பாமணி நாகநாதரும் சிம்ம தட்சிணாமூர்த்தியும்
சுக்ல முனிவர் தினந்தோறும் சிவபெருமானை வழிபட்டு வந்தார். தான் வளர்த்த காமதேனுவின் பாலைக் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வந்தார்.


சுக்ல முனிவர் தினந்தோறும் சிவபெருமானை வழிபட்டு வந்தார். தான் வளர்த்த காமதேனுவின் பாலைக் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வந்தார். ஒருநாள் காமதேனு வனத்துக்குச் சென்று மண்ணால் ஆன சுயம்பு சிவலிங்கத்தின் மீது பால் சொரிவதைக் கண்டு கோபித்து காமதேனுவை அடித்தார் முனிவர். காமதேனு ஓடிச்சென்று அங்கிருந்த சிவலிங்கத்தின் மீது முட்டி தனக்கு நேர்ந்த நிலையை உணர்த்திய பின்னர், அருகில் உள்ள பசுபதி தீர்த்தத்தில் விழுந்து இறந்தது. இறைவன் காட்சித் தந்து பசுவை உயிர்ப்பித்தார்.
காமதேனு முட்டியதால் மூலத்திருமேனி மூன்று வடுக்களைப் பெற்றுக் காட்சி அளித்தது. பாமணியில் முப்பிரிவாகப் பிளந்த சுயம்புலிங்கத்தை செப்புத் தகட்டால் ஒன்றாக இணைத்து வழிபடப்படுகிறது.
அஷ்ட நாகங்களுக்கும், ராகு-கேதுவிற்கும் தலைவனான ஆதிசேஷன் மனித முகம், பாம்பு உடலுடன் பாமணி நாகநாதரை பூஜை செய்ததால் சிவானுக்கிரகம் பெற்றது. பாதாளத்திலிருந்து இத்தலத்திற்கு வந்ததால் பாதாளேச்சரம் என்ற பெயர் உண்டானது. சம்பந்தர் பாட்டில் "பாதாளேச்சுரம்' என்றும், சுந்தரர் "பாம்பணி' என்றும் குறிப்பிடுகிறார்.
"பூவுலகாம் ஈங்கும் பாதாள முதல் எவ்வுலகும் எஞ்ஞான்றும் தாங்கும் பாதாளேச்சரத்து அமர்ந்தோய்' என்று வள்ளல்பெருமான் இவரைப் பாடுகிறார்.
வனத்தில் சுவாமியின் மேல் பாம்புகள் அடிக்கடி ஊர்ந்து சென்றதால் பாம்பணி மருவி "பாமணி' என்றானது.
ஆதிசேஷன் தனஞ்செய முனிவராய் ஐப்பசி முதல்நாள் வணங்க வந்தபோது எங்கும் லிங்கத் திருமேனிகளாய் கண்டதால் கால் இல்லாமல் இடுப்பிற்குக் கீழே பாம்பு வடிவும், மேலே மனித வடிவும் கொண்டு தவழ்ந்து வந்து மூலவரை வணங்கினார் . அதே உருவில் நாகநாதருடைய பக்தர்களை ராகு, கேது, கால சர்ப்ப தோஷ நிவர்த்தி வழங்க இறைவன் நியமிக்க அப்பணியைச் செவ்வனே செய்ய ஆரம்பித்தார். இங்கு எங்கும் தரிசிக்க முடியாத தனஞ்செயனான ஆதிசேஷனுக்கு தனி சந்நிதி உள்ளது. அவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட நாகதோஷம், ராகு கேது தோஷம், காலசர்ப்பதோஷம் நீங்கி பலனடைகின்றனர்.
ஐப்பசி முதல் நாளில் சோறு, குழம்பு, காய்கறி வகைகள், வடை, பாயசம் சமைத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து நிவேதித்தால் தோஷம் நிவர்த்தியாகிறது. பச்சை திராட்சை, மாங்கனி, மாம்பழச் சாறு இங்கு சிறப்பு நிவேதனமாக படைக்கிறார்கள். இங்கு பைரவரும், சனிபகவானும் சேர்ந்து அருள்வதால் சனிதோஷ நிவர்த்தி தலமாகவும் உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற இத்திருத்தலத்தின் இறைவன் நாகநாதசுவாமி, சர்ப்ப புரீசுவரர், பாம்பணிநாதர் எனப்படுகிறார். மாமரம் தலமரமாகவும் பஞ்ச தீர்த்தம் உடைய இக்கோயிலின் நின்றகோல அம்பாள் அமிர்தநாயகி என வணங்கப்படுகிறாள்.
முகப்பு வாயிலில் நுழைந்தவுடன் வலப்புறம் அமிர்தநாயகி அம்பாள் சந்நிதி உள்ளது. உள்நுழைவு வாயிலின் நேரே கருவறையில் மூலவர் நாகநாதர் லிங்க வடிவில் காட்சி தருகிறார். உள்பிராகாரத்தில் சூரியன், தலவிநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, துர்வாசர், சாஸ்தா, காலபைரவர், சனிபகவான், நவகிரகம், நால்வர், நடராஜ சபை உள்ளது. வெளிப்பிரகார கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை ஆகியோர் இருந்து அருளுகின்றனர்.
ஒருமுறை தட்சிணாமூர்த்தியின் சீடர்கள் நால்வரும் விஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் சென்றனர். இவர்களை துவார பாலகர்கள் தடுக்க கோபத்தில் இவர்களுக்கு சாபம் தர முனிவர்களுக்கு தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் நீங்க பாமணி நாகநாதரையும், சிம்ம தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு தங்கள் தோஷம் நீங்கப் பெற்றனர்.
மன்னார்குடியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள பாமணிக்குச் சென்று, அங்குள்ள உரத்தொழிற்சாலை சாலையில் சென்றால் கோயிலையடையலாம்.
ராகு-கேது பெயர்ச்சியின்போது இல்லாவிடினும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது ஒருமுறை சென்று வணங்கி வர பலன்களைத் தேடி வந்து கொடுக்கும் தலமிது.
மேலும் விவரங்களுக்கு: 6381006196.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...