தேவியின் திருத்தலங்கள்: 49 - திரிசூலம் சக்தி சந்தியம்மன்

இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற மூன்று சக்திகளும் இணைந்து மகாசக்தியாக விளங்குகிறாள் அம்பிகை.
தேவியின் திருத்தலங்கள்: 49 - திரிசூலம் சக்தி சந்தியம்மன்

"விஸாலா கல்யாணீ ஸ்புடருசி -  ரயோத்யா குவலயை:
க்ருபாதாரா தாரா கிமபி மதுரா போக - வதிகா'

-செளந்தர்ய லஹரி 

இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற மூன்று சக்திகளும் இணைந்து மகாசக்தியாக விளங்குகிறாள் அம்பிகை. சென்னை மீனம்பாக்கம் வானூர்தி நிலையம் அருகே திரிசூலம் மலைகளுக்கு நடுவில் குடி கொண்டு அருளாட்சி நடத்துகிறாள் அன்னை.

இந்த அன்னையை 7 ஊர்களிலிருந்து வந்து மக்கள் வழிபட்டதால் "ஏழுர் அம்மன்' என்றும் அழைக்கிறார்கள். மீனம்பாக்கம், பல்லாவரம், பழவந்தாங்கல், மூவரசம்பட்டு, கவுல்பஜார், பொழிச்சலூர், பம்மல் ஆகிய ஏழு ஊர்களைத் தன் எல்லையாகக் கொண்டு எட்டுத் திசைகளிலும் தன் ஆட்சியை நடத்துகிறாள்.

எல்லையற்ற சக்தி வாய்ந்த மகாசக்தியை, வாழ்முனி, செம்முனி, முத்துமுனி, வீரமுனி, கருமுனி, வேதமுனி, சடாமுனி, ஆகிய ஏழு முனிவர்களும் வந்து தரிசித்துள்ளனர்.

அக்காலத்தில், ஆற்றங்கரை மரத்தடியில் சுயம்புவாக எழுந்தருளியிருந்த அம்மனுக்கு ஆடி மாதத்தில், பத்துநாள்கள் விழா எடுப்பது இந்த ஏழு ஊர் மக்களின் வழக்கமாக இருந்தது. 

ஒருமுறை பக்தர்கள் காப்பு கட்டிக் கொண்டு, திருவிழாவை உற்சாகமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அன்னை சர்வ அலங்காரங்களுடன், ஜோதி மயமாய் தேரில் பவனி வந்து கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று பலத்த காற்றும், மழையும் அடிக்கவே, பக்தர்கள் அன்னையின் தேரை அப்படியே விட்டு விட்டு, ஒதுங்கி விட்டார்கள்.

அவர்களின் செயலால் கோபமடைந்த அன்னை, தேரோடு ஆற்றில் இறங்கி மறைந்தாள். அன்று முதல் யாருக்கும் அவள் காட்சி அளிக்கவில்லை. அந்த ஆண்டு முழுவதும் நாட்டில் நோயும், பஞ்சமும் உண்டாகி மக்கள் தீராத துன்பத்தில் அல்லல் பட்டனர்.

தினமும் ஆற்றங்கரை மரத்தடிக்கு வந்த பக்தர்கள் தங்கள் தவறுக்கு வருந்தி, அன்னையிடம் அழுது முறையிட, தன் குழந்தைகளின் துயர் கண்டு அன்னை மனம் இரங்கினாள். ஓர்நாள் அம்பிகை ஆற்றிலிருந்து மேலே எழுந்தருளினாள். 

அன்னையைத் துதித்த பக்தர்கள் கோயில் எழுப்பி, அம்பிகையை பிரதிஷ்டை செய்து, வழிபடத் தொடங்கினர். அன்னை, தன் பிள்ளைகளின் துயர் நீக்கி, சுபிட்சத்தை நல்கினாள். சாந்த ரூபிணியாக அமர்ந்து, தன் எல்லைகளைக் காத்து அருள்புரிந்து வருகிறாள்.

"சக்தி சந்தியம்மனை வேண்டினால் சகலமும் கிடைக்கும்!' என்பது மக்களின் நம்பிக்கை. திருமணத் தடைகளை நீக்கி, குழந்தைப்பேறு நல்கி, சகல செல்வங்களையும் வாரி வழங்குகிறாள். பொருள் செல்வம், கல்விச் செல்வம், அந்தஸ்து, புகழ், மதிப்பு, மரியாதை இவற்றுடன் மன நிறைவும், நிம்மதியுமான வாழ்வையும் அருள்கிறாள்.

திருமணமாகாத பெண்கள் ஏழு வாரங்கள் தொடர்ந்து சந்தியம்மனை தரிசித்து, வணங்கி வந்தால் அவர்களின் தோஷங்கள் அனைத்தும் விலகி திருமணம் நடை பெறும் என்பது ஐதீகம்.

ஒருமுறை இத்திருக்கோயில் அமைந்துள்ள இடத்தை சென்னை விமான நிலைய விஸ்தரிப்புக்காக கையகப்படுத்த முயன்றனர். அப்போது, இங்குள்ள புற்றை முதலில் இடிக்க முற்பட்டனர். அதில் சிலருக்கு பார்வை பறிபோனது, சில விபரீத விளைவுகள் ஏற்பட்டன. அடிக்கடி அந்தப் பகுதிகளில் விபத்துகள் நேரிட்டது. அதன்பின் சந்தியம்மனிடம் மனம் உருகி பிரார்த்தனை மற்றும் பரிகாரங்கள் செய்து, கோயிலை அகற்றும் முடிவை கைவிட்டனர். 

விண்ணில் பயணிப்போருக்கும், மண்ணில் வசிப்போருக்கும் வேண்டியதை வேண்டியபடி அருள்கிறாள் அன்னை. அம்மனின் சந்நிதி அழகான வேலைப்பாடுகள் நிறைந்த விமானத்துடன் அமைந்துள்ளது. கருவறையில் திரிசூல நாயகியாக, மலர்ந்த முகத்துடன் காட்சி அளிக்கிறாள் அம்பிகை. பிரகாரத்தில், நவகிரகங்கள், விநாயகர், முருகன், ஐயப்பன், முனீஸ்வரர் எழுந்தருளியிருக்கிறார்கள்.

இங்குள்ள அரச மரத்தினடியில், சிவன், கணபதி சந்நிதிகளும், கோயிலுக்கு வெளியே, சப்த கன்னியர் சந்நிதிகளும் உள்ளன. ஆரம்ப காலத்தில் மண் சுவராக இருந்த இடம், இன்று நவீன கட்டுமான வசதியுடன் உருவாகியுள்ளது.

ஏழூர் தவிர, அருகிலுள்ள மற்ற பகுதிகளிலிருந்தும், மக்கள் தரிசனத்திற்கு வருகிறார்கள். செவ்வாய், வெள்ளி, பெளர்ணமி மற்றும் திருவிழா நாள்களில் அதிக அளவில் பக்தர்கள் கூடுகிறார்கள். தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பின்னர் பக்தர்கள் பொங்கலிட்டு அன்னையை வழிபடுகிறார்கள்.

"அன்னையே! உன் திருவருள் விளையாடல்களைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. உன் ஒரு கண் அசைவே போதும்; உலக உயிர்களைக் காக்க!'- என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். "அம்மா, உன் கண்கள் கருணையின் பொக்கிஷமாகவும், சொல்லவொண்ணா அழகுடையதாகவும் இருக்கிறது!' என்கிறார் செளந்தர்ய லஹரியில். விசாலாட்சி, கல்யாணி, துராதர்ஷா, தியாமூர்த்தி, போகினி, விஜயா என்று பலவிதமாக அவளைக் கொண்டாடுகிறது லலிதா சகஸ்ரநாமம். 

அன்னை நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவிக்கவே அவதாரம் எடுத்திருக்கிறாள். 

"அன்னையே! என் பாவச்சுமைகளை எண்ணி நான் வருந்தவில்லை. நான் எவ்வளவு பாவங்கள் செய்திருந்தாலும், என் கர்மவினையின் காரணமாக இப்பிறவி எடுத்திருந்தாலும், அதில் நான் செய்த நல்வினைகளின் பயனாகவே உன்னை வணங்கும் பேறு பெற்றேன். 

அதனாலேயே என் பாவச் சுமைகள் அகலுகின்றன!' என்கிறார் மூசுகவி. அம்பிகையைக் காண தவங்கள், விரதங்கள், ஹோமம், யாகம் எதுவும் தேவையில்லை. ஆழ்ந்த பக்தியும், அவள்மேல் உறுதியான நம்பிக்கையும் இருந்தால் போதும். "ஓம் சக்தி சந்தியம்மா' என்றால் சடுதியில் ஓடி வருவாள். அன்னையை நோக்கி இருகரம் நீட்டினால் நம் தவறுகளை எல்லாம் மறந்து, காக்க ஓடி வருவாள் ஆதிசக்தியின் அம்சமான சந்தியம்மன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com