சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மார்கழியின் மேன்மை!

கண்ணபிரான் கீதையில் "மாதங்களில் நான் மார்கழியாக இருப்பதாக'க் கூறியுள்ளார்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 5:17 am

முனைவர் எஸ்.சுந்தரம்


கண்ணபிரான் கீதையில் "மாதங்களில் நான் மார்கழியாக இருப்பதாக'க் கூறியுள்ளார். இம்மாதத்தில், வைகறையில் ஐந்து முதல் ஒன்பது வயது வரையுள்ள பெண் குழந்தைகள், கன்னியர்கள் அதிகாலை துயிலெழுந்து, மற்ற தோழியரையும் துயிலெழுப்பிச் சென்று, நதியில் நீராடுவர். பின்னர், ஈர நுண்மணலால் காத்யாயனி தேவியின் உருவம் ஒன்றைச் சமைத்து, மழைவேண்டியும், உத்தம நாயகர்களை அடைந்து இம்மை, மறுமைப் பயன்களைச் சிறப்புற எய்தவும் வழிபாடு செய்வது பண்டைய மரபாகும். இவ்வாறு வழிபடும் இடம் "பாவைக்களம்' எனப்படும்.

"மார்கழித் திருவாதிரை முழு நிலவு நாளாகும். இதற்குப் பத்து நாள்கள் முன்பு தொடங்கி, சிலர் இவ்வழிபாடு செய்வர்' என்று சங்கத் தமிழ் நூலான பரிபாடலில் கூறப்பட்டுள்ளது. மார்கழி வழிபாடு பற்றிய குறிப்புகள் நற்றிணை, அகநானூறு, குறுந்தொகை முதலிய நூல்களிலும் காணப்படுகிறது.

இளம்பெண்டிர், தத்தம் தாய்மாருடன் தைத்திங்களில் நீராடி நோன்புடன் வழிபடுவது, "அம்பாவாடல்' எனப்படும். இறைவன் திருவருளைப் பெற, இந்தப் "பாவை நோன்பு' கடைப்பிடிக்கப்பட்டது.

மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில், தம் பக்திப் பெருக்கால் அளித்த அருட்பாமாலை "திருவெம்பாவை' (20 பாடல்கள்), "திருப்பள்ளியெழுச்சி' (10 பாடல்கள்), ஸ்ரீவில்லிபுத்தூரில் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் நாச்சியார் பாடி அருளிய "திருப்பாவை' (30 பாசுரங்கள்) ஆகியவை மார்கழி வழிபாட்டின் மகிமையை உணர்த்துகின்றன. விடியல்வேளையில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடியும், பாடுவதைச் செவிகுளிரக் கேட்டும் பயன்பெறுதல் நன்று.

அதிகாலையில் உறக்கத்திலிருந்து தாமாகவே விழித்தெழ வேண்டும். இல்லையெனில் மற்றவர் எழுப்பினாலாவது எழவேண்டும். பின்னர், நீராடி, மலர்தூவி, மனத்தூய்மையோடு வழிபாடு செய்ய வேண்டும். இதன் பொருள் என்ன? "உலக வாழ்க்கை' என்கிற பேருறக்கத்தில் ஆழ்ந்துள்ள மக்கள், "தம் வாழ்க்கையின் உண்மையான குறிக்கோள் எது? என்பதை உணர வேண்டும். அதையடைய ஆவன செய்ய வேண்டும்' என்பதே மார்கழி வழிபாட்டின் மறைபொருளாக அமைந்துள்ளது.

நோன்பு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறை, அது நிறைவடைகையில் செய்ய வேண்டியவை எவை என்பதெல்லாம் திருப்பாவையில் விவரமாகக் கூறப்பட்டுள்ளது. சிறுமியர் பறைகொட்டி முழக்கியவாறே "பாவைக்களம்' செல்வர்.

திருப்பாவையிலும், திருவெம்பாவையிலும் பெண்கள், "பெருமானே! ஒரு தாயின் பிள்ளைக்கு, தாயே அடைக்கலம் என்று கூறவா வேண்டும்? ஆயினும், வணங்கி வேண்டுகிறோம்! இறையடியார்களையே கணவராக அடைந்து, எப்பொழுதும் உன்னையே நினைந்து, உன் பணியே செய்து, பேரின்பம் பெற அருட்செய்க!' என வேண்டுகிறார்கள். (திருப்: 28, 29; திருவெம்: 19, 20)
திருப்பாவைக்கு சுவாமி பெரியவாச்சான் பிள்ளை முதலானோர் அருளிய சிறப்பான விரிவுரைகள் உண்டு. ஆசார்ய ஸ்ரீராமானுஜர், சுவாமி நிகமாந்த மகாதேசிகன், சுவாமி மணவாள மாமுனிகள் முதலிய ஆசார்யர்கள் மிகவும் உகந்து அனுபவித்த பிரபந்தம் இது.

மார்கழி மாதம் முழுவதும் விடியலில் திருக்கோயில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பாவையர் வழிபாட்டுடன், திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய மகத்தான பாவைகளையும் நல்ல இசையோடு செவிமடுத்து இன்புறலாம், நாமும் பாடி மகிழலாம்! மார்கழி நோன்பில் பெருவாழ்வு பெற்று இன்னும் மேன்மையடையலாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.