பொருநை போற்றுதும்! - 105

வைத்தமாநிதி முடும்பைக் குடும்பம் வைத்தமாநிதி முடும்பைக் குடும்பம் தமிழுக்கும் இலக்கியத்திற்கும் அளித்திருக்கக்கூடிய பங்கு வெகுவானது.
பொருநை போற்றுதும்! - 105

வைத்தமாநிதி முடும்பைக் குடும்பம் வைத்தமாநிதி முடும்பைக் குடும்பம் தமிழுக்கும் இலக்கியத்திற்கும் அளித்திருக்கக்கூடிய பங்கு வெகுவானது. முடும்பை என்பது காஞ்சிபுரத்திற்கு அருகிலிருந்த சிறிய கிராமம். ராமானுஜர் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தைப் பாதுகாப்பதற்காகத் தோற்றுவித்த 74 சிம்மாசனாதிபதிகளில், முடும்பை நம்பியும் முடும்பை அம்மாளும் அடங்குவர். முடும்பை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள் என்று கருதப்படுகிறது. இவர்களின் வழித்தோன்றல்கள், காலப்போக்கில், தமிழ், தெலுங்கு, கன்னடப் பகுதிகளில் வெவ்வேறு ஊர்களிலும் இடங்களிலும்  குடியேறினாலும், "முடும்பை' என்பதைக் குடும்பப் பெயராகக் கொண்டனர். 

இப்படியொரு முடும்பைக் குடும்பத்திற்குத் திருக்கோளூர் வைத்தமாநிதிப் பெருமாள் குலதெய்வம் ஆவார். ஆகவே, அக்குடும்பம், வைத்தமாநிதி முடும்பைக் குடும்பம் ஆனது. 

இந்தக் குடும்பத்தில் வந்து வாழ்க்கைப்பட்டவர்தாம், வை. மு. கோதைநாயகி அம்மாள். 

இதே குடும்பத்தைச் சேர்ந்த இன்னும் இருவரைப் பற்றியும் தமிழ் இலக்கிய  உலகம் என்றென்றும் பெருமையோடு எண்ணும். இவர்களில் ஒருவர், கும்பகோணம் அரசுக் கல்லூரியில் தமிழ்ப் புலவராக விளங்கியவரும், பற்பல உரைகளை அக்காலத்திலேயே யாத்தவருமான வை. மு. சடகோப ராமானுஜாசார்யர் ஆவார். பத்துப்பாட்டு உட்பட, பழந்தமிழ் இலக்கிய நூல்கள் பலவற்றுக்கும் உரை எழுதியவர் இவர். இலக்கண நூலான நன்னூலுக்குக் காண்டிகை உரையும், திருக்குறள் பரிமேலழகர் உரைக்கு விளக்கமும் இயற்றியவர். ஆழ்வார்கள் வரலாறும் பட்டர் வைபவமும் என்னும் உரைநடை நூலையும், நம்மாழ்வாரின் திருவிருத்தப் பாசுரங்களுக்கான விளக்கவுரையையும் எழுதியிருக்கிறார்.  

இன்னொருவர், கம்பராமாயண உரையாசிரியராகப் பலராலும் அறியப்படும் வை.மு. கோபாலகிருஷ்ணமாசார்யர் ஆவார்.  வை.மு. சடகோப ராமானுஜரிடம் தமிழ்ப் பயிற்சியும் உரைப் பயிற்சியும் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அகராதிப் பணியிலும் பெரும்பங்கு ஆற்றியவர். இவருடைய கம்பராமாயண உரை இன்றளவும் வை.மு. உரையாக, வைத்தமாநிதி உரையாகவே போற்றப்படுகிறது. 

வை.மு. குடும்பம், பெருமளவில் சென்னைத் திருவல்லிக்கேணியிலேயே வாழ்ந்தது என்றாலும், இன்றளவும் இக்குடும்ப வழித்தோன்றல்கள் சென்னையில் வசிக்கின்றனர் என்றாலும், வைத்தமாநிதியின் அருட்புனலாக, பொருநையாளின் நீரோட்டம், தமிழ் மரபுக்குத் தனித்துவம் தந்துகொண்டிருக்கிறது. 

என் வடிவம் உனக்கும், உன் வடிவம் எனக்கும்....

திருக்கோளூருக்கும் ஆழ்வார் திருநகரிக்கும் தென்கிழக்காக இருக்கிறது தென் திருப்பேரை. 

சிறிய ஊர்; பெரிய ஆலயம். 

இங்கே எழுந்தருளியிருக்கும் எம்பெருமான், அருள்மிகு மகர நெடுங்குழைக் காதர். 

இந்தத் தலம் குறித்து சுவாரசியமான கதையைத் தருகிறது பிரம்மாண்ட புராணம். பெருமாளுக்கு ஸ்ரீதேவி, பூதேவி என்று இரண்டு பத்தினியர் அல்லவா? (மனித வாழ்க்கைக்கு, பூமியின் வளங்களும் வளமையும், செல்வம் மற்றும் பிற பெüதீகச் சார்புகளும் தேவை என்பதைத்தான், நம்முடைய முன்னோர்கள் இவ்வாறு பூதேவியாகவும் ஸ்ரீதேவியாகவும் உருவகப்படுத்தினார்கள் என்பது இதன் உள்ளுறைப் பொருள்). 

ஒருமுறை, துர்வாசர் வைகுண்டம் சென்றாராம். அப்போது, அங்கு ஸ்ரீதேவி மட்டும் தனியாக இருக்க, காரணம் வினவிய முனிவரிடம், "பூமாதேவியை நீரிலிருந்து அணைத்து மீட்ட நினைவு அவருக்கு வந்துவிட்டது. 

ஆகவே, அவளிடமே சென்றுவிட்டார். அதுவும் அவர் கார்மேக வண்ணன். பூதேவியோ அவரைப்போலவே கரும்பச்சைக்காரி. இருவரும் ஒன்றிவிட்டார்கள். வெளுப்பான என் வண்ணம் அவருக்கு அலுத்துவிட்டது போலும். பூமியின் வடிவம் எனக்கு வராதா?' என்று பலவகையாக ஆதங்கப்பட்டாள். 

"இவ்வளவுதானே, இதற்கேன் கவலைப்படுகிறாய் தாயே' என்று ஆறுதல் கூறிவிட்டுப் புறப்பட்ட துர்வாசர், பூதேவியின் இருப்பிடம் அடைந்தார். திருமால் தன்னோடு இருப்பதில் புளகாங்கிதம் அடைந்திருந்த பூமித்தாய், முனிவர் வந்ததை கவனிக்கவில்லை. போதாதா அவருக்கு? இதுதான் சாக்கு என்று சாபம் இட்டார். "திருமகளின் வண்ணம் நீ பெறுவாய்' என்று சபித்துவிட்டுச் சென்றுவிட்டார். 

அவ்வளவுதான், பூமி வெளுத்தது; பச்சைப் பசுமை காணாமல் போனது. ஏதோ தவறென்பதைத் தெரிந்துகொண்ட திருமால், வைகுண்டம் மீண்டார். 

துர்வாசரால் வந்த சாபம் என்பதை உணர்ந்த பூதேவி, அவரைத் தேடி வணங்க, "பொருநைக் கரையிலுள்ள கரிபதம் என்னும் தலத்தில் நீராடி வழிபட்டால், மீண்டும் உன்னுடைய பச்சைப் பொலிவைப் பெறுவாய்' என்று விமோசனத்திற்கு வழியுரைத்தார். 

இதன்படியே, திருமகளின் வடிவத்தைப் பெற்றுவிட்ட நிலமகள், இங்குத் தவம் செய்ய வந்தாள். "பேரம்' என்னும் சொல்லுக்கு "வடிவம்' அல்லது "உருவம்' என்று பொருள். 

ஸ்ரீதேவியின் பேரத்தைத் தாங்கிய நிலமகள் இங்குத் தவம் செய்ததால், உருவத்தின் பெயரால், இத்தலம் "திரு பேரம்' அல்லது "திருப்பேரை' என்று அழைக்கப்படலானது. தென்திசையில் உள்ளது என்பதாலும், காவிரிக் கரை பேர் நகர் என்னும் தலத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டவும், காலப்போக்கில் "தென்' என்னும் அடைமொழி சேர்க்கப்பட்டுத் "தென் திருப்பேரை' ஆகிவிட்டது. 

(தொடரும்)  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com