
1801 மார்ச் 27-ஆம் நாள் கயத்தாற்றில் ஒன்றுகூடிய கம்பெனிப் படைகள், 31ஆம் தேதியன்று பாஞ்சாலங்குறிச்சியை அடைந்தன. பாஞ்சைக் கோட்டைக்கு வடமேற்கே, சிறிது தொலைவில், மேடு ஒன்றை எழுப்பி, அதன்மீது பீரங்கிகளை நிற்கவைத்து, கோட்டைச் சுவரைத் தகர்க்கத் தொடங்கின. சிறிதளவே தகர்க்க முடிந்த நிலையில், கிடைத்த இடுக்குகளின் வழியே கம்பெனிச் சிப்பாய்கள் உள்ளே புகத் துணிந்தனர். இவ்வாறு புகுந்தவர்கள், ஈட்டிகளாலும் துப்பாக்கிகளாலும் சரமாரியாகத் தாக்கப்பட்டனர். கோட்டைச் சுவரின்மீது ஏறமுயன்றவர்களுக்கும் இதுவே கதியானது.
தங்களிடம் இருந்த வலிமையைக் கொண்டு பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை அழிப்பதோ ஊமைத்துரையை வெல்வதோ இயலாது என்பதை உணர்ந்த மேஜர் மெக்காலே, இன்னும் படை பலம் வேண்டுமென்று கம்பெனி நிர்வாகத்திற்குத் தெரிவித்தார். காடல்குடி, ஸ்ரீ வைகுண்டம் கோட்டைகளைப் புரட்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தனர்.
இதற்கிடையில், ஆங்காங்கே மாய்ந்து விழுந்திருந்த தங்கள் சகாக்களின் சடலங்களை எடுத்துச் சென்று அடக்கம் செய்வதற்காகப் புரட்சியாளர்களிடம் சிப்பாய்கள் வெள்ளைக் கொடி காட்டினர். தமிழும் தவமும் செழித்த பொருநைக் கரை மண்ணாயிற்றே, மாற்றமா கூறும்? சடலங்களை எடுப்பதற்கும் ஈமக்கடன் செய்வதற்கும் புரட்சியாளர்களே உதவினர்.
இதே காலகட்டத்தில், கம்பெனி நிர்வாகமும் இரண்டு விஷயங்களைப் புரிந்துகொண்டது. ஒன்று, கட்டபொம்மன் அளவுக்குச் சினமும் வீரமும் வேகமும் விவேகமும் ஊமைத்துரைக்கும் உண்டு; இரண்டு, கட்டபொம்மன் மறைவால் பாளையக்காரர்களின் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறிவிட்டது. "கட்டபொம்மனிடமே சமாதானம் பேசியிருந்திருக்கலாம்; ஊமைத்துரையிடம் அது நடக்காது' என்று கம்பெனிக்காரர்களே பேசிக் கொள்ளத் தலைப்பட்டனர்.
இருந்தாலும், ஆட்சியதிகாரச் செருக்கு அடங்கிவிடுமா?
மலபாரிலிருந்தும் திருச்சியிலிருந்தும் புதிய படைகள் புறப்பட்டன; லெஃப்டினன்ட் கர்னல் அக்ன்யூ தலைமையில் ஒன்றுதிரண்டு வந்தன. மே மாதம் வாக்கில், பாஞ்சைக் கோட்டையின் தென் - மேற்கு மற்றும் தென் - கிழக்குப் பகுதிகளிலும் பீரங்கிகள் நிறுத்தப்பட்டுத் தாக்குதல் தொடங்கியது. மேஜர் மெக்காலேயிடமிருந்து லெஃப்டினன்ட் கர்னல் அக்ன்யூ பொறுப்புகளை எடுத்துக் கொண்டார். தொடர்ந்து நடந்த தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் உள்ளிருந்த புரட்சியாளர்கள் தடுமாறியதற்குப் பற்பல காரணங்கள். ஃபிப்ரவரி-மார்ச் மாதங்களில் போர் தொடங்கியதிலிருந்தே, கோட்டைக்குச் செல்லும் பாதைகளைக் கம்பெனிப் படைகள் மூடியிருந்தன; உணவு உள்ளே செல்வது தடைப்பட்டிருந்தது; இருந்த உணவைப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு, பல நாட்களுக்கு ஆண்கள் பலரும் பட்டினியாக இருந்தனர். போதாக்குறைக்கு, கம்பெனியாரிடமிருந்த படைக்கலன்களையும் பீரங்கிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இவர்களிடமிருந்த ஆயுதங்களும் துப்பாக்கிகளும் வெகு குறைவு. முறையான போர்ப் பயிற்சியும் இவர்களுக்குக் கிடையாது.
அக்ன்யூவின் படைகளோடு நடைபெற்ற புரட்சியாளர்களின் போரில், புரட்சி வீரர்களோடு பெண்களும் குண்டுகளுக்கு இரையாகினர்.
உள்ளுக்குள்ளிருந்த ஊமைத்துரைக்கு தர்மசங்கடம் - உள்ளிருந்தே சரணடைவதா? கோட்டையைவிட்டு வெளியேறி ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்ப்பதா?
போரிட்டுக் கொண்டே கோட்டையைவிட்டு வெளியேற முடிவு செய்த ஊமைத்துரையும் சிவத்தையாவும், காயமுற்ற வீரர்கள், பெண்கள் -குழந்தைகள் - முதியவர்கள் ஆகியோரை நடுவில் விட்டு, வீரர்கள் எல்லோரும் சுற்றிலும் பாதுகாத்தபடி நகரும்படியாக உத்தரவிட்டனர். இவ்வாறு வெளியேறியவர்கள்மீது நடைபெற்ற தாக்குதலில் பெண்கள் பலர் உட்பட அறுநூறுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். 2000 பேர் தப்பித்தனர்; தப்பித்தவர்களில் ஊமைத்துரையும் சிவத்தையாவும் (ஊமைத்துரையின் இளைய சகோதரர் துரைசிங்கத்தை, சிவத்தையா என்றுதான் அழைத்தனர்) இருந்தனர். மகள்கள் இருவரும் முந்தானையைப் பிடித்தபடி பின்தொடர, இடது இடுப்பில் மகன் காலுதைக்க, வலது இடுப்புக் கூடையில் ஜக்கம்மாளின் சிலையைச் சுமந்தபடி, இந்தக் கூட்டத்தில் நடந்தவர்களில் கர்ப்பிணி ஒருவரும் இருந்தார்; இவர் ஊமைத்துரையின் அருமை மனைவி.
போரிட்டுக் கொண்டே சென்ற ஊமைத்துரை, உடலெல்லாம் புண்ணாகிக் கீழே சரிந்துவிட்டார். எப்படியோ இவரைத் தூக்கிச் சென்று, குடிசையில் வைத்து, வைசூரி கண்டவரைப் போல் நடித்துச் சில பெண்மணிகள் காப்பாற்றியதாகத் தெரிகிறது. சில நாட்களில் உடல்நிலை தேறி ஊமைத்துரை வெளிப் போந்தபோது, உடனிருந்து போராடக்கூடிய நண்பர்களும் வீரர்களும் கம்பெனிப் படைகளால் அழிக்கப்பட்டிருந்தனர்.
ஊமைத்துரை கோட்டையைவிட்டு வெளியேறிவுடன், கோட்டை கம்பெனியார் வசம் வந்தது. கோட்டைக்குள் இருந்த பதுங்குக் குழி அமைப்புகளையும் முதியவருக்கும் பெண்டிருக்கும் இருந்த பாதுகாப்பு அமைப்புகளையும் கண்டு ஆங்கிலேயர் அசந்து போயினர்.
நெல்லைப் பகுதியில் தனக்குக் கைகொடுக்க யாரும் இல்லை என்னும் நிலையில், சிவகங்கையின் மருது சகோதரர்களை நெருங்கினார் ஊமைத்துரை. ஏற்கெனவே மருது சகோதரர்கள் கம்பெனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்டுக்கொண்டிருக்க, ஊமைத்துரையும் சேர்ந்து கொண்டார். இருப்பினும், இதற்குப் பின்னர், இந்தப் போர் நெடுநாட்கள் நீடிக்கவில்லை. 1801 அக்டோபர் 1ஆம் தேதி காளையார் கோவில் கம்பெனி வசம் வந்தது. இதன் பின்னர் சில நாட்களில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டனர். காளையார் கோவிலில் சிறை பிடிக்கப்பட்ட ஊமைத்துரையும் சிவத்தையாவும் பாஞ்சாலங்குறிச்சிக்கு அழைத்து வரப்பட்டு, பீரங்கிமேட்டில் தூக்கிலிடப்பட்டனர் (இவர்கள் தூக்கிலிடப்பட்ட தேதிகள் குறித்த தரவுகளில் நிறைய மாற்றங்கள் உள்ளன; கம்பெனிப் பதிவுகள் வேண்டுமென்றே குழப்ப முயன்றிருக்கக்கூடும்; அப்போதைய பிரிட்டன் கிரிகோரியன் காலண்டரை ஏற்றுக்கொள்ளாத நிலையில், பிரிட்டிஷ் பதிவுகளைப் பிற்காலத்தில் ஆய்வு செய்யும்போது குழப்பங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும்).
செக்காரக்குடியில் மறைந்து வாழ்ந்துகொண்டிருந்த ஊமைத்துரையின் மனைவியைக் கம்பெனிப் படைகள் கண்டறிந்து கைது செய்தன. சிறைக்குள் பிறந்த ஊமைத்துரையின் செல்ல மகனுக்குக் கம்பெனிச் செல்வம் என்று கம்பெனியார் பெயர் சூட்டினர்.
பாஞ்சாலங்குறிச்சியிலும் தொடர்ந்து சிவகங்கையிலும் கம்பெனிப் படைகளை வழிநடத்திய அக்ன்யூ, பாளையங்கோட்டை சென்றார். பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை முழுவதுமாகத் தரை மட்டமாக்கப்பட்டது. மீண்டும் அங்கு எதுவும் யாரும் எழுந்துவிடக் கூடாது என்பதற்காக, அந்த இடம் முழுவதும் உழப்பட்டு, உப்பு தூவப்பட்டு, ஆமணக்கு விதைகள் விதைக்கப்பட்டன. தாங்கள் படையெடுத்துப் பிடித்த நிலப்பகுதிகளில் இவ்வாறு செய்வது அரச வழக்கமாம்.
அன்பும் வீரமும் செழித்த தனது மண்ணில் ஆமணக்கின் உன்மத்தம் ஊறியபோது, பொருநையாள் ளின் எவ்வளவு துடித்தாளோ?
இதைவிடக் கொடுமை - நெல்லை மாவட்டத்தின் பதிவேடுகளிலிருந்து பாஞ்சாலங்குறிச்சியின் பெயரையே நீக்கினார்கள் என்று பதிவிடுகிறார் பேட் துரை (திருநெல்வேலி மாவட்ட கெஸட் 1917).
ஆனால், இடைப்பட்ட காலத்தில், பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து வெளியேறிய ஊமைத்துரை சிவகங்கைச் சகோதரர்களோடு சேர்ந்திருந்த நிலையில், வேறு சில நிகழ்வுகளும் நிகழ்ந்துகொண்டிருந்தன.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.