உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

ஆழ்வாரைப் பின்தொடர்ந்த வரதர்!

விஷ்ணுவாகிய நாராயணமூர்த்தி, தமிழ்மொழியின் இனிமையில் மிகவும் பிரியமுள்ளவர்.

News image
Updated On :23 மே 2014, 11:36 am

மயிலை சிவா

விஷ்ணுவாகிய நாராயணமூர்த்தி, தமிழ்மொழியின் இனிமையில் மிகவும் பிரியமுள்ளவர். அதனை அருணகிரியார் "வண்டமிழ் பயில்வோர் பின் திரிகின்றவன்' என்ற வரிகளால் தனது திருப்புகழில் சுட்டிக்காட்டுகிறார். இந்த வரிகளின் பின்னால் ஒரு சுவையான வரலாறு இருக்கிறது!

காஞ்சியில் வரதராஜரைத் தினமும் சேவித்தபடி திருமழிசையாழ்வார் இருந்த நேரம். ஓர் அன்பர் அவருக்குப் பால் கொண்டு வந்து தந்தார். அதனை ஆழ்வார் பருகினார். அப்பாத்திரத்தில் எஞ்சி நின்ற பாலை அந்த அன்பர் ஆழ்வார் அருளிய பிரசாதமாகத் தன் மனைவியிடம் தர, அதனை அந்த அம்மையார் பருக அவர் கருவுற்று ஓர் அழகான ஆண் பிள்ளையைப் பெற்றாள். அப்பிள்ளைக்குக் கணிகண்ணன் என்று பெயரிட்டு வளர்த்தனர். அவனும் இளம்பிராயம் முதல் திருமழிசையாழ்வாரை விட்டு அகலாது அவருடனேயே சதா சர்வகாலமும் அவருக்குப் பணிவிடை புரிந்து கொண்டிருந்தான். இந்நிலையில் அவன் வரதரைத் தரிசித்துவிட்டுத் திரும்பும்போது கோயில் உட்பிரகாரத்தில் ஒரு வயதான மூதாட்டி அந்தத் தள்ளாத வயதிலும் கை, கால்கள் நடுக்கமுற்ற போதிலும் சுவாமி கைங்கர்யத்தில் ஈடுபட்டுள்ளதைப் பார்த்து மனம் கருணை வயப்பட்டார். இளம் வயதுப் பெண்ணாய் இருந்தால் இன்னும் எப்படியெல்லாம் இந்தப் பாட்டி பகவத் கைங்கர்யம் செய்வாள் என்று எண்ணிப் பார்த்த கணிகண்ணன் காஞ்சி வரதனை மனதாரத் துதித்து அந்தக் கிழவிக்கு இளமை தர வேண்டித் தன் கையால் அக்கிழவியின் முதுகைத் தடவினார். என்ன ஆச்சரியம்... கணிகண்ணன் வேண்டுகோளை ஏற்ற பெருமாள் அக்கிழவிக்கு இளமையை அளித்து அவளைக்

குமரியாக்கிவிட்டார்! அக்கிழவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை. கையிலிருந்த சொம்பை வீசி எறிந்துவிட்டு கணிகண்ணனைக் கும்பிட்டு வணங்கினாள். உடனே இந்தச் செய்தி காட்டுத்தீயைப்போல காஞ்சியெங்கும் பரவியது - கணிகண்ணன் கிழவியைக் குமரியாக்கிய அற்புதத்தைப் பலரும் வியந்து பாராட்டினார். செய்தி அரண்மனைக்கும் சென்றது.

அப்போது காஞ்சியை ஆண்டு வந்த பல்லவராயன் கிழப் பருவம் எய்தியிருந்தான். செய்தி அறிந்த அவன் கணிகண்ணனை வரவழைத்துத் தன்னையும் இளங்குமரனாக்க வேண்டினான்! கணிகண்ணனோ தான் அந்த சித்து வேலையெல்லாம் செய்யவில்லை, உண்மையில் அந்த விந்தையைப் புரிந்தவர் காஞ்சி வரதப்பரே. எனவே அவரை விரும்பி வேண்டிக்கொள்க என்று பதிலுரைக்க பல்லவராயனுக்குக் கோபம் வந்துவிட்டது! தன் கட்டளையை நிறைவேற்றாத கணிகண்ணனை உடனே காஞ்சி எல்லையைவிட்டு வெளியேறச் சொன்னான். கணிகண்ணனும் நேராய் தன் குருநாதர் திருமழிசை ஆழ்வாரிடம் சென்று நடந்தவற்றைச் சொல்லிவிட்டு காஞ்சியை விட்டு வெளியே சென்று விட்டான். ஆழ்வாருக்குத் தன் சீடன் பிரிவைத் தாங்க முடியவில்லை. எனவே அவரும் காஞ்சி வரதரைக் கண்டு, ""கணிகண்ணன் போகிறான். செந்நாப் புலவோன் யான் செல்கின்றேன், நீயுமுன்றன் பைந்நாகப்பாய் சுருட்டிக் கொள்'' என்ற திருப்பாசுரத்தைப் பாடிவிட்டு காஞ்சியை விட்டுக் கிளம்பி சீடனைத் தேடிக்கொண்டு கிளம்பிவிட்டார். வரதராஜர் ஆழ்வார் இல்லாத இடத்தில் தான் மட்டும் இருப்பானேன் என்று அவரும் காஞ்சியை விட்டு ஆழ்வாரைத் தேடிக்கொண்டு தன் ஆதிசேஷனாகிய நாகப்பாயைச் சுருட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார்!

பெருமாள் இல்லாத இடத்தில் தனக்கு என்ன வேலை என்று லட்சுமியும் காஞ்சியை விட்டு வெளியேறி விட்டாள்! உடனே காஞ்சி மாநகரம் களை இழந்தது. நகரமே வெறிச்சோடிவிட்டது. சீதேவி அகன்றதும் மூதேவி உட்புகுந்து அமர்ந்து விட்டாள்!

நகரத்து ஜனங்கள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு மன்னவன் முன் சென்று முறையிட்டுக் கதறினர். மன்னன், பெருமாள் அடியவரான கணிகண்ணனை நகரை விட்டுத் துரத்தியதன் விளைவே இது என்று புலவர்களும் பெருமக்களும் மன்னனைக் குற்றம் சாட்டினர். மன்னன் தன் தவறை உணர்ந்து தன் பரிவாரங்களுடன் கிளம்பி காஞ்சி நகரை அடுத்து இருந்த "ஓரிரவிருக்கை' என்ற ஊரில் தங்கியிருந்த பெருமாள், லட்சுமி, ஆழ்வார், கணிகண்ணன் ஆகியோரிடம் தன்னை மன்னித்து நகருக்குத் திரும்பி வருமாறு கைகூப்பி வணங்கிக் கூறினான்.

லஷ்மி பெருமாள் வந்தால்தான் தான் வருவேன் என்றார். பெருமாள் ஆழ்வார் வந்தால்தான் தான் வருவேன் என்றார். ஆழ்வாரோ கணிகண்ணன் வந்தால்தான் தன்னால் வர முடியும் என்று கூற, மன்னன் கணிகண்ணனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். கணிகண்ணனும் பெரிய மனதுடன் மன்னனை மன்னித்து விடும்படி குருநாதரிடம் வேண்டினான். ஆழ்வாரோ முன்பு தான் பாடிய வெண்பாவை மாற்றி, ""கணிகண்ணன் போக்கொழிந்தான், செந்நாப் புலவோன் யான் செலவொழிந்தேன், நீயுமுன்றன் பைந்நாகப்பாய் விரித்துக் கொள்'' என்று பாடினார்! பெருமாள் உடனே லஷ்மியுடன் காஞ்சிக்கு வந்து தன் ஆலயத்தினுள் ஆதிசேஷனின் குடை கீழ் அமர்ந்தார்.

இதனால் பெருமாளுக்கு "சொன்னவண்ணம் செய்த பெருமாள்' என்று ஒரு திருநாமம் உண்டு. பெருமாள், ஆழ்வார், கணிகண்ணன் ஆகியோர் ஓர் இரவு போய் தங்கி இருந்ததால் அந்த ஊருக்கு "ஓரிரவிருக்கை' என்ற பெயர் வந்தது. இன்றும் அந்த ஊர் காஞ்சிபுரத்திற்கு அருகில் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.