் உரையைக் கேட்டு முகம் சுளித்தார். கபிலர், பரணர் என்போர் தம் உரைகளை வாசித்தபோது ஆங்காங்கு மகிழ்ந்து தலையை அசைத்தார். மதுரைக் கணக்காயன் மகனார் நக்கீரனார் தம் உரையை வாசித்தபோது, ஒவ்வொரு சொல்லுக்கும் பொருட்சுவை நோக்கித் தலையசைத்து, மெய் புளங்கித்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்து, இதுவே உண்மையான, சிறப்பான உரை என்று விளக்கலானார். பாண்டியனும் புலவர்களும் சிரமேற் கரம்குவித்து சோமசுந்தரப் பெருமானுக்கு வணக்கம் சொன்னார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...