சுமங்கலிப் பெண்கள் அனுசரிக்கும் விரதமே "வரலட்சுமி விரதம்' ஆடி அல்லது ஆவணி மாதத்தில் பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமையில் "வரலட்சுமி விரதம்' அனுஷ்டிக்கப்படுகிறது. இவ்வாண்டு, வரலட்சுமி விரதம் 24.08.2018 அன்று வருகிறது.
புராண காலத்தில் நான்காவது மனு என்ற அரசன் ஆண்டுவந்த காலத்தில் "விகுண்டை' என்ற பெண்ணுக்கு மகனாக அவதரித்தார் "ஸ்ரீமஹாவிஷ்ணு! ‘ அவர், திருமண வயதானதும் "ஸ்ரீ லட்சுமி' என்ற திருமகளைத் திருமணம் செய்து கொண்டார்.
ஒருசமயம், ஸ்ரீவைகுண்டத்தில் ஸ்ரீ லட்சுமியை வர்ணித்து, அவளது புகழைப் பாடினாள் யாழ்மீட்டும் கந்தர்வப் பெண் ஒருத்தி. யாழை மீட்டிக்கொண்டு அந்த கந்தர்வப்பெண் பாடும் அழகைக் கேட்டு லட்சுமி பூரித்துப் போனாள்.
அந்த அளவில்லா மகிழ்ச்சியிலே, தன் கூந்தலில் சூடியிருந்த வாசமிகு மலர்சரத்தை அந்த கந்தர்வப் பெண்ணுக்குப் பரிசாக அளித்தாள்.
மஹாலட்சுமி கையால் கொடுத்த மலர்சரத்தை பெருதற்கரிய பிரசாதமாக மனநிறைவோடு ஏற்றுக் கொண்டாள் அந்த கந்தர்வப் பெண். அதை கலைமகளாய் திகழும் தன் யாழிற்குச் சூட்டினாள்.
அப்போது எதிரே துர்வாசக முனிவர் வந்தார். அற்புதமான நறுமணம் கமழும் அந்த மலர் மாலையை பற்றி அந்த கந்தர்வப் பெண்ணிடம் கேட்டார்.
அப்பெண் முழுவிவரத்தையும் கூறி அந்த மலர்மாலையை "துர்வாசக முனிவருக்கே' அளித்தாள். அதைப்பெற்றுக்கொண்ட துர்வாசகர், எதிரே ஐராவதம் யானை மீது பவனி வந்த இந்திரனுக்கு கொடுத்தார்.
அவன் மிக அலட்சியமாக அதை வாங்கி, ஐராவதம் யானையின் மத்தகத்தில் வைத்தான். இதை இடையூறாக எண்ணிய யானை, கோபத்தில் அந்த மலர்சரத்தை எடுத்து கீழே போட்டு காலால் மிதித்து சிதைத்தது.
இதைக்கண்டு கோபமடைந்த முனிவர், ""லட்சுமியின் பெருமையை அறியாத மூடனே, நீ அனைத்துச் செல்வங்களும் இழந்து, பிச்சைக்காரன் போன்று திரிவாயா!'' என்று சாபமிட்டார். அடுத்த நொடி, இந்திரனின், செல்வம், ஐராவதம் யானை அனைத்தும் பாற்கடலில் மூழ்கின. தான் மீண்டும் பழைய நிலைக்கு வரவேண்டும் என்று பிரம்மனை நோக்கித் தவமிருந்தான். பிரம்மா தோன்றி, ""நீ நல்ல நிலைமைக்கு வரவேண்டுமென்றால் ஸ்ரீமஹாவிஷ்ணுவை அணுகி அவர் உதவியை நாடு'' என்று வரமருளினார். மஹாலட்சுமியையும் திருமாலையும் துதித்து மீண்டும் நல்ல நிலைமைக்கு வந்தான் இந்திரன்.
செல்வம், நிலம், கல்வி, அன்பு, புகழ், அமைதி, மகிழ்ச்சி, வலிமை என்ற எட்டு சக்திகளையும் பெற்ற "அஷ்டலட்சுமி'யை பெற இந்திரன் எவ்வாறு ஸ்ரீலட்சுமியை துதி செய்து அனைத்தையும் அடைந்தானோ, அதேபோன்று நாமும் பெற அனுஷ்டிப்பதே "வரலட்சுமி விரதம்!'
திருமணமான பெண்கள் தங்கள் திருமாங்கல்யம் நிலைத்திருக்கவும், செல்வம் சேரவும், நோயின்றி வாழவும், குழந்தைகள் கல்வியில் மோலோங்கவும் இந்த "வரலட்சுமி விரத'த்தை கடைப்பிடித்து, ஒவ்வொரு வருடமும் பூஜை செய்ய வேண்டும்.
வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில் பூஜைக்கான இடத்தைத் தேர்ந்தெடுத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு, ஒரு சிறுமண்டபம் போன்று அமைத்து, மலர்களால் அலங்கரித்து, அந்த மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல் அல்லது அரிசியைப் பரப்பி, அதன்மீது மாவிலை கொத்துடன் கூடிய தேங்காய் கலசத்தை வைத்து, அந்த கலசத்திற்கு புதிய ஆடை, தங்க ஆபரணம் சார்த்தி, "வரலட்சுமியின் முகத்தை தேங்காயின் மீது பதித்து மலர்சூட்டி அலங்கரித்து வைக்க வேண்டும்.
பூஜை ஆரம்பிக்கும் முன் நல்ல நேரத்தில் ஒரு தாம்பாளத்தில் அரிசியை நிரப்பி, அதன்மேல் கலசத்தை வைத்து, வாசலின் உள்நிலைப்படி அருகே வைக்கவேண்டும். பின்பு தூப தீபம் கற்பூரம் காட்டி, ஆரத்தியெடுத்து வரலட்சுமியை, "வரலட்சுமி தாயே என் வீட்டிற்கு வரவேண்டும்' என்று பயபக்தியோடு அழைத்து வந்து அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் கொண்டு வந்து வைத்து, மங்களகரமான தோத்திரங்களை சொல்லி, பாடவேண்டும்.
விநாயகர் பூஜை முடித்து, வரலட்சுமி மீதான ஸ்தோத்திரப் பாடல்களைப் பாடி அஷ்டோத்ர அர்ச்சனைகள் செய்து, பழங்கள் மற்றும் உணவுகளை நைவேத்தியம் செய்து, தூப தீப கற்பூர ஆரத்திகாட்டி, பூஜையை முடிக்க வேண்டும்.
பூஜை முடிந்த பின்னர், அஷ்டலட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்ற கருத்தில் மஞ்சள் நூலிலான சரடை எடுத்து ஒன்பது முடிச்சுகளைப் போட்டு நடுவில் ஒரு புஷ்பம் கோர்த்து அந்த மஞ்சள் நூலை பெண்களின் வலது கையில் அவர்களது கணவன்மார்கள் கட்டிவிட வேண்டும். கணவன் வீட்டிலோ, ஊரிலோ இல்லாத பட்சத்தில் வேறு ஒரு சுமங்கலிப் பெண் இதைக் கட்டலாம். பின்னர், சுமங்கலிப் பெண்களுக்கு தாம்பூலம் கொடுத்துவிட்டு பூஜையை நிறைவு செய்ய வேண்டும். வரலட்சுமி பூஜையை அனுஷ்டிப்பதால் நம் வீட்டில் என்றும் சகல சௌபாக்கியங்களும் நிறைந்திருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கைக்கு ஏற்பாடுகள் தயாா்: மாவட்ட தோ்தல் அதிகாரி!

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் சித்திரைப் பெளா்ணமி தேரோட்டம்

ராமநாதபுரத்தில் மே தினப் பொதுக் கூட்டம்

சித்ரா பெளா்ணமி: வி.என்.பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


