சமராபுரிவாழ் சண்முகத்தரசே!
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுகுன்றம் வட்டத்தில் சென்னையில் இருந்து செல்லும் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது திருப்போரூர்.


காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுகுன்றம் வட்டத்தில் சென்னையில் இருந்து செல்லும் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது திருப்போரூர்.
அசுரர்களை அழிக்க முருகன் போர்புரிந்த இடங்கள் மூன்று. மாயை நிறைந்தவன் சூரபத்மன். அவனை கடலில் போரிட்டு அழித்தார். அசுரர்களை திருப்பரங்குன்றத்தில் அழித்தார். கன்மம் நிறைந்தவர்களை நிலத்தில் அழித்தார். தாரூகாசுரன் என்னும் அசுரனை திருப்போரூரில் வானில் சண்டையிட்டு ஆணவத்தை அடக்கி ஞானம் கொடுத்து நிழல் தந்தார்.
இவ்வாறு நீர், நிலம், ஆகாயம் என்னும் 3 பூதங்களில் ஆகாயம் என்னும் பூதத்தில் போர்புரிந்து அசுரர்களை அழித்த இடம் போரூர் எனப்பட்டது. முருகன் சிறப்பால் திருப்போரூர் என அழைக்கப்பட்டது.
கந்தன் என்பதற்கு குமரன், முருகன், அருகன் என்பவைகளைப் பொருளாகக் கூறுவர். ஆனால் "ஸ்கந்தன்' என்பவன் அதிவீர பாராக்கிரமம் பொருந்திய சிறுவன் என்ற பொருளில் கந்தன் என்னும் தமிழ்ச்சொல் மாறி வழங்குகிறது எனக் கூறுவோறும் உண்டு.
கந்தன் என்னும் முருகன் பராக்கிரமம் பலபுரிந்து உலகில் நல்லவற்றைக் காத்து தீயவற்றை அழித்து, அருள் செய்பவன் என்னும் பொருளில் கந்தசுவாமி என வழங்கப்படுகிறார்.
"கந்தம்' என்பதற்கு நறுமணம் உடையது என்னும் பொருளும் உண்டு. எப்போதும் நல்லவற்றைச் செய்பவன் என்னும் பொருளில் மேம்பட்டவன் என்ற சொல் சேர்த்து கந்தசுவாமி என வழங்கப்படுகிறது.
செவ்வாய் கிரகத்தின் அதிபதியான முருகன், செவ்வாய்தோஷம் உள்ளவர்களுக்கு இங்கு அருள் செய்கிறார். அருணகிரிநாதர் திருப்புகழில் கந்தசுவாமியை சகல வேதங்களின் தலைவனாக போற்றுகிறார். அதனால் கல்வியில் சிறக்க கந்தசுவாமியை வணங்கவேண்டும்.
கருவறையில் இருக்கும் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாவார். இவர் பிரம்மாவின் அட்சமாலையும் சிவனைப்போல் அபயம் காட்டியும் திருமாலைப்போல் இடது துடையில் ஊரு ஹஸ்தமாக கை வைத்தபடி இருப்பதால் இவர் மும்மூர்த்திகளின் வடிவம் என்பர். முருகன் சுயம்பு திருமேனியாக உள்ளதால் இவருக்கு அபிஷேகம் கிடையாது. வெறும் புனுகு மட்டுமே சார்த்தப்படுகிறது.
முருகனின் 300 நாமாவளிகள் பொறிக்கப்பட்ட ஸ்ரீ சக்கரம் தனியே நிறுவப்பட்டு உள்ளது. முருகனுக்கு பூஜை நடந்தபின்பு, ஸ்ரீ சுப்ரமணிய யந்திரத்துக்கு பூஜைகள் நடக்கும். மேலும் பிரார்த்தனை அபிஷேகமும் மூலவருக்கு பதிலாக ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ள சக்கரத்திற்கே நடத்தப்படுகிறது.
கோயிலின் கருவறையில் முதலில் முருகனின் திருமேனி மட்டுமே இருந்ததாகவும் பின்னர் வள்ளி, தெய்வானை நிறுவப்பட்டனர் எனவும் சொல்கின்றனர். இங்கு நவராத்திரியின்போது வள்ளி தெய்வானைக்கு ஒன்பது விதமான அலங்காரம் செய்யப்படும்.
சிவாலயங்களில் நடப்பதுபோல் ஐப்பசி பௌர்ணமியில் முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அத்துடன் சிவராத்திரியில் 4 கால பூஜைகளும் செய்கிறார்கள். தைப்பூசத்தில் தெப்போற்சவம் நடைபெறுகிறது.
சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பாகவே இத்திருக்கோயில் இருந்தது என்றும் நாளடைவில் காலதேச வர்த்த மானத்தில் மண்மூடி பனைமரங்கள் வளர்ந்து முருகனைக் காத்ததாகவும் மதுரை சிதம்பர சுவாமிகள் கனவில் தோன்றிய முருகன் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் அவர் இவ்விடங்களை ஆய்ந்து தெளிந்து தேர்ந்து முருகன் இருப்பதை கண்டெடுத்து பிரதிஷ்டை செய்து காட்டைத்திருத்தி ஊராக்கி, கோயிலையும் எழுப்பினார் எனத் தெரியவருகிறது.
பனை மரத்தடியில் முருகன் நின்றிருந்தபோது மூடியிருந்த பாத்திரம் தற்போதும் திருக்கோயிலில் வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. அதில் அரிசியை அளந்து கொட்டி முருகனுக்கு தினம் நெய்வேத்தியத்திற்காக எடுக்கப்பட்டு படைக்கப்படுகிறது.
திருக்கோயின் பிரகாரத்தில் வன்மீக நாதர் சந்நிதி உள்ளது. கேதாரகௌரி விரதத்தின்போது தங்கள் குடும்ப சௌபாக்கியத்திற்காக பெண்கள் இங்கு அதிரசத்தை நிவேதனம் செய்கின்றனர்.
தொழிலில் வெற்றி, திருமணம், குழந்தைப்பேறு முதலிய வேண்டுதல்களை இத்தல முருகன் உடனுக்குடன் நிறைவேற்றி அருள்கிறார்.
கந்தர்சஷ்டி கவசத்தில் தேவராய சுவாமிகள் "சமராபுரிவாழ் சண்முகத்தரசே' எனப் போற்றப்படும் இத்திருக்கோயிலில் 12 ஆண்டுகள் கழித்து முழு அளவில் குடமுழுக்கு 11.09.2014 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 11.00 மணிக்குள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்கள் இவ்வைபவத்தில் கலந்துகொண்டு முருகப் பெருமானின் அருளைப் பெறலாம்.
தொடர்புக்கு: 044 2744 6226/ 99423 90665.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...