ஒரு காலத்தில் பசுக்களுக்கு கொம்புகள் இல்லாமல் இருந்தது. இதனால் பசுக்களை கொடிய மிருகங்கள் கொடுமைப் படுத்தின. வருத்தமடைந்த பசுக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சிவனை வேண்டி கொம்புகளை பெற்ற தலம் இது.
இத்தலத்தை பசுக்களின் தாய் ஊர் என்பார்கள். பசுவின் உடலில் பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்கள் வசிக்கின்றனர். பசுவே இங்கு வந்து, இத்தல இறைவனை பூஜித்ததால் மிகவும் பெருமை பெற்ற தலமாக திருவாமாத்தூர் திகழ்கிறது. மேலும் இத்தல இறைவன் அபிராமேஸ்வரர் பசுவின் கால் குளம்பை தலையில் தாங்கியபடி அருள்பாலிப்பது, அற்புதமான அரிய காட்சியாகும்.
விழுப்புரத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் செஞ்சி செல்லும் வழியில் திருவாமத்தூர் தலம் உள்ளது. இத்தலத்தில் ஈசன் அபிராமேஸ்வரர் என்ற திருநாமத்துடனும் இறைவி பார்வதி முத்தாம்பிகை அம்பாளாகவும் எழுந்தருளிஅருள்பாலிக்கின்றனர்.
இறைவனான அபிராமேஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்பு லிங்கமாக காட்சி தருகின்றார். எதிரில் அம்மன் தனிக்கோயிலில் மேற்கு பார்த்தும் அருள்புரிகின்றார். அன்னை "முத்தாம்பிகை'யை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. அம்மன் திருமேனியில் நாகப்பாம்பின் வால்பகுதி அமைந்துள்ளது.
சிவன் கோயிலுக்கும் அம்மன் கோயிலுக்கும் இடையில் துளை (சன்னல்) ஒன்று உள்ளது. இதன்வழியாக அம்மனும் சிவனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதாக ஐதீகம். திருவட்டப்பாறை என்ற சிவலிங்கமூர்த்தி, இங்கு விசேஷம். இதன்முன்பு அமர்ந்து ராமனும் சுக்ரீவனும் ராவணனை வதம் செய்வதற்கு, அனுமனிடம் சான்றுடன் நட்பு உடன்படிக்கை செய்து கொண்டதாக இத்தல வரலாறு சொல்கிறது. கருவறை "அகழி' அமைப்பாகயிருக்கிறது.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் இது 232 -ஆவது தலமாகும்.
பிரகாரத்தில் மால்துயர் தீர்த்த விநாயகர், முருகன், நடராஜர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, பிட்சாடனர், சகஸ்ரலிங்கம், சட்டநாதர், காசிவிஸ்வநாதர், அருணாச்சலேஸ்வரர், ராமன், சப்த கன்னிகைகள், நால்வர், 63 நாயன்மார்கள், சண்டேஸ்வரர், பைரவர், நவக்கிரக சந்நிதிகள் உள்ளன.
தென்மேற்கு மூலையில் " வட்டப்பலகை' என்ற சத்திய மண்டபம் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து, உள்ளே நாம் நுழைந்தவுடன் சுதையால் ஆன பெரிய நந்தியும் பாதாள நந்தியும் கொடிமரமும் பலிபீடமும் காட்சி தருகின்றன. கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் கோப்பர கேசரி வர்மன், முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திர சோழன், வீர ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன் ஆகியோரது காலத்து கல்வெட்டுகள் உள்ளன.
ராவணனை வதம் செய்த ராமன் தமது பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட தலமாகும். அகுணகிரிநாதர் தம் திருப்புகழில் இத்தல முருகனைப் பாடியுள்ளார். ஈசனை மட்டுமே வணங்கிவந்த பிருகு முனிவர், இத்தலத்தில், பார்வதி தேவியின் சாபத்தால் வன்னி மரமாக மாறியதாக தல வரலாறு சொல்கிறது. அவரே இத்தலத்தின் விருட்சமாக சுவாமி அம்பாள் சந்நிதிகளுக்கு இடையில் அருள்பாலிக்கிறார் என்பது மிகவும் சிறப்பாகும். இத்தல இறைவன் இறைவியை வணங்குவதால் திருமணத்தடை நீங்கும்; புத்திர பாக்கிய பாக்கியம்கிடைக்கும் என்பது ஐதீகம்.
- களக்காடு வ. மாரிசுப்ரமணியன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










