/

சித்தர் வழிபட்ட சிங்கப்பிரான்!

தர்மத்தை நிலைநாட்ட, திருமால் எடுத்த பத்து அவதாரங்களே தசாவதாரமாகும். அதில் நான்காவது அவதாரம் நரசிம்ம அவதாரம்!

News image
Updated On :23 மே 2014, 11:41 am

எஸ். வெட்கட்ராமன்

தர்மத்தை நிலைநாட்ட, திருமால் எடுத்த பத்து அவதாரங்களே தசாவதாரமாகும். அதில் நான்காவது அவதாரம் நரசிம்ம அவதாரம்! ஆழ்வார்கள் இந்த அவதாரத்தின் பெருமையை பலவாறு பாடி மகிழ்ந்துள்ளனர். ஈச்சங்காடு தலத்தில் லட்சுமி தாயாருடன் ஸ்ரீலட்சுமி நரசிம்மராகக் காட்சி தருகிறார். நடுநாட்டுப் பகுதியில், ஈச்சங்காடு மட்டுமல்லாது, பரிக்கல், பூவரசங்குப்பம், சிங்கிரிகுடி ஆகிய மூன்று ஊர்களிலும் லட்சுமி நரசிம்மருக்கு தனிக்கோயில்கள் உள்ளன.

ஒரு காலத்தில் ஈச்சம் புதர்களும் செடி, கொடிகளுமாக புதர் மண்டிக்கிடந்த இந்தப் பகுதியை, மக்கள் தாங்கள் வாழும் பகுதியாக மாற்றியபோது, அங்கு வந்த முதியவர் ஒருவர், "கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கலாமா? எனச் சொல்லி, தான் வழிபட்டு வந்த, ஸ்ரீலட்சுமி நரசிம்ம விக்ரகத்தை இங்கு பிரதிஷ்டை செய்தாராம். அந்த முதியவரே கொங்கணச் சித்தர் என்று செவிவழிச் செய்தியாகக் கூறப்படுகிறது. மூலவர் ஸ்ரீலட்சுமி தாயாரை இடப்புறம் தொடையில் அமர்த்திக் கொண்டு அணைத்த கோலத்தில் சங்கு- சக்கரத்துடனும், அபய ஹஸ்த முத்திரையுடன் சுமார் 4 அடி உயரத்தில் அழகிய கற்சிலை திருமேனியாக அற்புத சாளக்கிராம மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தாயார் புன்னகைத் தவழும் கோலத்தில் அருள்பாலிப்பது மேலும் சிறப்பு!

இரண்யனை வதம் செய்வது போலவும், ஸ்ரீலட்சுமி நரசிம்மராகவும் வழிபாட்டில் இரண்டு உற்சவ மூர்த்திகள் அமைந்திருக்கின்றன. ஸ்ரீலட்சுமி நரசிம்ம உற்சவ திருமேனி விழாக்காலங்களில் வீதியுலா வருகிறார். கருவறை வாயிலில் ஜெய, விஜய திருமேனிகள் பக்தர்களை வரவேற்கிறார்கள். ஆழ்வார்கள், ஆச்சார்ய பெருமக்கள், மற்றும் பூதேவி, சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் உற்சவ திருமேனிகளும் வழிபாட்டில் இருக்கிறது.

விநாயகப்பெருமான் (தும்பிக்கையாழ்வார்),ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கும் சந்நிதிகள் உள்ளன. இவ்வாலயம், சிவ வைணவ வழிபாட்டு ஒற்றுமைக்கு வழிகாட்டியாக விளங்குகிறது. பல குடும்பங்களுக்கு குல தெய்வமாகவும் லட்சுமி நரசிம்மசுவாமி விளங்குகிறார். நரசிம்ம பெருமாளுக்கு உரிய சுவாதி நட்சத்திர தினம், இவ்வாலயத்தில், சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. விநாயக சதுர்த்தி, முருகனுக்கான பங்குனி உத்திரத் திருக்கல்யாணம், கோகுலாக்ஷ்டமி, உறியடி, அனுமன் ஜெயந்தி விழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றன.

ஸ்ரீலட்சுமி நரசிம்ம உற்சவத்தின் பத்து நாள் விழாவில், கருட சேவை, திருத்தேர் உற்சவம் நடைபெறும். ஸ்ரீநரசிம்மரின் திருவீதிவுலா தரிசனத்தைக் காண கண் கோடி வேண்டும்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கிவரும் இவ்வாலயத்தில், தீர்த்தக்கிணறு, மடப்பள்ளி, வாகன மண்டபம் என அனைத்துமே புதுப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளன. நாமும் இத்திருப்பணியில் பங்குகொண்டு ஸ்ரீலட்சுமி நரசிம்மரின் அருளுக்கு பாத்திரமாவோம்.

சென்னை திருச்சி ரயில் மார்க்கத்தில் பெண்ணாடத்தை அடுத்த ஈச்சங்காடு ரயில் நிலையத்திலிருந்து 1/2 கி.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.