தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆடிக் கூழை நாடிக் குடி!

ஆடி மாதம் வந்துவிட்டால் போதும், சின்னஞ்சிறிய அம்மன் கோயிலில்கூட வேப்பிலைத் தோரணங்கள், கூழ் வார்த்தல், துள்ளுமாவு படைத்தல் என்பது விமரிசையாக நடக்கும்.

News image
Updated On :30 ஜூலை 2021, 11:05 am

பேராசிரியர் கி.நடராஜன்

ஆடி மாதம் வந்துவிட்டால் போதும், சின்னஞ்சிறிய அம்மன் கோயிலில்கூட வேப்பிலைத் தோரணங்கள், கூழ் வார்த்தல், துள்ளுமாவு படைத்தல் என்பது விமரிசையாக நடக்கும். கூழ் தமிழரின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று. அவரவர்கள் மரபுப்படி அம்மனுக்கு வேண்டிக்கொண்டு ஆண்டு தோறும் ஆடி மாதம் கூழ் ஊற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 
பழங்காலங்களில் ஊர் தோறும் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றப்பட்டு வந்தது. இந்த நிகழ்வை கிராம மக்கள் ஒரு விழாவாகவே சிறப்பாக கொண்டாடிவந்தனர். பெரும்பாலும் ஆடி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த கூழ் ஊற்றப்படும். 
இதற்குக் காரணமாக புராணத்தில் சொல்லப்படும் வரலாறு ஒன்றுண்டு.
தவத்தில் சிறந்து விளங்கிய ஜமதக்னி என்ற முனிவர், ரேணுகாதேவி என்ற மனைவியுடனும், பரசுராமன் உட்பட நான்கு புதல்வர்களுடனும் இல்லறத்தை நல்லறமாக நடத்தி வந்தார். ஒருசமயம், முன்பகை காரணமாக, கார்த்தவீரியனின் பிள்ளைகள் ஜமதக்னி முனிவரைக் கொன்று விட, கணவரை இழந்த ரேணுகாதேவி உயிர் வாழ விரும்பாமல் பெரும் தீமூட்டி, அதில் இறங்கினாள். அப்போது, இந்திரனும், வருணனும், மழை  பொழியச் செய்து, தீயை அணைத்து விட்டாலும், அவளுடைய ஆடைகள் எல்லாம் எரிந்து , உடலில் தீக்கொப்புளங்கள் உண்டாகிவிட்டன.  
இதைக் கண்ட அங்குள்ள காட்டுவாசிகள் அவளை வாழை இலையில் கிடத்தி, உடலை வேப்பிலையால் மறைத்தனர். (வாழை இலை உடலை குளிர்ச்சியடையச் செய்து ரணங்களை ஆற்றும். வேப்பிலை நோய் தொற்றைக் குறைக்கும்). இதுவே பின்னாளில், அம்மனுக்கு வேப்பிலை ஆடை அணியும் வழக்கம் உருவான வரலாறு. தீப்புண்களால் பாதிக்கப்பட்ட அவளுக்கு எளிமையான, அதே சமயம் சத்துள்ள உணவாக, பச்சரிசி மாவு, வெல்லம், பானகம், இளநீர் இவற்றைக் கொடுத்தனர். இதைக்கொண்டு ரேணுகாதேவி கூழ் தயாரித்து உணவருந்தினார்.
 அப்போது சிவபெருமான், தோன்றி ரேணுகாதேவியிடம், ""நீ சக்தியின் அம்சம். மனித குலத்தைத் தீமையில் இருந்து காப்பாற்றும் சக்தியை உனக்கு அளிக்கிறேன். உலக மக்களின் அம்மை நோய் நீங்க நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த  உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரமாகும்!'' என்று வரம் அளித்தார். இச்சம்பவத்தை நினைவு கூரும் வகையில் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் கூழ்  வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தக் கூழை எப்படிச் செய்வது? தேவையான அளவு கேழ்வரகையும், பச்சரிசியையும் நன்றாக அரைத்து மாவாக்கி, அதை ஒரு பானையில் தண்ணீர் ஊற்றி, மாவு கட்டி போகாதவாறு நன்கு கலக்கி அடுப்பில் இட்டுக் கொதிக்க வைத்து, கஞ்சி பதத்தில் அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைத்து, அத்துடன் தயிரைச் சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றைச் சிறு துண்டுகளாக நறுக்கி இதில் போட்டு கலக்கிய பின் கூழ் உண்பதற்குத் தயாராகிறது. 
அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகம், குன்னிவேர், உழிஞ்சி வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர் ஆகியவற்றை லேசாகத் தட்டி எடுத்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைத்துக் கொண்டு, கஞ்சிக்குள் அந்தத் துணிப் பொட்டலத்தைச் சிறிது நேரம் போட்டு ஊறவைத்து, எடுத்துவிட, அதன் சத்து கூழில் இறங்கி அது மருத்துவ குணமிக்கதாகவும் இருக்கும். இதை அம்மன் முன் வைத்து நிவேதனம் செய்து மக்களுக்கு வழங்குவர். 
கூழிலுள்ள கேழ்வரகில் கால்சியம் சத்து உள்ளது. இது எலும்புகளுக்கு மிகவும் முக்கியம். இது உடலில் சுரக்கும் தேவையற்ற அமிலத்தைக் குறைத்து உடல் எடையை நிலையாக வைத்து இருக்க உதவும். சர்க்கரை நோயாளிகளுக்கு அவர்களுடைய சர்க்கரை அளவை சரி செய்யும். உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை அகற்றி, இதில் உள்ள நார்ச் சத்து குடலுக்கு வலு சேர்க்கும். 
ஆடி மாதம் பருவகாலம் மாறும் நேரம். காற்றும் மழையும் அதிகம் இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால், சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வரலாம். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோயில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றுவார்கள். இதை ஆடிக்கஞ்சி என்பர். மருத்துவ குணம் மிகுந்த ஆடிக் கூழை அம்பிகைக்கு படைத்து உண்ணும்போது, மனம் அமைதி பெறும். உடல் நோய்கள் நீங்கும். அதனால் ஆடிக் கூழைத் தேடிக் குடிப்போம். அம்மன் அருளுடன் ஆரோக்கிய வாழ்வைப் பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.