
1906 ஏப்ரல் மாதத்திலேயே தூத்துக்குடி வணிகர்கள் சிலர், இதுகுறித்துச் சிந்தித்திருந்தனர். தூத்துக்குடிக்கும் கொழும்புவுக்கும் இடையில் சுதேசிக் கப்பல்களைச் செலுத்த வேண்டும் என்று பேசிக்கொண்டனர். அப்போதைய பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி படுத்திய பாடும், கொடுத்த தொந்தரவுகளுமே இத்தகைய பேச்சு நிலவியதற்குக்
காரணம்.
ஆசியா முழுவதிலும் பிரிட்டிஷாரின் கை மேலோங்கி இருந்தது. பல்வேறு ஆசியப் பகுதிகள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின்கீழ் இருந்தன. இதனால், ஆசியப் பகுதிகளில் கப்பலோட்டி, வணிகத்தைச் சீர்செய்யவேண்டும் என்று வணிகர்கள் கருதினர்.
பிரிட்டிஷார் இந்திய மண்ணில் கால் வைப்பதற்குப் பற்பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, பெருங்கடல்களில் பாரத மன்னர்கள் கப்பல்கள் செலுத்தியிருந்தனர் என்பதையும், கப்பல் கட்டும் தொழிலில் சிறந்து விளங்கினர் என்பதையும் வ. உ. சி எண்ணியிருந்திருக்க
வேண்டும்!
இவையெல்லாம் நடப்பதற்குச் சில காலம் முன்னர், வ. உ. சி அவர்கள் மதராஸூக்குச் சென்றதாகத் தெரிகிறது. அப்போது, ராமகிருஷ்ணா மடத்தின் துறவிப் பெருமகனாரான ராமகிருஷ்ணானந்தரைச் சந்தித்தார். சுவாமிஜி ஊட்டிய சுதேசிய உணர்வும் சேர்ந்து கொண்டது.
பண்பாட்டுப் பெருமையும் சுதேசிக் கொள்கையும் சமுதாய நலமும் பின்னிப் பிணைந்து உந்த, சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி உதித்தது.
ஆசியப்பகுதிகளின் கடல் வாணிபத்தை முன்னெடுத்துச் சீர்படுத்துவது என்பதுதான் தொடக்கநிலை குறிக்கோள். இதற்காகவே, அப்போதைய நிலையில் தொழில்துறை வளர்ச்சி கண்டிருந்த ஜப்பானோடும் கூட்டு
சேரலாம் என்று கருதப்பட்டது.
தொடக்க காலத்தில், சொந்தமாகக் கப்பல்கள் வாங்க வேண்டும் என்றுகூட வ. உ. சி கருதவில்லை. குத்தகைக்கு எடுத்து ஓட்டலாம் என்றுதான் நினைத்தார். இதற்காக, பம்பாயிலிருந்து செயல்பட்ட ஷாலைன் ஸ்டீமர்ஸ் என்னும் நிறுவனத்தோடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
சுதேசி நாவாய்ச் சங்கத்தோடு, சுதேசி நெசவுச்சாலையும் சுதேசி பண்டகசாலையும் தொடங்கியிருந்தார். ஆனாலும், உதவுவதாகச் சொன்ன பலரும், பல்வேறு காரணங்களைக்காட்டிப் பின்வாங்க, பண்டகசாலை தலைதூக்க முடியாமல் படுத்தது; நெசவுச்சாலை முடிச்சுகளோடு முனகியது. நாவாய்ச் சங்கத்தின்மீது முழு கவனத்தையும் செலுத்தினார்.
சிவபுரம் மிட்டாதார் நல்லபெருமாள் பிள்ளையின் உதவி கிட்டியது. நல்லபெருமாள்பிள்ளைக்குத் தெரிந்தவரும், வாய்ச் சாதுரியம் மிக்கவருமானஜோசஃப் லூயி மேத்தா என்பவரை பம்பாய்க்கு அனுப்பினர்.
ஷாலைன் கம்பெனி, குத்தகைக்குக் கப்பல்களைத் தந்துவிடும் என்று முதலில் நம்பினர். அப்படித்தான் பேச்சு வார்த்தைகள் இருந்தன. இதற்காகத்தான் ஜோசஃப் மேத்தாவும் அங்கேயே காத்திருந்தார்.
ஆனால், எங்கே தங்களின் ஏகபோக ஆதிக்கத்திற்குக் குந்தகம் வந்துவிடுமோ என்று அச்சப்பட்ட பிரிட்டிஷ் ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனியாரும் பிரிட்டிஷ் வணிகர்களும், ஷாலைனுக்கு அழுத்தம் கொடுத்தனர்.
அச்சுறுத்தல்கள்ஆரம்பமாயின. இந்தப் பக்கம் தூத்துக்குடியின்ஆங்கிலேய சப்-மாஜிஸ்திரேட், சுதேசிக் கம்பெனியின் பங்குதாரர்களையும் பணியாளர்களையும் மிரட்டினார்.
ஷாலைனுக்கும் வ. உ. சி உள்ளிட்ட சுதேசிக் குழுவினருக்கும், கப்பல் குத்தகை பற்றிய பேச்சு வார்த்தைகள், 1906-ஆம் ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் வாக்கிலேயே தொடங்கி விட்டதாகத் தெரிகிறது.
குத்தகை குதிர்ந்துவிடுமோ என்றெண்ணிய பிரிட்டிஷார், சூசகமான விளையாட்டு ஒன்றை விளையாடியுள்ளனர்.
1906 ஆகஸ்டிலேயே, ஷாலைனின் உரிமையாளரான எஸ்ஸாஜி டாஜ்பாய் மற்றும் அவருடைய மகன் குலாம் ஹுசைன் ஆகியோரோடு ஒப்பந்தம் போட்டு, ஷாஸ் டீம் நாவிகேஷன் கம்பெனி என்னும் பெரிய நிறுவனத்தைத் தொடங்கி, அதில் இந்தியர்கள் பலரையும் பங்குதாரர்களாக்கி, ஷாலைனை அதனில் இணைத்துவிட வழி செய்தனர்.
டாஜ்பாயின் கப்பல்களைப் பெரிய நிறுவனம் வாங்கிக் கொண்டுவிட்டது. இதனால், முன்னர் நடந்த பேச்சு வார்த்தைகளின் தொடர்ச்சியாகக் கப்பல்களைக் குத்தகைக்குக் கேட்டபோது, டாஜ்பாயால் தரமுடியவில்லை.
சுதேசிக் கம்பெனியிலிருந்து டாஜ்பாய்க்கு எச்சரிக்கை நோட்டீஸ்கூட அனுப்பப்பட்டுள்ளது (டாஜ்பாயைக் கலவரப்படுத்திப் பெரிய நிறுவனம் என்னும் பூச்சாண்டி காட்டியவர்கள், பின்னர் டாஜ்பாயோடு பிணக்கமுற்று, இந்தியப் பங்குதாரர்களைக் கொண்டே கம்பெனியை மூடுவதற்கான கோரிக்கையை 1907 நவம்பர் மாதம் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வைத்தனர் என்பதும், 1913 வரை இந்த வழக்கின் மேல்முறையீடு நீடித்தது என்பதும் தனி அத்தியாயங்கள்).
கூடுதல் பணம் தருவதாகக் கூறி, எப்படியோ டாஜ்பாயைப் பணிய வைத்தார் வ. உ. சி. அவரோ, "நீரே ஒப்பந்தத்தை எழுதி, எடுத்துக் கொண்டு வாரும்' என்று தகவல் அனுப்பினார்.
"பல பல பகலும், பல பல இரவும் ஜலபானமின்றிச் சரிப்படச் செய்து பத்திரம் எழுதினேன்' என்று சட்டரீதியாகத் தாம் தயாரித்த ஒப்பந்தம் குறித்து வ. உ. சி-யே பதிவு செய்கிறார்.
ஒரு வழியாக ஒப்பந்தத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் மேத்தா பம்பாய் செல்ல, இன்னும் சில சிக்கல்களை டாஜ்பாய் கிளப்ப, அவற்றையும் சமாளித்த பின்னர், கொழும்புவில் ஒரு கப்பல் சுதேசிக் கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டே நாட்களில் அக்கப்பல் தூத்துக்குடியை அடைந்தது. வணிகர்களும் நல்லோரும் உள்ளம் களித்தனர்.
ஆனாலும், பிரிட்டிஷாரின் தொந்தரவுகள் அதிகரித்தன. டாஜ்பாயும் மனம் திரிந்தார். தூத்துக்குடியிலிருந்து பொருட்களோடு கொழும்பு சென்ற கப்பலை, வேறொரு துறைமுகத்திற்குத் திருப்பும்படி டாஜ்பாய் கூறிவிட, பணியாளர்களோ முதலாளி மாறியது புரியாமல், அப்படியே செய்துவிட்டனர். இறங்க வேண்டிய பொருட்கள் இறங்கவில்லை; ஏற வேண்டிய பொருட்கள் ஏறவில்லை; வணிகமோ, நட்டம் கண்டது.
ஃபகீர் முஹமத் என்னும் நண்பரின் துணையோடு, சார்ட்டர் முறையில் மற்றொரு கப்பலை வ. உ. சி, தூத்துக்குடிக்கு வரவழைத்தார். மாற்றாரோ, இதிலும் சிக்கலை ஏற்படுத்தினர்.
இத்தகைய குத்துவெட்டுகளும் குழிபறிப்புகளும் மிகுதிப்பட்ட நிலையில்தான், குத்தகையும் வாடகையும் சரிப்பட்டு வராது, நாமே கப்பல்களைச் சொந்தமாக வாங்கிவிடலாம் என்னும் முடிவை எடுத்தார்.
- தொடரும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.