தேவியின் திருத்தலங்கள்: 46: குன்றத்தூர் காத்யாயனி அம்மன்

காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, மாரியம்மன், காளி  என்ற பல்வேறு பெயர்களுடன் விளங்கும் அவள், கல்யாண வரம் அருள்வதற்கென்றே "காத்யாயனி அம்மன்' என்ற பெயரில் குன்றத்தூரில் கோயில் கொண்டிருக்கிறாள்.
தேவியின் திருத்தலங்கள்: 46: குன்றத்தூர் காத்யாயனி அம்மன்


"தரஸ்மேரே யஸ்மிந் தஸநருசி கிஞ்ஜல்க - ருசிரே
ஸூகந்தெள மாத்யந்தி ஸ்மர - தஹந - சட்சுர்- மதுலிஹ:'

- செளந்தர்ய லஹரி

காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, மாரியம்மன், காளி  என்ற பல்வேறு பெயர்களுடன் விளங்கும் அவள், மணமாகாதவர்களுக்கு கல்யாண வரம் அருள்வதற்கென்றே "காத்யாயனி அம்மன்' என்ற பெயரில் குன்றத்தூரில் கோயில் கொண்டிருக்கிறாள்.

திருமணம் தொடர்பான பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் அது காத்யாயனி தேவியை வணங்குவதால் தீரும். தேவியின் ஒன்பது வடிவங்களை நவராத்திரியில் வழிபடுகிறோம். அதில் ஒரு வடிவம் காத்யாயனி தேவி. "காத்யாய மகரிஷி'யின் மகளாகப் பிறந்ததால் அம்பிகை "காத்யாயனி' என்று அழைக்கப்படுகிறாள்.

நான்கு கைகள் கொண்டு, இடது மேல் கையில் ஒரு தாமரை மலரும், கீழ் இடது கையில் ஒரு நீண்ட வாளும் கொண்டு காட்சி தருகிறாள். வலது கைகளில் அபய, வரத முத்திரைகளுடன் சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கிறாள்.

இவளை வழிபடுபவர்கள் இல்லத்தில் அமைதியும், செல்வமும் தழைத்து வளரும்.  அம்மன் வழிபாட்டில் "காத்யாயனி பூஜை‘ மிகவும் முக்கியமானது. இந்த அம்பிகையின் வழிபாடு கேரளத்தில் மிகப் பிரசித்தம். "கேரள மாந்த்ரீக ரத்னா கல்ப'த்தில் இதைப் பற்றிய விவரங்கள் இருக்கின்றன.

குன்றத்தூரில் உள்ள காத்யாயனி அம்மன் ஆலயத்திற்கு, கல்யாண வரம் வேண்டி ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். காமேஸ்வரி துளசி யக்ஞம், சுயம்வரகலா, கந்தவராஜா யக்ஞம் ஆகியவை இங்கு நடைபெறுகிறது.  இங்கு மத்திம பச்சையும், கிரிநிம்பமும், திருமண மரமும் தல விருட்சமாக இருக்கிறது. குழந்தை இல்லாத தம்பதியருக்கு ஹோமம் செய்யப்பட்ட கிரிநிம்ப மூலிகை பிரசாதமாக வழங்கப்படுகிறது.

கல்யாண வரம் தருகின்ற சக்தி வாய்ந்த அம்பிகையாக அன்னை விளங்குகிறாள். இரண்டு குபேரன் சிலைகள் சக்தியின் பிரதிமைகளாக மேல் தளத்தைத் தாங்கி நிற்க, அன்னை நாகாபரணத்தோடு காட்சி அளிக்கிறாள். அருகில் முருகனும், கணபதியும் அன்னையுடன் இருக்கிறார்கள்.

முகப்பில் உள்ள தோரண வாயிலுக்கு நேராக சக்தி ஸ்ரீ மங்கள மாரியும், துவார சக்திகளாக கங்கை, யமுனையும் நிற்கிறார்கள். தென் கோஷ்டத்தில் தோரண கணபதி அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இவரை வணங்கி, நெய்  தீபம் ஏற்றினால் கடன்கள் அடைபடும். கருவறை வெளிச்சுவற்றின் கோஷ்டங்களில் அஷ்ட லட்சுமிகள் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர்.

சென்னையில், திருவேற்காடு கருமாரி அம்மன், மாங்காடு காமாட்சி அம்மன், குன்றத்தூர் காத்யாயனி அம்மன் ஆகிய மூன்று ஆலயங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. ஒரே நாளில் ஒவ்வொரு தலத்திலும் மூன்று நெய்விளக்குகள் ஏற்றி, இந்த மூன்று சக்திகளைத் தரிசனம் செய்வதை "திரிசக்ர தரிசனம்' என்கின்றனர்.

கல்யாண பிரார்த்தனைக்கு வருபவர்கள் மூன்று வாரம் தொடர்ந்து வர வேண்டும். முதல் வாரம் அம்மன் சந்நிதியில் கிரஹ தோஷம் விலக பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். 

இரண்டாவது வாரம் இங்குள்ள திருமண மரத்திற்குப் பூஜைகள் செய்து, அம்மன் சந்நிதியில் மஞ்சள் காப்பு கட்டிக் கொள்ள வேண்டும். மூன்றாவது வாரம் "பெண் ஜென்ம பத்ரிகா பூஜை' செய்ய வேண்டும். 

ஜனன ஜாதகத்தில் கிரகங்கள் நல்ல இடத்தில் அமர்ந்து நலம் செய்ய, அன்னையை நவகிரக நாயகியாக பாவித்து, அவளது பீடத்தில் "ஜன்ம பத்ரிகா' என்னும் ஜாதகத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும்.

இதைச் சிரத்தையாகச் செய்யும் பெண்களுக்கு மூன்று பட்சங்களுக்குள் திருமணம் உறுதியாக நடக்கும் என்று பக்தர்கள் கூறுகிறார்கள் ( ஒரு பட்சம் என்பது 15 நாள்கள் கொண்ட கால அளவைக் குறிப்பதாகும். அம்மனைத் துதித்து வழிபட நிறைய மந்திரங்கள் இருந்தாலும், சில மந்திரங்கள் வீர்யம் உடையதாக இருக்கிறது. அம்பிகையை வணங்குவதால் மாங்கல்ய பாக்கியம் கிட்டுவது மட்டுமல்லாமல், சகல மனோரதங்களையும் நிறைவேற்றுவாள். அம்பிகையின் திருநாமத்தை உச்சரிப்பதால் அவளின் முழு அருளும் கிடைக்கிறது.

"தாயே! உன் மலர்ந்த முகத்தை தரிசிக்கும் போதே எங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறிய மகிழ்ச்சி உண்டாகிறது. ஈசனின் பிரிய பத்தினியான நீயே எங்களைக் கடைத்தேற்ற வல்லவள். உன்னை வணங்குவதால் எங்களுக்கு சகல செளபாக்கியங்கள் உண்டாகின்றன!' என்கிறார் ஸ்ரீசங்கரர்.

"ஈசனின் இல்லாளாகிய உன் கடைக்கண் பார்வையை என்மேல் செலுத்தினால் போதும். "பவானி' என்று உன் நாமத்தைச் சொன்ன அந்த நிமிடமே அடியவரின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றும் கருணாசாகரீ நீ!' என்கிறார் சங்கரர்.
மேலும், உன்னைத் தவிர வேறு எவரிடமும் இத்தகைய கருணையை எதிர்பார்க்க முடியாது என்கிறார். அத்தகைய தேவியானவள் தன் குழந்தைகளின் திருமணப் பேற்றிற்காக காத்யாயனி என்னும் தனிப்பெயருடன் இங்கு கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள்.

குன்றத்தூர் காத்யாயனி கோயிலின் அருகில்தான் சேக்கிழார் பெருமான் அவதரித்த இல்லம் அமைந்துள்ளது.

திருமணம் தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்கள் சொல்ல வேண்டிய மூல மந்திரம்:

"ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்! 
காத்யாயனி மஹாமாயே மகாயோஹின் யதீஸ்வரி! 
நந்த கோப சுதம் தேவம் பதிம்மே! குருதே நமஹ!

-என்னும் மந்திரத்தை தினமும் காலையில் குளித்து அம்பிகையை வேண்டி விளக்கேற்றி, நூற்றி எட்டு முறை சொன்னால் கண்டிப்பாக விரைவில் திருமணம் நடைபெறும் என்கிறார்கள்.

காத்யாயனி தேவிக்கான மற்றொரு கோயில், தஞ்சாவூர் மாவட்டம் மாந்துறையில் உள்ளது. இங்கு அன்னை இடக்காலை மடித்து, வலக்காலை தொங்கவிட்டு வலக்கையில் கிளியும், இடக்கையில் தாமரை மலரும் தாங்கி, ஐந்துதலை நாகம் குடை பிடிக்க, அமர்ந்திருக்கிறாள்.

ஒரு பெண்ணின் வாழ்வு திருமணம் மூலமே முழுமையாகிறது. அவள் கணவன் கண், மனம் நிறைந்தவனாக அமைந்து விட்டால் அவளை விடப் பெரும் பேறு பெற்றவர் யாரும் இல்லை. அம்பிகையை வணங்கி  விட்டால் அவளின் வாழ்வு மங்களகரமாக ஆரம்பித்து விடும். அந்த மங்களத்தை அருள்பவள் அம்பிகை.

"சிந்தையில் உன் தோற்றம், செயலெல்லாம் உனக்கு, என்றுமே
என் வாழ்வெலாம் நீயே! என் உயிரும், உணர்வும் நீயானாய்!'

-என்று அம்பிகையை மனதில் நிறுத்தினால் வாழ்வின் குறைகளை எல்லாம் தீர்த்து, வளமான வாழ்வும், மாங்கல்ய பாக்கியமும் அருள்வாள் ஸ்ரீ காத்யாயனி அம்மன்! 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com