ஆனந்த ஆடிப்பெருக்கு!
மக்களின் குடிநீர்த் தேவைக்கும், வேளாண் தொழிலுக்கும் அடிப்படை ஆதாரமாக விளங்கி வரும் காவிரி நதியை தாயாகவும், தெய்வமாகவும் வழிபட்டு வருகிறோம். விழா எடுக்கின்றோம்.


மக்களின் குடிநீர்த் தேவைக்கும், வேளாண் தொழிலுக்கும் அடிப்படை ஆதாரமாக விளங்கி வரும் காவிரி நதியை தாயாகவும், தெய்வமாகவும் வழிபட்டு வருகிறோம். விழா எடுக்கின்றோம்.
அவ்வகையில், ஆறுகள் பெருக்கெடுத்து ஓடும் ஆடி மாதம் நடைபெறும் விழாக்களில் ஒன்று தான் "ஆடிப்பெருக்கு விழா'. பொதுவாக விழாக்கள் நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டும், கிழமைகளைக் கொண்டும் நடத்தப்படும். ஆனால் ஆடி மாதத்தில் 18 -ஆவது நாள் என்று நாளின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு "பதினெட்டாம் பெருக்கு' என்ற பெயரில் நடத்தப்படும் ஒரே விழா இதுவேயாகும் (இவ்வாண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா).
அனைத்து தரப்பினருக்கும் ஆனந்தம் அளிக்கும் விழாவாக இது திகழ்கின்றது. முக்கியமாக ஆடிப்பெருக்கன்று மாலை வேளையில் சுமங்கலிப் பெண்கள், புதிதாக மணமான பெண்கள், காவிரிக்கரையில் பனை ஓலைகளால் செய்யப்பட்ட காதோலை, கருகமணி, மலர், மஞ்சள், பழ வகைகளை வெற்றிலை பாக்குடன் காவிரித் தாயாருக்குச் சமர்ப்பித்து தீபமேற்றி வழிபடுவர். தாலிக்கு புது மஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வர். இதனால் தாம்பத்யம் சிறக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. கன்னிப் பெண்களும் தங்களுக்கு நல்ல கணவர்மார்கள் அமைய புதிய மஞ்சள் கயிறு அணிவர். மேலும் காவிரி அன்னையை சூலுற்ற பெண்ணாகப் பாவித்து, விதவிதமான உணவு வகைகளைப் படைத்து, அதனைப் பிரசாதமாக உண்பர்.
முன்னதாக நவதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட முளைப்பாலிகையை ஏந்தி ஊர்வலமாக ஆற்றங்கரைக்கு வருவார்கள். ஆற்றங்கரையில் நடைபெறும் இந்த மங்கல விழா காலம் காலமாக நடைபெறுகின்றது. சிறார்களும் தங்கள் பங்கிற்கு சப்பரம் (சிறிய தேர்) செய்து அலங்கரித்து, அதனுள் தெய்வீகப் படங்கள், அகல் விளக்கு வைத்து வீதிகளில் சப்தமிட்டபடி இழுத்து வருவார்கள்.
திருவரங்கம் திருத்தலத்தில் ஆடிப்பெருக்கு திருநாள் கொண்டாடப்படும் வழக்கத்தைப் பார்ப்போம். ஸ்ரீநம்பெருமாளின் அஷ்டமகிஷியருள் (எட்டு தேவியர்கள்) காவிரித் தாயாரும் ஒருவராகக் கருதப்படுவதால் அவரை ஆடிப்பெருக்கன்று பெருமாள் திருமணம் செய்து கொள்வதாக ஐதீகம்.
அன்று காலை உற்சவர் நம்பெருமாள் பல்லக்கில் புறப்பாடு கண்டருளி, ஸ்ரீரங்கம் காவிரிக்கரை அம்மா மண்டபத்தில் ஆஸ்தானம் எழுந்தருள்வார். மாலை 5 மணி அளவில், பெருமாளிடமிருந்து காவிரி தாயாருக்கு தங்கத் தாலிப்பொட்டு, கஸ்தூரித் திலகம், வெற்றிலைப் பாக்கு மற்றும் பிரசாதங்கள் ஆகியவை யானையின் மீது எடுத்துச் செல்லப்பட்டு, காவிரித் தாயாருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. பின்னர் இரவு நம்பெருமாள் புறப்பாடு கண்டருளி, ஆலயத்தில் ஆண்டாள் சந்நிதிக்குச் சென்று ஆண்டாள் நாச்சியாருடன் மாலை மாற்றிக்கொள்ளும் வைபவம் நடைபெறுகிறது. புதுமணத் தம்பதிகள் மற்றும் பெண்கள் தங்கள் வாழ்வில் இன்பம் பெருக பெருமாள் மற்றும் காவிரித் தாயாரை அன்று வேண்டி வழிபடுவர்.
இதைத்தவிர காவிரிக்கரையில் பல இடங்களில் இந்நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். பக்தி பரவசத்துடன், பாரம்பரியம் மிக்கதாகவும் ஆடிப்பெருக்கு விழா அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...