புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

பங்குனி உத்திர நன்நாளில் வள்ளி முருகன் திருமணம்!

கருணையே வடிவானவன் முருகன். குன்றுதோறும் குடியிருப்பவன் குமரன்.

News image
Updated On :10 ஏப்ரல் 2014, 10:04 am

கருணையே வடிவானவன் முருகன். குன்றுதோறும் குடியிருப்பவன் குமரன். அலைபாயும் கடற்கரையில் அமர்ந்திருப்பவன் செந்தில்நாதன். கற்பனை செய்து நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அருளை வாரி வழங்குபவன் கந்தன். கந்தனின் திருவடியைத் தொழுதால் செய்த பாவம் விலகுகிறது. அந்தத் தாமரை மலர் திருப்பாதங்கள் நமக்கு நல்வழி காட்டுகின்றன.

முருகன் தோன்றிய நாள் "வைகாசி விசாகம்!' ஆறு முகங்களும் ஒன்றாய்க்கூடி ஒரு முகமானது "கார்த்திகை' திருநாள்.

அன்னையிடமிருந்து வேலைப்பெற்ற நாள் "தைபூசம்!'

அசுரனை அழித்தது "ஐப்பசி சஷ்டி' நன்னாள். குறவள்ளியை திருமணம் செய்து கொண்ட நாள் "பங்குனி உத்திரம்!'

பங்குனி உத்திரத்தன்று வள்ளிக்கும் முருகனுக்கும் திருமணம் செய்து வைத்து அந்த முருகனின் அருளைப் பெறவேண்டும். தெய்வங்களுக்குத் திருமணம் செய்து பார்ப்பதால், நம் வீட்டில் உள்ள பிள்ளைகளுக்குத் திருமணம் தானாகவே நடந்து விடும். அதிலும் பங்குனி உத்திரத்தன்று முருகப்பெருமானுக்கு திருமணம் செய்து வழிபட்டால் நம் வீட்டுத் திருமணங்கள் தானாக கைகூடி வரும்.

நண்பர் ஒருவர் தனது மகனுக்கு திருமணம் கைகூடி வரவில்லையென்று ஒவ்வொரு பங்குனி உத்திரத்தன்றும் பகவானுக்கு திருமணம் செய்து கசிந்துருகினார். காலம் வந்தது. அவரது பிள்ளையின் கல்யாணமும் நல்ல படியாக முடிந்தது. உயர்ந்த தேவர் குலத்தில் பிறந்தவன் முருகன். வேடர் குலத்தில் பிறந்தவள் வள்ளி. இவர்களின் திருமணம் மனிதர் வாழ்வில் உயர்வு, தாழ்வு, சாதி வித்தியாசமெல்லாம் தேவையில்லை; சமத்துவமே உயர்ந்தது என்று நமக்கு உணர்த்துகிறது.

ஏழைப்பெண்ணொருத்திக்கு தாலி வாங்கிக் கொடுத்து அவளுக்குத் திருமணம் செய்வித்தால் அதைப்போல புண்ணியம் வேறு எதுவுமில்லை. அதிலும் பங்குனி உத்திரத்தன்று இந்த தங்கத்தாலி தானத்தை செய்தால் கோடி புண்ணியம் தேடி வரும்.

வருடத்தின் கடைசி மாதம் பங்குனி மாதம். அதன் பிறகு புதிய மாதமாய் சித்திரை பிறக்கும். எனவே வருடத்தின் கடைசியான பங்குனி மாதத்தில் திருமணம் செய்துவிட வேண்டும்.

பொதுவாகவே பெண்ணைப் பெற்றவர்களானாலும் சரி, பிள்ளையைப் பெற்றவர்களானாலும் சரி! அந்த பிள்ளைகளுக்கு சித்திரை மாதம் திருமணம் செய்து விடலாம் என்று நினைப்பார்கள். ஆனால் ஏதோ காரணத்தால் தள்ளிப்போகும். இப்படி ஒவ்வொரு மாதமும் ஏதாவது காரணத்தால் தாமதமாகி கடைசியாக பங்குனி மாதத்தில் அவசர அவசரமாக திருமணத்தை முடித்துவிடுவார்கள்.

எனவே, பங்குனி உத்திரத்தில் பகவானுக்குத் திருமணம் செய்து வைத்து அதை அனுபவித்தால் தடைப்பட்ட திருமணம் நடந்து விடும்.

நம்பிராஜன் என்ற வேடுவனால் வள்ளி மலையில் வளர்க்கப்பட்டவள் வள்ளி. ஒரு தை பூச நன்நாளில் வேடுவன் நம்பி தன்னுடைய வள்ளிக்கிழங்கு தோட்டத்தில் வள்ளிக் கிழங்கைத் தோண்டி எடுத்துக் கொண்டிருக்கும்போது அருகிலிருந்த வள்ளிக்கிழங்கு செடிக்கருகில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்க, அங்கு சென்று பார்த்தபோது அழகான பெண்குழந்தையைக் கண்டான். அதை வாரி எடுத்து அன்புடன் வளர்த்து வந்தான்.

அவளே தெய்வப்பெண் வள்ளி! வள்ளி மலையில் அவள் வளர்ந்து வந்தாலும், உண்மையில் அவள் மகாவிஷ்ணுவின் மகள். சுந்தர வல்லியாக மகாவிஷ்ணுவின் ஆனந்தக் கண்ணில் உதித்தவள். முருகனின் வேண்டுகோளுக்கு இணங்கி வள்ளியை அவதாரம் செய்வித்தார் விஷ்ணு. முருகன் ஒரு வேடனாக வந்தான். வள்ளியின் மனதில் புகுந்தான். வேங்கை மரமாக மாறினான். வள்ளியின் வேள் விழியைக் கவர்ந்தான். கிழவனாக வந்த முருகனைக் கண்டு அதிசயித்தாள் வள்ளி.

முருகப் பெருமான் தன் அண்ணன் கணபதியை நாட, கணபதியும் யானைஉருவில் வந்து வள்ளியை பயமுறுத்தவும், தன் சுய உருவைக் காட்டி அருளினார் முருகப்பெருமான். அவர்களின் விருப்பத்தை அறிந்த வள்ளியின் வளர்ப்புத் தந்தை நம்பி ராஜன், ஆத்திரமடைந்தான். வள்ளியை அடைத்து வைத்தான். முருகன் வள்ளியைக் கவர்ந்து சென்றார்! தனது சேனையுடன் முருகனுடன் மோதினான் ராஜன். இருவருக்குமாக நடந்த போரில் நம்பி ராஜன் கொல்லப்பட, வள்ளி கந்தனிடம் தன் தந்தைக்கு உயிர்ப் பிச்சைக் கேட்டாள். முருகனும் மன்னித்து அருளினார். நம்பிராஜன் உயிர் பெற்றெழுந்து கந்த பெருமானிடம் மன்னிப்புக் கேட்டதுடன் தனது மகள் வள்ளியை முருகப்பெருமானுக்கு விமரிசையாகத் திருமணம் செய்து கொடுத்தார்.

ஒவ்வொரு வருடமும் "திருத்தணி'யில் பங்குனி உத்திரத்தன்று வள்ளி- முருகன் திருமண வைபவம் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது. அன்றைய தினம் "திருத்தணிக்குச் சென்று முருகனை வழிபட்டால் முருகனின் அருள் பரிபூர்ணமாய் கிடைக்கும் என்பதுடன், தாமதப்பட்டு வந்த நம் வீட்டுத் திருமணங்களும் உடனே கைகூடும். நல்குழந்தை பேறும் உண்டாகும். வந்த வினையும் வருகின்ற வினைகளும் கந்தன் பேரைச் சொன்னால் கலங்கி ஓடிவிடும்.

குறிஞ்சி நிலக்கடவுளான முருகனையும் வள்ளி அம்மையையும் அருணகிரிநாதர், "

பாகு கனிமொழி, மாது குறமகள், பாதம் வருடிய மணவாளா'

-என்று பாடி மகிழ்கிறார். கந்தன் வள்ளியின் பாதத்தை வருடினார் என்றால், அது வள்ளிக்கு எப்பேர்ப்பட்ட பெருமையைச் சேர்க்கிறது என்று பரவசப்படுகிறார். முருகப்பெருமான் பக்தர்களுக்கு எந்த நன்மையைச் செய்தாலும் வள்ளி- தெய்வயானை மூலமே செய்வதால், பங்குனி உத்திரத்தன்று முருகப்பெருமானை மனமுறுகி வழிபட்டால் துன்பமும், துயரமும் தீர்ந்து விடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.