/

கல்யாணம் கூட்டிவைக்கும் கருட சேவை!

அனைத்துவித கல்யாண குணங்கள் நிரம்பப் பெற்றவனாம் எம்பெருமான் அர்ச்சாவத ரூபியாய் ஸ்ரீநிவாஸன் என்ற திருநாமத்துடன் கோயில் கொண்டு அருள்புரியும்

News image
Updated On :4 பிப்ரவரி 2016, 11:18 am

எஸ். வெட்கட்ராமன்

அனைத்துவித கல்யாண குணங்கள் நிரம்பப் பெற்றவனாம் எம்பெருமான் அர்ச்சாவத ரூபியாய் ஸ்ரீநிவாஸன் என்ற திருநாமத்துடன் கோயில் கொண்டு அருள்புரியும் திருப்பதிகளில் ஒன்று கல்யாணபுரம்! கல்யாணம் என்ற சொல்லே நலம்தரும் நற்சொல். அதன்படி எப்பொழுதும் பக்தர்களுக்கு கல்யாணத்தையே (நல்லனவே) செய்யும் புரமாக இது திகழ்கின்றது.

திருமங்கையாழ்வாரால் மங்களா சாஸனம் செய்யப்பட்ட திருக்கண்டியூர் திவ்ய தேசத்தின் அபிமானத் தலமாகவும் போற்றப்படுகின்றது. 

ஆண்டுதோறும் கண்டியூர் எம்பெருமான் தனது பிரம்மோத்சவத்தில் ஒருநாள் கல்யாணபுரத்திற்கு எழுந்தருளுவதும் அவரை ஸ்ரீநிவாஸப்பெருமாள் எதிர்கொண்டு அழைத்து மரியாதை செய்வதையும் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாகும்.

பல வருடங்களுக்குமுன் நடைபெற்றுவந்த "பஞ்ச கருட சேவை' என்று அழைக்கப்படும் விழாவில் இத்தலத்து பெருமான், அருகிலுள்ள ராயம்பேட்டை, பெரும்புலியூர், திங்களூர், கண்டியூர் தலங்களிலுள்ள பெருமான்களும் சேர்ந்து காட்சி தருவார்களாம்.

இத்திருப்பதியில் மூலவராக ஸ்ரீநிவாஸப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் நின்ற கோலத்தில் சேவை தருகின்றார். அலர்மேல் மங்கை என்ற திருநாமத்துடன் தாயார் தனிச் சந்நிதி கொண்டுள்ளார். இதர தெய்வ மூர்த்தங்கள், ஆழ்வார், ஆசார்யர்கள், பெரியதிருவடி, சிறிய திருவடி சந்நிதிகளுடன், துவஜஸ்தம்பம் அமையப்பெற்று கம்பீரமான ஒரு வைணவ ஆலயமாக மிளிர்கின்றது. இங்குள்ள உற்சவமூர்த்திகள் திருப்பதியிலிருந்து வந்தவை என்ற ஒரு செவிவழிச் செய்தியும் உண்டு. இது ஒரு பிரார்த்தனைத் தலமாகும். திருமணப் பிராப்தி வேண்டி அது கை கூடி வாய்க்கப்பெறும் பட்சத்தில் பெருமாளை அலர்மேல்மங்கைத் தாயாருடன் கருடன் மேல் எழுந்தருளப் பண்ணுவதாக பிரார்த்தனை செய்கிறார்கள். பக்தர்களின் கோரிக்கை உடனே நிறைவேறுகின்றது என்பதற்கு ஏற்ப இத்தலத்தில் அநேகமாக மாதத்தில் குறைந்தபட்சம் 20 பிரார்த்தனை கருடசேவை நடைபெறுவதே இதற்குச் சான்று.

ஆயினும் அதில் தை மாதம் சிரவணத்தை ஒட்டி நடைபெறும் திருமணக் கல்யாண உத்ஸவம் ஒரு பெரிய திருவிழாவாக நடைபெறுவது வேறு எந்த தலத்திலும் காண்பதற்கரிய ஒன்றாகும்.

லட்சார்ச்சனை, ஜானுவாஸம், ஒளபாஸன ஹோமம், காவிரியில் தீர்த்தவாரி, விசேஷ திருமஞ்சனம், புஷ்பக விமானத்தில் திவ்ய தம்பதிகள் புறப்பாடு, இன்னிசைக் கச்சேரிகள் என்று ஒரு வாரம் ஊரே விழாக் கோலம் பூண்டுவிடும். 1941 ஆம் வருடம் துவங்கப்பட்டது இந்த உத்ஸவம். இவ்வாண்டு 75 ஆவது வார்ஷிக திருக்கல்யாண மகோத்ஸவம் பிப்ரவரி 6 இல் தொடங்கி 12 வரை நடைபெறுகின்றது. பக்தர்கள் இந்த திருப்பணியில் பங்கு கொள்ளலாம்.

 ஆலய அமைவிடம் : தஞ்சை - திருவையாறு பாதையில் திருவையாறுக்குமுன் நடுக்கடை பேருந்து நிறுத்தத்திலிருந்து கிழக்கே 1 கி.மீ. தூரம்.

தகவல்களுக்கு: 04362-260342  98410 10848.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.