மயில்கள் உலாவிய வனத்தில் மகாதேவர்!
முற்கால மன்னர்கள் காலத்தில் உருவாகிய பல திருக்கோயில்கள் காலப்போக்கில் போதிய பராமரிப்பின்றி, வழிபாடின்றி சிதிலமடைந்தன. பிற்கால மன்னர் வம்சத்தினரால் சில கோயில்கள் புதுப்பிக்கப்பட்டன.


முற்கால மன்னர்கள் காலத்தில் உருவாகிய பல திருக்கோயில்கள் காலப்போக்கில் போதிய பராமரிப்பின்றி, வழிபாடின்றி சிதிலமடைந்தன. பிற்கால மன்னர் வம்சத்தினரால் சில கோயில்கள் புதுப்பிக்கப்பட்டன. அப்படிப்பட்ட திருக்கோயில்களில் ஒன்றுதான் செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டத்தில், நெமிலிச்சேரி என்ற கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோயிலாகும்.
சுமார் 700 ஆண்டுகளாக இவ்வூர் ஜமீன் ராயப்பேட்டையின் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளது. அக்காலத்தில் ஜமீன்தார் வீட்டில் ஏதோ ஓர் அசம்பாவித நிகழ்வு நடந்ததற்கு பரிகாரம் செய்வதற்காக, இவ்வூரை காஞ்சிபுரத்தில் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்டு வசித்து வந்த வேத விற்பன்னர்களுக்குத் தானமாக வழங்கப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது.
அந்தக் காலத்தில் இவ்வூர் நீர்வளமும், நிலவளமும் கொண்ட பசுஞ்சோலையாக இருந்துள்ளது. ஆங்காங்கே மயில்கள் கூட்டமாக வந்து இரையெடுத்து உண்டு வாழ்ந்து வந்ததால், இவ்வூருக்கு "நெமிலிச் செருவு' என்ற பெயர் இருந்ததாகவும் ("நெமிலி' எனும் சொல் மயிலைக் குறிக்கும்; "செருவு' எனும் சொல் கூட்டத்தைக் குறிக்கும்) பிற்காலத்தில் "நெமிலிச் செருவு' என்ற பெயர் மருவி "நெமிலிச்சேரி'யாக பெயர் விளங்களாயிற்று என்று கூறப்படுகிறது.
தலம், தீர்த்தம், மூர்த்தம் ஆகிய மூவகையிலும் சிறந்து விளங்கிய இப்புராதன திருக்கோயிலை பதினெண் சித்தர்களில் சிறந்து விளங்கியவரும், பண்டைய சித்த மருத்துவ முறையை வகுத்தவர்களில் முதன்மையானவரும், ஆயுர்வேத சூத்திரங்களுக்கு விரிவுரை எழுதியவருமான அகத்தியர் பெருமான், பாமர மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நோய்களைத் தீர்க்கும் சக்திவாய்ந்த சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து, வழிபட்ட திருக்கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
அதன்பொருட்டு இத்தலம் நோய்கள் தீர்க்கும் திருத்தலமாகத் திகழ்கிறது. திரிசூலம் திரிசூலநாதர் திருக்கோயிலில் உள்ள கல்வெட்டில் இத்திருக்கோயிலின் சிறப்புகள் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
மிகவும் சிதிலமடைந்த இத்திருக்கோயில் 1930-ஆம் ஆண்டில் கோடா முனுசாமி ஐயர் என்பவரால் முழுவதுமாகப் புதுப்பிக்கப்பட்டது. பின்னர், 1991-ஆம் ஆண்டில் சு. வெங்கட்ராமன் என்ற சிவனடியார் தலைமையில், இத்திருக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதைத் தொடர்ந்து, 1993-ஆம் ஆண்டில் திருக்குடமுழுக்கு சிறப்புற செய்யப்பட்டது.
கோயிலின் அமைப்பு: அர்த்த மண்டபம், அந்தராளம், கருவறை என்ற அமைப்பில் இக்கோயில் அமைந்துள்ளது. கருவறையில் மூலவர் கிழக்கு நோக்கி வீற்றிருந்து பேரருள் புரிகின்றார். அர்த்த மண்டபத்தின் வெளிப்புறத்தில் வலப்புறத்தில் விநாயகரும் இடப்புறத்தில் பாலமுருகனும், இடதுபுற மேடையில் தெற்கு நோக்கி தில்லைக் கூத்தன் நடராஜபெருமான், சிவகாமி அம்மை, மாணிக்கவாசகர், சந்திரசேகர், அம்பிகை (பஞ்சலோக உற்சவர்) ஆகியோர் எழுந்தருளி அருள்கின்றனர். அர்த்த மண்டபத்தில் பலிபீடமும், நந்தியும் அலங்கரிக்கின்றனர்.
அர்த்த மண்டபத்தில் அம்பிகை ஸ்ரீஆனந்தவல்லி தெற்கு நோக்கி,நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் அங்குசம், பாசம், அபய வரத முத்திரையோடு பக்தர்களின குறைகளை அறிந்து கருணையோடு அருள்கின்றார்.
வெளிச்சுற்றில் பலிபீடமும், நந்திமண்டமும் அமைந்துள்ளது. வடக்கு நோக்கி நால்வரும், அகத்தியப் பெருமானும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.
கன்னிமூல கணபதி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. மூலவர் திருகோஷ்டங்களில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மதேவர் மற்றும் விஷ்ணு துர்க்கையும் அலங்கரிக்கின்றனர். சண்டிகேஸ்வரர் தனிச் சந்நிதியில் வீற்றிருந்து அருள்கின்றார்.
நவகிரக சந்நிதி, பைரவர் சந்நிதி, சூரியன் சந்திரன் சந்நிதிகள் அமைந்துள்ளன.
தல விருட்சம்: இத்திருக்கோயிலின் வடதிசையில் பெரிய திருக்குளம் அமைந்துள்ளது. குளக்கரையில் மயில்கள் உலாவிய நந்தவனமும் அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலின் தலவிருட்சம் அரசமரமாகும். அரசமரம் வெளிப்புறத்தில் அமைந்துள்ளது. அரசமரத்தடியில் விநாயகரும், நாகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
விழாக்கள்: சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, பெளர்ணமி, தேய்பிறை அஷ்டமி நாள்களில் ஹோமங்களும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன.
வருடத்திற்கு ஆறு அபிஷேகம் நடராஜப் பெருமானுக்கு நடைபெறுகிறது. (ஆருத்ரா, ஆனித் திருமஞ்சனம் உள்பட). ஆடிப்பூரம், நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவார சங்காபிஷேகம், கார்த்திகை தீபம், மஹா சிவராத்திரி, பங்குனி உத்திரத்தில் சுவாமி அம்பிகைக்கு திருக்கல்யாணம் போன்ற விழாக்கள் நடைபெறுகின்றன.
சைவ சமயக்குரவர்கள் நால்வருக்கும் அவர்கள் திருநட்சத்திரத்தன்றும், அகத்தியர் பெருமானுக்கு மார்கழி மாத ஆயில்ய நட்சத்திரத்தன்றும் விசேஷ வழிபாடுகளும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.
திருப்பணி: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இத்திருக்கோயிலில் தற்போது ஸ்ரீ அகத்தீஸ்வரர் பக்த கைங்கர்ய டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலம் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
அமைவிடம்: நெமிலிச்சேரி ஸ்ரீஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோயில் சென்னை குரோம்பேட்டைக்கு அருகில் அமைந்துள்ளது.
குரோம்பேட்டையிலிருந்து எஸ்-4 சிற்றுந்தும், ஷேர் ஆட்டோக்களும் கோயில் வரை செல்கின்றன. காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.
இங்குறையும் ஈசன் போகலிங்கமாக இருப்பதால் நமது வாழ்வில் போகங்கள் பெருகச் செய்கிறார் என்பது நம்பிக்கை.
இக்கோயிலில் சூரிய பகவான், சந்திர பகவானுடன் பைரவரும் சேர்ந்து ஒரே சந்நிதியில் எழுந்தருளி, அருள்பாலிப்பது ஓர் அபூர்வமான காட்சியாகும்.
நீண்ட நாள்களாக தீராத நோய்களால் அவதிப்படுபவர்கள் இக்கோயிலுக்கு வந்து சிவபெருமானையும் அம்பாளையும் வழிபட்டால் எப்பேர்ப்பட்ட நோய்களும் விரைவில் குணமாவதாக, அனுபவத்தில் கண்ட பக்தர்கள் கூறுகின்றனர். தங்களின் பிரார்த்தனை நிறைவேறியவர்கள் இறைவன் மற்றும் இறைவிக்கு பட்டு வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
தொடர்புக்கு: ஜெகதீஷ் - சத்தீஷ் - 99414 99506 / 98847 06265.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...