கச்சியப்பர் அருளிய கந்தபுராணம்!

முக்தி தரும் ஏழு நகரங்களில் காஞ்சிபுரம் ஒன்று. சிவத் தலங்கள், வைணவத் தலங்கள், சக்தி பீடமாகிய காமகோட்டம் முதலிய கோயில்கள் நிறைந்த நகரம். ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சாரியார் மடம், தொண்டை மண்டல ஆதீனம் முதலிய
கச்சியப்பர் அருளிய கந்தபுராணம்!

மூவிரு முகங்கள் போற்றி முகம்பொறி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற இராறுதோள் போற்றி காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி அன்னான்
சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி

 - கந்தபுராணம் - சுப்பிரமணியர் காப்பு

முக்தி தரும் ஏழு நகரங்களில் காஞ்சிபுரம் ஒன்று. சிவத் தலங்கள், வைணவத் தலங்கள், சக்தி பீடமாகிய காமகோட்டம் முதலிய கோயில்கள் நிறைந்த நகரம். ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சாரியார் மடம், தொண்டை மண்டல ஆதீனம் முதலிய மடங்கள் உள்ளன. நாயன்மார்கள், வைணவப் பெரியார்கள் மற்றும் பல அருளாளர்கள் வாழ்ந்த பதி. பட்டுக்குப் பெயர் போன வியாபாரத் தலம். சமீபத்தில் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு அத்திவரதரின் அற்புத தரிசனம் அருளிய பதி.

இவ்வளவு சிறப்புகள் நிறைந்த காஞ்சிபுரத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கும் தலம் குமரகோட்டம், அருள்மிகு காமாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ளது. முருகப்பெருமான் சிவ பூஜை செய்த தலம். இங்கு முருகன் பாலசுப்ரமணியராக ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் உடையவராக பிரம்மசாஸ்தா கோலத்தில் அருள்பாலிக்கின்றார். 

குமரகோட்டத்தில் சிவாச்சாரியாராக பணிபுரிந்தவர் கச்சியப்பர். இவருடைய தகப்பனார் காளத்தியப்ப சிவாச்சாரியார். கச்சியப்பரின் காலம் பதினொன்றாம் நூற்றாண்டென்றும், பதினான்காம் நூற்றாண்டென்றும் இருவேறு கருத்துள்ளது.

புராணங்களில் பெரிய புராணம் சிவனடியார்களைப் பற்றி குறிப்பிடுகிறது. பெரிய புராணம் பாடுவதற்கு, சேக்கிழாருக்குச் சிவபெருமான் "உலகெலாம்' என்று அடியெடுத்துக் கொடுத்தார். சேக்கிழாருடைய ஊரும் தொண்டை நாட்டைச் சேர்ந்த குன்றத்தூர் ஆகும்.  மதுரையில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்களை, பரஞ்ஜோதி முனிவர் திருவிளையாடல் புராணமாக இயற்றியுள்ளார்.

கந்தப்பெருமானின் வரலாற்றைக் கூறுவது கந்தபுராணம். இதை இயற்றியவர் கச்சியப்ப சிவாச்சாரியார். 

ஒரு நாள் இரவு கச்சியப்பரின் கனவில் முருகப்பெருமான் தோன்றி, "கந்தபுராணத்தில் ஆறு சம்ஹிதைகள் உள்ளன. அவற்றுள் சங்கர சம்ஹிதையின் முதல் காண்டமாகிய சிவரகசிய காண்டத்தில் உள்ளது நமது வரலாறு. அந்த வரலாற்றைக் "கந்தபுராணம்' என்று பெயரிட்டுத் தமிழில் பெருங்காப்பியமாக இயற்றுவாயாக' என ஆணையிட்டு,  "திகட சக்கர செம்முகம் ஐந்துளான்' என்று முருகனே அடி எடுத்துக் கொடுத்து மறைந்தார். விழித்தெழுந்த கச்சியப்பர் பெருமானின் அருள்திறத்தை நினைத்து மகிழ்ச்சியடைந்தார்.

மறுநாள் முதல் காப்பியத்தை இயற்றத் தொடங்கினார். தினசரி நூறு செய்யுட்கள் பாடி, இறைவன் திருவடியில் வைத்துவிட்டுக் கதவை மூடிவிட்டுப் போவார். மறுநாள் அதைப் பார்க்கும்போது சில இடங்களில் திருத்தப்பட்டிருக்கும்! தொடர்ந்து காவியம் முழுதும் இயற்றி, அரங்கேற்றத்திற்கும் நாள் குறிக்கப்பட்டு, சிறப்பாக ஏற்பாடும் செய்யப்பட்டது.
அரங்கேற்றத்தன்று "திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்'”என்று முதல் பாடலை "திகழ் தசக்கரச் செம்முகம் ஐந்துளான்'” என்று சொல் பிரித்து பொருள் கூறத் தொடங்கினார். 

அங்கிருந்த புலவர்கள் பாடலில் "திகடசம்' என்று புணர்வதற்கு, தொல்காப்பியம் முதலிய நூல்களில் விதியில்லை என்றனர். கச்சியப்பர் "இப்பாடலின் முதலடி முருகப்பெருமானுடைய திருவாக்கு. அவரே இவ்வடியை எடுத்துத் தந்தருளினார் என்றுரைத்தார். ஆனால் புலவர்கள், முருகனே எங்கள் முன் தோன்றிக் கூறினால், அல்லது இலக்கண நூலில் விதி காட்டினால் ஏற்போம்' என்று கூறினர். சபை மறுநாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அன்றிரவு கச்சியப்பரின் கனவில் கந்தப்பெருமான் தோன்றி, "அப்பனே! வீர சோழியம் என்ற இலக்கண நூலில் சந்தி படலத்தில் பதினைந்தாம் செய்யுளில் புணர்வதற்குள்ள விதியை நாளை சபையில் ஒரு புலவன் வந்து காட்டுவான்'”என்று உரைத்தார்.

மறுநாள் சுப்பிரமணியக் கடவுளே புலவர் வேடத்தில் வீரசோழியம் நூலுடன் வந்து, புலவர்களுடைய சந்தேகத்தைப் போக்கி மறைந்தருளினார். கச்சியப்பர் முருகப்பெருமானிடம் கொண்ட பக்திச் சிறப்பினை உணர்ந்து மகிழ்ந்தனர். நூல் சிறப்பாக அரங்கேறியது. அரங்கேற்றி முடிக்க ஓர் ஆண்டு ஆனது. இருபத்து நான்கு கோட்ட வேளாளப் பிரபுக்கள் கச்சியப்ப சிவாசாரியாரைக் கந்தபுராண நூலோடு பல்லக்கில் ஏற்றி சிறப்பித்தனர். இதை தொண்டை மண்டலச் சதகம் பாராட்டுகிறது. கச்சியப்ப சிவாசாரியார் சில காலம் வாழ்ந்து முருகன் திருவடியை அடைந்தார்.

கந்தபுராணம்: சம்பவ காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம், உபதேச காண்டம் என ஏழு காண்டங்களை உடையது. முதல் ஆறு காண்டங்களை 10345 செய்யுள்களாகக் கச்சியப்ப சிவாச்சாரியாரும், உபதேச காண்டத்தை குகனேரியப்ப முதலியாரும் அருளிச்செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com