காலனை கடிந்த கால சம்ஹாரமூர்த்தி!

தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான ஸ்ரீஅமிர்தகடேஸ்வர சுவாமி தேவஸ்தானம் எட்டு வீரட்டத்தலங்களில் ஒன்றாகும்.
காலனை கடிந்த கால சம்ஹாரமூர்த்தி!

தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான ஸ்ரீஅமிர்தகடேஸ்வர சுவாமி தேவஸ்தானம் எட்டு வீரட்டத்தலங்களில் ஒன்றாகும். தேவாரப் பதிகம் பெற்ற காவிரித் தென் கரைத் தலங்களில் இத்தலம் 47 -ஆவது தலமாகும். இறைவன் மார்க்கண்டேயருக்காக யமனை உதைத்ததலம். மார்க்கண்டேயர் அமுதகடேசுவரை வழிபட்டு என்றும் 16 ஆண்டாக இருக்கும் சிரஞ்சீவித்தன்மையை பெற்றார்.
 இத்தலவரலாற்றினை குறிக்கும் விதமாக காலசங்காரக் கடவுள் இவ்வாலயத்தின் மகாமண்டபத்தின் வடபால், சிற்ப வேலைப்பாட்டுடன் கூடிய அழகிய சபையில், யமனை
 நிக்கிரகானுக்கிரம் செய்த அவதாரத்தில் (தோற்றநிலை) தெற்கு முகமாக எழுந்தருளியுள்ளார். வலகத்திருக்கரங்களில் சூலமும், மருவும் உள்ளன. இடத்திருவடியால் உதையுண்ட யமனார் தலைகீழாக வீழ்ந்து கிடக்கின்றார். வீழ்ந்து கிடக்கும் யமனை ஒரு சிவபூதம் கயிறுகட்டி இழுத்து அப்பறப்படுத்தும் காட்சி காணற்கரியது.
 இறைவனார் வலப்பக்கத்தில் ஸ்ரீ மார்க்கண்டேயர் அருளுருவாய்க் காட்சியளிக்கிறார். இடப்பக்கத்தில் பாலாம்பிகை திருமகள், கலைமகளாகிய சேடியருடன் விளங்குகின்றார். இம்மூர்த்திக்கு எதிரில் வடக்கு முகமாக, யமனார் (உற்சவமூர்த்தி) எருமையுடன், ஆண்டவன் அருளை நாடிய வண்ணமாக ஆட்சித் திருக்கோலத்தில் காணப்படுகின்றார்.
 காலசங்காரக் கடவுளாகிய காலசம்ஹாரமூர்த்திக்கு ஆண்டில் பன்னிரெண்டு முறை அபிஷேகம் நடைபெறுகின்றது. சித்திரைப் பெருவிழாவில் ஆறாம் திருநாள் மட்டும் தான் வீதியுலா வருவார். மாசி மாதம் கும்ப சதுர்த்தசி திதியில் இரவு இரண்டாம் காலம் இம்மூர்த்திக்கு நடைபெறும் அபிஷேகம் மிகவும் சிறப்பாக கருதப்படுகின்றது.
 இவ்வாண்டு, இவ்வைபவம் பிப்ரவரி 18 -ஆம் தேதியன்று நடைபெறுகின்றது. மூலஸ்தானத்திலேயே இம்மூர்த்திக்கு நடைபெறும் இந்த அபிஷேகத்தை கண்ணாறக்கண்டு இறைவனையும், இறைவியையும் வழிபட்டு எம பயம் நீங்கி, நீண்ட ஆயுளுடன் ஆரோக்யமாக வாழும் பேற்றினைப் பெறுவோம்.
 தொடர்புக்கு: 04364 - 287429.
 - எஸ். கோவிந்தராஜன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com