பாதுகாவலராம் சூசைத் தந்தை!

திருக்குடும்பம் என்று கிறிஸ்துவர்களால் அழைக்கப்படுவது அன்னை மரியாள், சூசையப்பர், இறைமகன் இயேசு ஆகியோரை உள்ளடக்கிய மூவர் கொண்ட குடும்பமாகும்.
Updated on
2 min read

திருக்குடும்பம் என்று கிறிஸ்துவர்களால் அழைக்கப்படுவது அன்னை மரியாள், சூசையப்பர், இறைமகன் இயேசு ஆகியோரை உள்ளடக்கிய மூவர் கொண்ட குடும்பமாகும். கடவுளுடைய மீட்புத் திட்டத்தில் புனித சூசையப்பர் அன்னை மரியாளுக்கும் குழந்தை இயேசுவுக்கும் பாதுகாவலராக இருந்து செயலாற்றினார். கடவுளால் திருக்குடும்பத்தின் தலைவராக தேர்ந்து கொள்ளப்பட்ட இவர் கடவுளுடைய தனிப்பட்ட அருள் வரங்களைப் பெற்று நிறைவாக வாழ்ந்தவர். பெத்லகேமில் தாவீது அரச குடும்பத்தில் பிறந்த இவர், தச்சுத் தொழிலின் மூலம் தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். மார்ச் மாதம் முழுவதுமே சூசையப்பருக்காக அர்ப்பணிக்கப்பட்ட மாதம். மார்ச் -19 ஆம் நாள் அவருடைய திருநாளை திருச்சபை கொண்டாடுகிறது.
இறைமகன் இயேசு ஒரு கன்னியிடம் இருந்தே பிறப்பார் என்று இறைவாக்கினர்கள் அறிவித்ததற்கிணங்க, அன்னை மரியாள் தூய ஆவியின் வல்லமையால் கருவுற்றார்கள். ஆனால் அப்போது இதை அறியாத சூசையப்பர் மரியாளின் கர்ப்பத்தை அறிந்து கலக்கமுற்றார். யூத சட்டப்படி அத்தகைய பெண்ணை குடும்பத்தினின்று புறம்பே தள்ளி, பொது தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். ஆனால் விவிலியம் கூறுகிறது - "அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்' (மத்தேயு 1:14) 
நீதிமானாகிய சூசையப்பரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம்,- பிறர் மேல் எந்த புழுதியும் வாரித் தூவாமல் இருத்தல், குழப்பமான, கலக்கமான மனநிலையிலும் கூட, மரியாளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். இத்தகையான பெருந்தன்மையான குணம் நமக்கும் இருக்க வேண்டும். அடுத்தவர்களின் தவறுகளை பலருக்கும் தெரியபடுத்தி அவர்களின் பெயரைக் கெடுக்கும் சிறு மனம் கொண்டவர்களாக இல்லாமல் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக, கடவுளுடைய திருவுளத்திற்கு உடனே, கீழ்படிபவராக வாழ்ந்தார். மரியாளின் கர்ப்பத்துக்கு காரணம் தூய ஆவி என்று தெரிந்தவுடன் உடனே தயங்காமல் அவரை ஏற்றுக்கொண்டார். இறைமகன் இயேசு அரசராவார் என்பதை அவையிலுள்ள ஞானிகள் முன்னறிவிக்கக் கேட்டு, தனக்குப் போட்டியாக இயேசு வளர்ந்தபின் தனது பதவியைப் பறித்து விடுவாரோ என்ற அச்சத்தில், குழந்தை இயேசுவையும் அவரையொத்த ஆண் மகவுகளையும் கொல்லுமாறு ஏரோது அரசன் கட்டளை பிறப்பித்தான்.
அப்போது வானதூதர் சூசையப்பரின் கனவில் தோன்றி குழந்தை இயேசுவை உடனே எகிப்துக்கு கொண்டு செல்லுமாறு பணித்தார். இரவோடிரவாக, உடனே தாயையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு எகிப்துக்கு கூட்டிச் சென்றார். இறை சித்தத்திற்குப் பணிந்து நடக்கும் நல் உள்ளம் கொண்டவர்களால் சூசையப்பரைப் போன்று வாழ நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
குடும்பத்தைப்பேண தச்சுத் தொழில் செய்துவந்த சூசையப்பர் தொழிலாளர்களின் பாதுகாவலராகவும் கருதப்படுகிறார். இயேசுவும் மரியாவும் உடனிருக்கும்போது மரித்த சூசையப்பரை, நன்மரணத்துக்கு பாதுகாவலராக திருச்சபை நமக்குத் தந்திருக்கிறது. துர்மரணம் நேராமல் இருக்க நாம் புனித சூசையப்பரிடம் மன்றாட வேண்டும். 
குழந்தை இயேசுவை அன்பிலும் ஞானத்திலும் வளர்த்த சூசையப்பரை கல்விக்குப் பாதுகாவலர் எனவும் கொண்டாடுகிறோம். இதனாலேயே இவரது பெயரைக் கொண்டு பல கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன. திருச்சியிலுள்ள புனித வளனார் கல்லூரி இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. புனித சூசையப்பரின் பாதுகாவலில் நாமும் நேர்மையிலும் நீதியிலும் ஞானத்திலும் வளர இறைவனிடம் வேண்டுவோமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com