ஓமந்தூர் வீற்றிருந்த பெருமாள்!
திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் ஓமந்தூர் என்னும் அழகிய ஊர் அமைந்துள்ளது.


திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் ஓமந்தூர் என்னும் அழகிய ஊர் அமைந்துள்ளது. ஓமந்தூர் அமைந்திருக்கும் பகுதி வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும்.
பண்டைய நாளில் இப்பகுதி, "ஓய்மா நாடு' என அழைக்கப்பட்டது. தற்போதைய திண்டிவனம் முன்பு "கிடங்கில்' எனப்பட்டது. நல்லியக்கோடன் என்னும் மன்னன் கிடங்கிலை தலைநகராகக் கொண்டு அரசாட்சி செய்தான் என சங்க இலக்கியமான சிறுபாணாற்றுப்படை புகழ்ந்து பேசுகிறது. "ஒகந்தூர்' என்பது காலப்போக்கில் திரிந்து ஓமந்தூர் என அழைக்கப்படுகிறது.
இவ்வூரில் பீமேசுவரர் என்ற சிவாலயமும், வைகுண்ட நாராயணப்பெருமாள் என்ற வைணவ ஆலயமும் அமைந்து ஊருக்கு பெருமை சேர்க்கின்றன. மேலும் வழிபாடு சிறப்புமிக்க கிராம தேவதைகளின் திருக்கோயில்களும் இவ்வூரில் அமைந்துள்ளன.
சிற்பக்கலைகளுக்கு எடுத்துக்காட்டாகவும், கல்வெட்டுக்களும் கூடிய பீமேசுவரர் எனப்படும் சிவன்கோயில் திருப்பணி செய்யப்பட்டு, 1954 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்று புதுப்பொலிவுடன் விளங்குகிறது. 1954 இல் நடந்த குடமுழுக்கு, இவ்வூரில் பிறந்து வாழ்ந்து தமிழக முதல்வராகத் தொண்டாற்றிய ராமசாமி ரெட்டியாரால் திருப்பணி செய்யப்பட்டு நடத்தப்பட்டது. சிறப்பான முறையில் வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
பீமேசுவரர் கோயிலுக்கு தென்மேற்கில் வைகுண்ட நாராயணப்பெருமாள் திருக்கோயில் ஓமந்தூர் ஏரிக் கரையில் அமைந்துள்ளது. இப்போது பழைய கோயில் இருந்த இடத்திற்கு அருகில், கோயில் மீண்டும் புதுப்பித்து பெரிய அளவில் கட்டப்பட்டு வருகிறது. சிவன் கோயிலில் காணப்பெறும் விஜயநகர மன்னர் காலக் கல்வெட்டு இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் பெருமாளை வீற்றிருந்த பெருமாள் எனக் குறிப்பிடுகிறது. சுமார் 10 அடி உயரத்தில் திருமால் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் அற்புத, அழகான வடிவினைக் கண்டு வழிபடலாம். பெருமாள் தனது நான்கு கரங்களில் மேலிரு கரங்களில் சக்கரம் - சங்கு தாங்கியும், கீழ் வலது கரம் அருள் வழங்கும் அபய கரமாகவும், கீழ் இடது கரம் கடக முத்திரையுடன் மலர் ஏந்திய பாவனையில் காட்சி தருகிறார். இதனைக் காணும் பொழுது பத்மநாபன் கையில் "ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்று அதிர்ந்து' என்று திருப்பாவையில் கூறப்படுவது போல அழகாக பெருமாள் காட்சி தருகிறார். தலையில் கிரீட மகுடம், நீள்செவிகள், அருள் புரியும் கண்கள், புன்னகை தவழும் இதழ்கள், கம்பீரமான தோற்றம்... இன்றைக்கெல்லாம் பெருமாளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகு! பெருமாளுக்கு வலப்புறம் ஸ்ரீதேவி கரண்ட மகுடம் அணிந்து தனது இடது கரத்தில் தாமரை மலர் தாங்கியும், இடப்புறம் பூதேவியும் கரண்ட மகுடம் அணிந்து வலது கரத்தில் நீலோத்பவ மலரைத் தாங்கி காட்சி தருகின்றனர். தன்னை நாடிவரும் பக்தர்களின் துன்பங்களைப் போக்கும் திருக்கோயிலாக விளங்குகிறது.
முதலாம் ராஜராஜ சோழன் காலத்திலும் பின்னர் விஜயநகர மன்னர் காலத்திலும் இக்கோயில் சிறப்புற இருந்திருக்க வேண்டும். தற்போது திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றது. திருப்பணி முடிந்தவுடன் இக்கோயில் பெரிய அளவில் மக்களால் போற்றப்படும் ஆலயமாக விளங்கும். இத்தெய்வீகத் திருப்பணியில் நாமும் பங்கு கொண்டு ஓமந்தூர் அருள்மிகு வைகுண்ட நாராயணப்பெருமாள் கோயிலில் எழுந்தருளிய பெருமாளை வழிபட்டு அனைத்து நலன்களையும் பெறுவோம்.
தொடர்புக்கு: ஓ.வி. பத்ரி நாராயணன்: 094430 74131.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...