காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஏற்றமான வாழ்வருளும் ஏழூரம்மன்!

நமது வழிபாட்டிற்கு உரிய கடவுள் வடிவங்கள் எல்லாவற்றிலும் மிகப்பழமையானது சக்தி வழிபாடுதான். சைவம், வைணவம் இரண்டிலும் அன்னையை வழிபாடு செய்தலே முக்கியமான இடத்தைப் பெறுகிறது.

News image
Updated On :2 அக்டோபர் 2020, 3:05 pm

எஸ்.சோமாஸ்கந்தன்

நமது வழிபாட்டிற்கு உரிய கடவுள் வடிவங்கள் எல்லாவற்றிலும் மிகப்பழமையானது சக்தி வழிபாடுதான். சைவம், வைணவம் இரண்டிலும் அன்னையை வழிபாடு செய்தலே முக்கியமான இடத்தைப் பெறுகிறது. அவ்வகையில் அமைந்துள்ள ஒரு பழைய அம்மன் ஆலயத்தைப் பற்றி அறிவோம்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் பேரளம் - திருநள்ளாறு சாலையில் பேரளத்திலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது உபயவேதாந்தபுரம். ஒரு காலத்தில் வடமொழி, தமிழ்மொழி இரண்டும் கற்றறிருந்த ஏராளமான பண்டிதர்கள், வேதம் ஓதும் அந்தணர்கள் வசித்த பெருமையுடையது. இக்கிராமத்தில் சிவன், பெருமாள் கோயில்கள் அமைந்த காலத்திலேயே உருவானதுதான் அருள்மிகு பிடாரி ஏழூரம்மன் கோயில்.

அன்னை பராசக்திக்கு "பீடாபஹாரி' என்ற ஒரு திருநாமம் உண்டு. "பக்தர்களின் பீடைகளைப் பறித்துக் கொண்டு நல்லன அருள்பவள்' என்பதே இதன் பொருள். பீடாபஹாரி அம்மன் என்ற பெயரே பேச்சு வழக்கில் மருவி "பிடாரி அம்மன்' என்றானது. அப்பெயருக்கு ஏற்றாற்போல் உபயவேதாந்தபுரத்தில் இவ்வம்மன் கோயில் கொண்டு அருகில் உள்ள களக்குடி, சாமந்தான் குளம், பொன்னிரை, சந்தனத்தெரு, கர்ணகொல்லை, மூர்த்திதோப்பு ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் காவல் தெய்வமாக இருந்து, ஊரை செழிக்கச் செய்து அருள் பாலித்து வருகிறாள். ஏழு ஊர் கிராமமக்களின் சார்பாக இவ்வாலயம் உபய வேதாந்தபுரம் பஞ்சாயத்தார்களின் நிர்வாகத்தில் நடந்து வருகிறது.

அம்மன் காளி ஸ்வரூபமாக வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தரும் அற்புத சேவை. பக்தர்களின் வேண்டுதல்களை உடனுக்குடன் நிறைவேற்றி வருகின்றாள். ஏழு ஊர் மக்களும் மிகுந்த பக்தியுடன் வழிபட்டு எல்லா நன்மைகளையும் அடைந்து வருவது கண்கூடு. 

பல வருடங்களுக்கு முன் ஒரு வைணவ குடும்பத்திற்கு அம்மன் சிறு பெண் வடிவத்தில் வந்து நீதி மன்றத்தில் சாட்சி சொன்ன வைபவமும், ஊமைப் பெண் பேச்சுத்திறன் வாய்க்கப்பட்டதும், இன்னும் பல அனுபவங்களும் பக்தர்களின் வாயிலாக அறியப்படும் செய்திகளாகும். திருமணத் தடைகள் நீங்க இக்கிராம மக்கள் இந்த அம்மனை பெரிதும் நம்பிக்கையுடன் வழிபடுகின்றனர்; பலன் அடைகின்றனர்.

ஆண்டுதோறும் சித்திரை மாதம் 15 நாள்களுக்கு காப்புகட்டுதலுடன் தேர்த்திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. அவ்வமயம் உற்சவ மூர்த்தி அம்பாள் ஏழு ஊர்களுக்கும் வலம் வருவது கண் கொள்ளாக் காட்சியாகும். 

தற்போது இவ்வாலயத்தில் பெரிய அளவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் உதவிடலாம். தொடர்பிற்கு: 9487764156 / 9445538812.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.