ஐந்து திருமுகங்களுடன் அருளும் ஓதிமலை முருகன்!

சத்தியமங்கலம் அருகே 25 கி.மீ. தொலைவில் உள்ளது ஓதிமலை. இங்கு பழைமையான முருகன் கோயில் உள்ளது
ஐந்து திருமுகங்களுடன் அருளும் ஓதிமலை முருகன்!
Updated on
1 min read

சத்தியமங்கலம் அருகே 25 கி.மீ. தொலைவில் உள்ளது ஓதிமலை. இங்கு பழைமையான முருகன் கோயில் உள்ளது. ஓதிமலையில் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் ஐந்து திருமுகங்களும் எட்டு கரங்களும் கொண்ட முருகப்பெருமானைத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு "ஆதிபிரம்ம சொரூபம்' எனப்படுகிறது.
 இத்திருக்கோயிலை 1800 படிகளைக் கடந்த பின்னரே அடையமுடியும். இந்தப் படிகள் செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ளதால் மலை ஏறுவதற்குச் சற்றுச் சிரமமாகவே இருக்கிறது. இம்
 மலையின் அடிவாரத்தில் பிள்ளையார் கோயில் ஒன்று உள்ளது. அங்கிருந்தே மேலே மலைக்குச்செல்லும் படிகள் ஆரம்பம் ஆகின்றன.
 புஞ்சம்புளியம்பட்டியிலிருந்து சிறுமுகை- மேட்டுப்பாளையம் செல்லும் வழி அல்லது பவானிசாகரில் இருந்து சிறுமுகை செல்லும் வழியில் இரும்பறை ஊரில் இந்த மலை அமைந்துள்ளது. இது மிகவும் பழைமையான பாடல் பெற்ற முருகன் தலமாகும்.
 சுவாமிமலையில் சிவனுக்கு பிரணவத்தின் பொருளை உணர்த்திய முருகன், இந்த ஓதிமலை தலத்தில் வேதம் ஆகமங்களை உபதேசித்தார். இவ்வாறு சிவனுக்கு வேதம் ஓதி உபதேசம் செய்த மலை என்பதால் இத்தலம் ஓதி மலை என்றும் சுவாமிக்கு ஓதிமலை முருகன் என்றும் திருநாமம் ஏற்பட்டது.
 பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகர் ஓதிமலையில் முதலில் முருகப்பெருமானை தரிசித்தார். பின்புதான் முருகப்பெருமானின் பரிபூரண அனுக்கிரகத்தால் இறைவனின் வழிகாட்டுதலின் பேரில் பழனிக்கு சென்றதாகச் சொல்லப் படுகிறது. ஓதிமலையில் போகரின் ஆலோசனைப் படிதான் ஐந்துமுக முருகன் விக்கிரகம்
 பிரதிஷ்டை செய்யப்பட்டதாகச் கூறப்படுகிறது.
 ஓதிமலைப் பகுதியில் நிறைய மயில்கள், குரங்குகள், பலவண்ணப் பறவைகள் உள்ளன. அவற்றை பார்க்கும் போது நம் மனதுக்கு இதமாக இருக்கும். இம்மலையின் உச்சியில் வெண்மை நிறத்தில் காணப்படும் பகுதி "பூதிக்காடு' என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் உள்ள வெண்ணிற மண்ணே விபூதியாக பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும். அதனாலேயே விபூதிகாடு என்பது பின்னாளில் பூதி காடாக ஆகியிருக்கிறது. இத்தலத்தில் பக்தர்கள் முருகனிடம் எந்த ஒரு காரியத்திற்கும் பூ வைத்து உத்தரவு கேட்கின்றனர். அதன்பிறகு தான் காரியத்தை நிறைவேற்றுகின்றனர்.
 பிரம்மாவை முருகன் இரும்பு அறையில் சிறைப்படுத்தியதால் இவ்வூர் இரும்பறை என்றே அழைக்கப்படுகிறது. அடிவார இரும்பறையில் பிரம்மன் சிறைப்படுத்தப்பட்ட இடத்தினை தரிசிக்கலாம்.
 ஓதிமலை முருகனை மலையேறி தரிசிப்பதால் மறைமுக இடர்கள் ஓடி மறையும். ஐந்துமுக முருகப்பெருமானின் அருளுடன் சித்தர்களின் ஆசியும் சேர்ந்தே கிடைக்கும்.
 - இ. பன்னீர்செல்வம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com