தேவியின் திருத்தலங்கள் 17: பவானி வேதநாயகி அம்மன்

உலக மகா சக்தியான அன்னைக்கு பேதங்கள் இல்லை. அவளுக்கு சகலமும், சகலரும் ஒன்றே. வான்மழை போல் அவள் கருணை மழை அனைவருக்கும் பொதுவாகப் பொழிகிறது.
தேவியின் திருத்தலங்கள் 17: பவானி வேதநாயகி அம்மன்

"பவந்த்யஸ்ய த்ரஸ்யத்-வன ஹரிண - சாலீன - நயனா:

சஹோர்வஸ்யா வஸ்யா: கதிகதி ந கீர்வாண- கணிகா:'

-சௌந்தர்ய லஹரி 

உலக மகா சக்தியான அன்னைக்கு பேதங்கள் இல்லை. அவளுக்கு சகலமும், சகலரும் ஒன்றே. வான்மழை போல் அவள் கருணை மழை அனைவருக்கும் பொதுவாகப் பொழிகிறது. அது கி.பி. 1804-ஆம் ஆண்டு. கோவை மாவட்டக் கலெக்டராக இருந்தவர் சர். வில்லியம் கேரோ என்பவர். 

ஒருமுறை அவர் பவானி கோயிலுக்கு வெளியில் உள்ள ஒரு கட்டடத்தில் தங்கி இருந்தார். (இப்போது அந்த இடத்தில் பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகை இருக்கிறது). அன்று ஊரே அதிரும் வண்ணம் இடியும், மின்னலும் சேர்ந்து, பலத்த மழை கொட்டியது. நள்ளிரவு தாண்டியும் மழை நின்றபாடில்லை. அப்போது கலெக்டரின் அறைக்கதவு படபடவென தட்டப் பட்டது. கதவைத் திறந்து வெளியில் வந்த கேரோ ஒரு சிறுமி நிற்பதைக் கண்டு ஆச்சரியமாகப் பார்க்க, அந்தச் சிறுமி அவர் கையைப் பிடித்து வெளியில் இழுத்து வந்தாள்.

என்னவென்று தெரியாத திகைப்பில் கலெக்டர் வெளியே வந்து நிற்க, அக்கணமே அவர் தங்கியிருந்த மாளிகை இடிந்து விழுந்து தரை மட்டமாகியது.  கேரோ அதிர்ந்து கூச்சலிட்டு சிறுமிக்கு நன்றி சொல்லத் திரும்பியபோது, அங்கு அந்தச் சிறுமியைக் காணவில்லை. அவரின் உதவியாளர்கள்,  கோயில் அர்ச்சகர்கள் அனைவரும் அங்கு கூடிவிட, அனைவருக்கும் இது வேதநாயகி அம்மனின் அற்புதம் என்று புரிந்தது.

கேரோ உடனே அம்மனைப் பார்க்க விரும்பினார். ஆனால் அவர் உள்ளே வந்து தரிசனம் செய்யாமல், அடுத்த நாள் அம்பாள் சந்நிதிக்கு எதிரே மூன்று துளையிட்டு அம்பிகையை தரிசனம் செய்தார். அங்கு கேரோ தன்னைக் காப்பாற்றிய சிறுமியாக அன்னையைத் தரிசனம் செய்ய, உடல் பூரிக்க, கண்ணீர் மல்க அவளின் திரு உருவத்தை வணங்கினார். அந்தத் துளைகள் இன்றும் உள்ளன.

கலெக்டர் மகிழ்ந்து "உங்கள் வேத நாயகியின் அருட்பார்வை அளவற்ற சக்தி படைத்தது. என் நன்றியைத் தெரிவிக்கும் வண்ணம் அம்மனுக்கு நான் ஏதேனும் செய்ய விரும்புகிறேன்'' என்றார். 

அதற்கு கோயில் குருக்கள், சங்கமேஸ்வரர், வேத நாயகி அம்மன் உற்சவர்களுக்கு ஊஞ்சல் தொட்டில் செய்து தரச் சொல்லி கேட்டார். கலெக்டரும் சம்மதித்து, தந்தத்தினாலான ஊஞ்சலை அழகாகச் செய்து கோயிலுக்கு 11.1.1804 -இல் தந்தார்.

இன்றுவரை இரவு பள்ளியறை பூஜை முடிந்ததும், அம்பிகையையும், ஈசனையும் அந்த ஊஞ்சலில் வைத்து ஆராதிக்கிறார்கள். காவிரி, பவானி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி மூன்றும் கூடும் இடமானதால் அது "கூடுதுறை' என்று அழைக்கப்படுகிறது. அம்மன், நதி, தலம் மூன்றிற்கும் பவானி என்றே பெயர். இத்தலம் வந்து நீராடி அம்பிகை, இறைவனைத் தரிசிப்பவர்களை "யாதொரு தீங்கும் நண்ணாது (நெருங்காது)' என்ற பொருளில் இது "திருநணா' என்று புராணங்களில் குறிப்பிடப் படுகிறது.

பாற்கடல் கடைந்த பொழுது வெளிப்பட்ட அமிர்தத்தை, தேவர்களுக்கு பகிர்ந்து கொடுத்த பிறகு மீதம் இருந்தது. அதைத் தவ முனிவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று மகாவிஷ்ணு விரும்பினார். கருடனும், பெருமாள் அளித்த அமிர்த கலசத்தை பராசர முனிவரிடம் அளிக்க, அவர் கலசத்தைப் பாதுகாப்பாக மறைத்து வைத்தார். அப்போது அமிர்த கலசத்தைத் தேடி வந்த லாவணாசுரனின் நான்கு மகன்களும் அவரிடமிருந்து அதைப் பறிக்க முற்பட, பராசர முனிவர் வேதநாயகி அம்மனிடம் முறையிடுகிறார். அன்னையிடமிருந்து நான்கு சக்திகள் கிளம்பி, அசுரர்களை அழித்து அந்தக் கலசத்தை மீட்டு பராசர முனிவரிடம் ஒப்படைத்தன. 

முனிவர் கலசத்தை எடுத்தபோது அதில் ஒரு லிங்கம் இருந்தது.ஈசன் அங்கு ஓர் அமிர்த தீர்த்தம் உருவாக்க, அது பவானி, காவிரி ஆறுடன் கலந்து கூடுதுறை என்று முக்கூடலாக மாறியது.

இதன் வடகரையில் உயர்ந்த ராஜகோபுரத்துடன் அழகுறக் காட்சி அளிக்கிறது கோயில். இறைவி, இறைவன் சந்நிதியுடன், ஆதிகேசவப் பெருமாள், செüந்தரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்து ஹரியும், சிவனும் ஒன்று என்ற கருத்தை வலியுறுத்துகிறது.

கோயில் நான்கு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ராஜகோபுரம் ஏழு நிலைகளையும், ஐந்து கலசங்களையும் உடையதாக கம்பீரமுடன் நிற்கிறது. நான்கு வேதங்களும் இங்கு தீர்த்தமாக உள்ளன. அவற்றின் அம்சமாக அம்பிகை வேதநாயகி திகழ்கிறாள். கோபுரமே இங்கு ஈசனாக கருதப்படுகிறது. எனவே கோபுரத்திற்கு வெளியேதான் நந்தி உள்ளது. ஆண்டுதோறும் மாசிமகம், ரத சப்தமிக்கு மூன்றாம் நாளன்று சூரிய ஒளி  சங்கமேஸ்வரர், வேதநாயகி அம்மன், சுப்பிரமணியர் மீது  விழுகிறது.

அம்பிகையின் சந்நிதியில் உள்ள தூண்களும், சிற்பங்களும் அழகிய வேலைப்பாடுகள் அமைந்தவை. உள் சிற்ப வேலைப்பாட்டில் அமைந்துள்ள சிரிக்கும் பெண் சிலை, நாம் பார்க்கும்போது நம்மைப் பார்த்துச் சிரிப்பது போல் இருக்கும். இறைவியின் திருக்கோலம் அற்புதமான அழகுடன் காட்சி அளிக்கிறது. கருணை பொங்கும் அவளின் அழகிய உருவம் மனதில் நின்று நிலைத்து விடும்.  ஆடி பதினெட்டு விழா இங்கு மிகவும் சிறப்பாக கொண்டாடப் படுகிறது.  கூடுதுறையில் நீராடினால் பாவங்கள் விலகும் என்றாலும், அமாவாசை, தை அமாவாசை நாள்கள் மிகச் சிறப்பு. அன்று மறைந்த முன்னோர்க்கு தர்ப்பணம் கொடுக்க, பிண்டம் வைக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.

ஆடி பதினெட்டு அன்று சுமங்கலிப் பெண்கள் அம்பிகையை வணங்கி, தேங்காய், பழம், பூ, காதோலைக் கருகமணி, மஞ்சள் கயிறு ஆகியவற்றை வைத்து வழிபட்டு, அவற்றை ஆற்றில் விட்டு தீபாராதனை செய்து, மஞ்சள் கயிறு கட்டிக் கொள்வார்கள். மாங்கல்யம் நிலைக்க, திருமணம் நடக்க இந்த வழிபாடுகளை பெண்கள் மேற்கொள்கிறார்கள்.
அம்பிகையை வணங்கினால் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.

அன்னை தன்னை வணங்கும் பக்தர்கள் இதயத்தில் உள்ள அஞ்ஞான இருளைப் போக்கி அருள் தருபவள். எனவேதான் லலிதா சகஸ்ரநாமம் அவளை "நக்தீதிதி ஸஞ்சன்ன நமஜ்ஜன தமோகுணா'என்று புகழ்கிறது.

"கரமலர் குவித்துன்னை வணங்கினேன் 
கர்மவினைகளை அழித்திடுவாய் 
யுகம்தோறும் எடுத்திடும் பிறவிதனை அழித்து 
உன் பாதத்தில் இணைத்திடுவாய்
ஆசைக்கடலில் அல்லலுறும் 
என் மன இருள் அகற்றி உன் வாசம் வீசும் 
கைமலர் நீட்டிக் காத்திடுவாய் } 
உன்னையே அன்னையே என்றோடி வந்தேனே' 

என்று அவளையே தஞ்சமென நினைத்தால் பறந்தோடி வருவாள் வேதநாயகி.
இத்திருத்தலம் ஈரோட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com