பத்ராசலத்தில் பிறந்த பத்ரகிரியார் 8 ஆம் நூற்றாண்டில் நாகப்பட்டினத்தின் அரசராக இருந்தார்.
மன்னரின் படுக்கையை சரி செய்து அதில் பூக்களைத் தூவி அழகு படுத்துவது பணிப்பெண் ஒருத்தியின் வேலை. ஒருநாள் அவள் செய்த படுக்கை அலங்காரம் அவளையே மயக்கியது. "சிறிதுநேரம் இதில் படுத்தால் என்ன..?' என்று நினைத்தவள், உடனே படுக்கையில் படுத்தாள். சந்தோஷத்தில் ""பிரமாதம்... பிரமாதம்...'' என்று கூவினாள். சில வினாடிகளில் அயர்ச்சியில் தூங்கிவிட்டாள்.
இந்த நேரத்தில் மன்னர் அங்குவர, "வேந்தன் உறங்கும் படுக்கையில் வேலைக்காரியா?' என்று ஆத்திரமடைந்தார். காவலர்களை அழைத்து, ""இவளை எழுப்பி சிறையில் அடையுங்கள். நாளைக் காலையில் என் முன்னர் நிறுத்துங்கள்'' என்று கட்டளையிட்டார்.
மறுநாள், சபையில் பணிப்பெண்ணை கொண்டு வந்து நிறுத்தினர். ""ஒரு கம்பத்தில் கட்டி வைத்து புளியம் விளாரால் அடியுங்கள்'' என்று கட்டளையிட்டார் பத்ரகிரியார்.
அடிகள் விழவிழ பணிப்பெண் புழுவாகத் துடித்தாள். திடீரென்று அவள் பேய் சிரிப்பு சிரிக்கலானாள். மன்னனுக்கு அவளது சிரிப்பு கோபத்தை உண்டாக்கியது. அடிப்பதை நிறுத்தச் செய்தார். ""ஏன் சிரிக்கிறாய்... பைத்தியம் பிடித்துவிட்டதா?'' என்று அவளைக் கேட்டார்.
"இல்லை மன்னா... இப்போதுதான் பைத்தியம் தெளிந்தது'' ""உங்களது படுக்கையில் பூக்கள் பரப்பும்போது இறைவனுக்கு அர்ச்சிக்க வேண்டிய பூக்கள் இப்படி படுக்கையில் வீணாகிறதே என்று நினைப்பேன். அப்படுக்கையில் கொஞ்ச நேரம் தூங்கிய எனக்கே இந்த தண்டனை என்றால், அதில் தினமும் மனைவியோடு சேர்ந்து உறங்கும் உங்களுக்கு எமதூதர்கள் எவ்வளவுபெரிய தண்டனை கொடுப்பார்கள் என்று எண்ணினேன்... சிரிப்பு வந்துவிட்டது'' என்றாள்.
மன்னன் மனமுடைந்தான். ஆனால் தெளிவு தோன்றியது. அரசாட்சியைத் துறந்து தம் குருவான பட்டினத்தாரை பார்க்க கிளம்பி விட்டான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.