வளம் தரும் வட சபரி!
சென்னையில் பல ஐயப்பன் கோயில்கள் இருந்தாலும் ராஜா அண்ணாமலைபுரம், மகாலிங்கபுரம், அண்ணா நகர் ஆகிய இடங்களில் உள்ள கோயில்கள் பிரசித்தம்.


சென்னையில் பல ஐயப்பன் கோயில்கள் இருந்தாலும் ராஜா அண்ணாமலைபுரம், மகாலிங்கபுரம், அண்ணா நகர் ஆகிய இடங்களில் உள்ள கோயில்கள் பிரசித்தம். இவற்றில், ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ஐயப்பன் கோயில் யாரால், எப்போது அமைந்தது என்பதைப் பார்க்கலாம்:
செட்டிநாடு அரச குடும்பத்தினர் மற்றும் அவர்களது வழித்தோன்றல்கள் பக்தி மிக்கவர்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைவேந்தர் அமரர் எம்ஏஎம் ராமசாமி செட்டியார் மற்றும் அவர்களது தணிக்கையாளர் மற்றும் நண்பருமான குருசாமி பி.டி.சம்பத்குமார் உள்ளிட்டோர் கடும் விரதமிருந்து கடந்த 1973}ஆம் ஆண்டில் சபரிமலைக்கு சென்றனர். தங்களுடன் மேலும் 50 ஐயப்ப பக்தர்களை அழைத்துச் சென்று ஐயப்பனை தரிசித்து விட்டுத் திரும்பிய எம்ஏஎம் ராமசாமி செட்டியாரின் மனதில் ஓர் எண்ணம் உதித்தது. அதை ஐயப்பனின் கட்டளையாகவே கருதினார்.
"சென்னையில் ஓர் ஐயப்பன் கோயில் கட்ட வேண்டும்' என்ற விருப்பத்தை எம்ஏஎம் ராமசாமி செட்டியார் தனது தந்தை ராஜா சர் முத்தையா செட்டியாரிடம் கூறினார். அவர் உடனே ராஜா அண்ணாமலை புரத்தில் செட்டிநாடு அரண்மனைக்கு எதிரிலேயே கோயில் கட்டுவதற்கு நிலத்தை ஒதுக்கித் தந்தார்.
இதைத் தொடர்ந்து, பலமுறை சபரி மலைக்குச் சென்று ஆராய்ந்து ஆகம முறைப்படி கோயில் கட்டத் தேவையான தகவல்களைத் தொகுத்தனர். பின்பு நாகர்கோவிலைச் சேர்ந்த பட்டன் ஆச்சாரி ஐயனின் திருவுருவச் சிற்பத்தை உருவாக்கினார். நாகர்கோவிலில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் வார்க்கப்பட்ட ஐயப்பனை 25.1.1981}இல் ரத யாத்திரை மூலம் சென்னைக்கு கொண்டு வந்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள திருத்தலங்களின் வழியாக சுமார் 7 ஆயிரம் கி.மீ. பயணித்து வந்த ஐயப்பன் 9.2.1981 }இல் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் எழுந்தருளினார்.
தேவார பாடல்கள் இசைக்க, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடம் குரு மகா சந்நிதானம் மற்றும் ஸ்ரீ சந்நிதானம் முன்னிலையில், சபரி மலையில் இருந்து கொண்டு வரப்பட்ட ஐயப்ப ஜோதியானது பதினெட்டு படிகள் வழியாக மேலேறி ஐயனின் சந்நிதியில் திருவிளக்கேற்றி, ஆயிரக் கணக்கான பக்தர்களின் கோஷத்துடன் முதல் குடமுழுக்கு விழா 29.1.1982 }இல் நடைபெற்றது.
அன்று முதல் இக்கோயில் "வட சபரி' என்று அழைக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ளது போலவே இங்கும் 18 படிகள் உள்ளன. பூமியிலிருந்து 22 அடி உயரத்தில் ஐயனின் சந்நிதானம் அமைக்கப்பட்டுள்ளது. ஐயனுடன் கன்னி மூல கணபதி, நாகராஜா, மாளிகைபுரத்து அம்மன், சின்ன கருத்த சாமி, பெரிய கருத்த சாமி கருப்பாயி ஆகிய தெய்வங்களும் உள்ளன. சென்னையில் உள்ள ஐயப்ப பக்தர்களுக்கெல்லாம் இந்த வட சபரியானது ஒரு வரப்பிரசாதமாக விளங்குகிறது!
இக்கோயிலின் நான்காவது குடமுழுக்கு விழா வரும் 2021}இல் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...