ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

நிறைவேறும் முறையான துஆ!

மனிதன் எக்காலமும் எந்நிலையிலும் புனிதன் அல்லாஹ்வின் நினைவில் நிலைத்திருப்பதே திளைத்திருப்பதே துதி - இறை வணக்கம் ஆகும்.

News image
Updated On :3 மார்ச் 2017, 10:59 am IST

மனிதன் எக்காலமும் எந்நிலையிலும் புனிதன் அல்லாஹ்வின் நினைவில் நிலைத்திருப்பதே திளைத்திருப்பதே துதி - இறை வணக்கம் ஆகும். துதி என்னும் சொல் இறைவனைத் துதிப்பதைக் குறிப்பதே. இனிய வாழ்வு வேண்டி கனிவாய் இறைவனை இறைஞ்சும் இறை வேட்டலும் இறை வணக்கமே. அதாவது ""துஆ (இறைவனிடம் இறைஞ்சுதல்) கேட்டதும் வணக்கமே'' என்ற வள்ளல் நபி (ஸல்) அவர்களின் வாய்மொழியை வாகாய் அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல் - திர்மிதீ, நூற்களில் "துஆவும் துதியே'' என்ற எம்பெருமானார் நபி (ஸல்) அவர்களின் கருத்தை நிஃமான் பின் பஷீர் (ரலி) பகர்வதையும் பார்க்கலாம். திரும்ப திரும்ப ஓதும் இறை வேட்டல்களைத் திரை மறைவின்றி இறைவன் ஏற்று ஆவன செய்து அருள்புரிவான்.  

"உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம். எங்களை நீ நேர் வழியில் நடத்துவாயாக!'' என்ற நற்குர்ஆனின் 1-4, 5 ஆவது வசனங்கள் வணங்குபவனிடமே உதவி தேட உரைக்கிறது. அப்படி உதவி தேடும் துஆவும் நம்மை நேர் வழியில் நடத்த கோருவதாக இருப்பது நல்லது. இதுபோன்ற துஆக்கள் இறை நம்பிக்கையாளர்களுக்குக் கேடயம் ஆகும். 

"இறை நம்பிக்கை உடையோரே! உங்களின் இறைவனிடம் பணிவாகவும் அந்தரங்கமாகவும் இறைஞ்சுங்கள். வரம்பு மீறியவர்களை அல்லாஹ் நிச்சயமாக நேசிப்பதில்லை'' என்ற நேரிய குர்ஆனின் நெறிபடுத்தும் 7-55 ஆவது வசனம் இறைவனைப் பணிந்து வணங்கி வேறு எண்ணம் எதுவுமின்றி உருக்கமாக இரக்கமாக இறைவனை ஈர்க்கும் வகையில் மிகைத்திடாத மெல்லிய குரலில் துல்லியமாக கேட்க வேண்டும் என்று ஏவுகிறது. பெருமானார் நபி (ஸல்) அவர்களின் பிரிய தோழர்கள் இந்த வசனம் வரையறுக்கிற வண்ணம் அவர்களின் துஆவை இருள் சூழ்ந்த இரவில் ரகசியமாக கேட்பார்கள். அவர்களின் முனகலையும் மூச்சையும் தவிர வேறு எந்த பேச்சையும் யாரும் கேட்க முடியாது.

இறைவனிடம் இரைந்து கேட்டால்தான் அவன் செவியேற்பான் என்று எண்ணுவது கூடாது. ரகசியத்திலும் ரகசியமாக அழைத்தாலும் அவன் செவியேற்பான். ஒரு சமயம் அபூமூசா அல் அஷ் அரிய்யி (ரலி) அவர்களும் வேறு சில தோழர்களும் தோழமை நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபொழுது சிலர் தக்பீரை (இறைதுதியை) இரைந்து கூறினர். அப்பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ""தோழர்களே, நீங்கள் குரலைத் தாழ்த்தி கொள்ளுங்கள். செவிடனையோ, மறைந்திருப்பவனையோ நீங்கள் அழைக்கவில்லை; நன்கு செவியுறுகிறவனையும் நன்கு உற்று நோக்கிக் கொண்டிருப்பவனையுமே நீங்கள் அழைக்கிறீர்கள். அவன் உங்களிடையே இருக்கிறான்'' நூல்- புகாரி, முஸ்லிம். இரைந்து அழைத்து கூவி கூப்பிட்டால்தான் மேவும் இறைவன் மேதினி வாழ் மக்களின் குறைகளைக் கேட்பான் என்று எண்ணி கூக்குரலிடக்கூடாது. மன அமைதிக்காக நினைவில் நிற்பவனைக் கனமாய் அழைப்பது தவறல்ல. பொது பிரச்னைகளைத் தீர்த்து வைக்க கூடி முறையிடும்பொழுது கூட்டத்தினர் அனைவரும் ஒருமித்து கேட்டு ஒத்தகுரலில் சற்று சத்தமிட்டு துஆ செய்வது சத்தியத்திற்கு முரணானதல்ல. வீண் ஆடம்பரம், ஆர்பாட்டம், ஆரவாரமான வேண்டுதல்களையும் தகாதன செய்ய தக்க ஆதரவு தரமிக்க மேலான அல்லாஹ்விடம் துஆ செய்வதையும் வேண்டுதல் வேண்டாமை இல்லா அல்லாஹ் விரும்புவது இல்லை என்பதை இவ்வசனத்தின் இறுதி வரி உறுதியாக கூறுகிறது.

"அல்லாஹ்வை நினைவு கூர்வதைவிட அடியாளின் வேறு எந்த செயலும் அல்லாஹ்வின் வேதனையை  விட்டும் அவனைக் காப்பாற்றாது'' என்ற காருண்ய நபி (ஸல்) அவர்களின் கருணை மொழியைக் கனிவாய் கூறுகிறார் மு ஆதுப்னு ஜபல் (ரலி) நூல்- மு அத்தா. ""ஞானமுள்ள உங்களின் இறைவன் அருள்புரிபவன். அடியான் இரு கைகளைத் தூக்கி துஆ கேட்கும்பொழுது அவ்வடியானை வெறுமனே விடமாட்டான் அல்லாஹ்'' என்ற அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அரிய உரையைத் தெரிவிக்கிறார் சல்மான் (ரலி) நூல்- திர்மீதி, அபூதாவூத். ""ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் அல்லாஹ்விடம் கேட்கப்படும் வேண்டுதல்களே விரைந்து ஏற்கப்படுகின்றன'' என் எம்பெருமானார் நபி (ஸல்) அவர்களின் நன்மொழியை நவில்பவர் -அபூ உமாமா (ரலி) நூல்- திர்மிதீ.

கேட்டவுடன் கேட்கும் துஆ உடனேயே நிறைவேறும் என்று எதிர்பார்ப்பது ஏற்றதல்ல; ஏமாற்றத்தையே தரும். எப்பொழுது நிறைவேறினால் இறையடியானுக்கு நற்பயன் விளையும் என்பதை நன்கறிந்த அல்லாஹ் உரிய காலத்தில் உரிய முறையில் நிறைவேற்றுவான். அப்பொழுது அதன் பயனும் அதிகமாக இருக்கும்.
- மு.அ. அபுல் அமீன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.