தென் தணிகை தெய்வம்!
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாய் விளங்கும் முருகப்பெருமான் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் ஆவார்.


கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாய் விளங்கும் முருகப்பெருமான் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் ஆவார். "குன்றுகள் தோறும் நின்றருளும் குமரன்' என்று சொல்லும் அளவிற்கு அவன்பல குன்றுகளில் வீற்றிருந்து குவலயத்தோர் நலம் பெற அருளுகின்றான் என்பது நிதர்சனம். அவைகள் மலைக்கோயில் அல்லது மலைத்தலம் என்று அழைக்கப்படுகிறது. "மலைக்கோயில்' என்றால் படி இருக்க வேண்டுமல்லவா? பக்தி நெறியில் படிப்படியாக முன்னேறி முக்தி நிலை அடைவதற்கும், இகவாழ்வில் தடைகளைத் தாண்டி முன்னேறுவதற்காகவும் அமைந்துள்ளது அப்படிகள் என்பதே அவை உணர்த்தும் தத்துவமாகும்.
சென்னையைச் சுற்றி அமைந்துள்ள பழைமையான முருகன் ஆலயங்களுள் குன்றத்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலும் ஒன்று. எழில்மிக்க கோயில்கள் சூழ்ந்த கோயில் நகரமாம் குன்றத்தூரில் அமைந்துள்ள இக்கோயிலின் சிறப்பை மேலும் அறிவோம்.
தலச்சிறப்பு: திருக்கூவம் எனும் ஊரில் தங்கியிருந்த "தாரகன்' என்ற அரக்கனுடன் போர் புரிந்து அவனை வதம் செய்த பிறகு, சற்று இளைப்பாறும் பொருட்டு வள்ளி தெய்வானையுடன் முருகன் திருத்தணி செல்லும் வழியில் ஒரு முகூர்த்த காலம் (மூன்றே முக்கால் நாழிகை) இம்மலையில் தங்கிக் காட்சியளித்ததாக வரலாறு. திருத்தணிகைக்கு முன் குன்றத்தூரில் கால் பதித்து நின்றதால் இத்தலம் "தென் தணிகை' என சிறப்பித்து கூறப்படுகிறது. இதைத்தவிர ஆதிதலம் எனவும், பிரணவ தலம் என்றெல்லாம் சிறப்பிக்கப்படுகிறது. அருணகிரி நாதப்பெருமான் பாடல் பெற்ற பதியாக கருதப்படுகிறது. சிவனடியார்கள் பெருமை பேசும் "திருத்தொண்டர் புராணம்' என்ற பெரிய புராணத்தை அழகு தமிழில் காவியமாக வடித்த தெய்வச் சேக்கிழார் பெருமானின் அவதார தலம் குன்றத்தூர். அவதார இடத்தில் அவருக்கு அழகிய ஆலயம் உள்ளது.
கல்வெட்டுக் குறிப்பு: இரண்டாம் குலோத்துங்கச் சோழ மன்னன் காலத்தில் இத்திருக்கோயில் நிறுவப்பட்டிருக்கலாம் என்பது வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து. இருப்பினும் இவ்வாலயத்தில் காணப்படும் ஒரே ஒரு கல்வெட்டு மூலம் கி.பி 1720}ஆம் ஆண்டு மதுரை நாயக்கர் காலத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ள தகவலை
அறியலாம்.
சந்நிதிகள் சிறப்பு: அடிவாரத்தில் பதினாறு கால் மண்டபம், அதனைத்தொடர்ந்து 84 படிகள் இடையில் வலஞ்சுழி விநாயகர் சந்நிதி, பின் தோரண வாயில் மண்டபம், ராஜகோபுரம், பலிபீடம், கொடிமரம், மயில் மண்டபம் துவாரபாலகர்கள் சந்நிதி, கருவறை என்ற அழகிய அமைப்பில் அமைந்துள்ளது ஆலயம். கொடிமரத்திற்கு இடப்புறத்தில் பிரகாரத்தில் பைரவர், நவக்கிரக சந்நிதிகள் உள்ளது.
வெளிப் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை, வில்வமரத்தடி விநாயகர் சந்நிதிகள் அமைந்துள்ளது. மகாமண்டபத்தில் வரசக்தி விநாயகர் சந்நிதி, விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் சந்நிதிகள் உள்ளது. இங்கு பிரதிஷ்டையாகி உள்ள காசி விஸ்வநாதருக்கு தனி வரலாற்று பின்னணி உண்டு. கருவறையில் நேரில் நின்று பார்த்தால் முருகனை மட்டும், ஒரு பக்கம் நின்று பார்த்தால் வள்ளியுடன் இருப்பது போலவும், மறுபக்கம் பார்த்தால் தேவசேனாவுடன் முருகன் இருப்பது போலவும் தென்படும் அதிசய அமைப்புடன் திகழ்கின்றது.
தீர்த்தச்சிறப்பு: மலைக்குப் பின்புறமுள்ள குளமே "சரவணப் பொய்கை' என்று அழைக்கப்படுகிறது. ஆலய வெளிப் பிராகரத்திலும் தீர்த்தக்கிணறு உள்ளது. இரண்டிலுமே கோடைக் காலத்திலும் நீர்வற்றுவதில்லை என்பது சிறப்பு.
வழிபாட்டுச் சிறப்பு: ஆலய வெளிப்பிராகரத்தின் தென்கிழக்கு மூலையில் அரசமரமும் வேப்ப மரமும் பின்னிப் பிணைந்திருக்க, அதைச் சுற்றி ஒரு மேடை உள்ளது.
இங்கு நாகலிங்கேஸ்வரரும், காளிங்க நர்த்தனரும் பிரதிஷ்டையாகி உள்ளனர். இந்த மேடையில் வேண்டிக்கொண்டு கல்லைத் துணியில் கட்டுவதும், பிரார்த்தனை நிறைவேறிய பிறகு கட்டிய கல்லை அவிழ்த்துவிட்டு முருகனை தரிசித்து பின் திருக்கோயிலுக்கு காணிக்கை செலுத்துவதும் பக்தர்களின் வழக்கமாக உள்ளது. இதைத்தவிர பிரார்த்தனை வேண்டுதலாக முடி
காணிக்கை செலுத்துதல், காவடி எடுத்தல் திருமணங்கள் நடத்துதல் போன்றவைகளும் நடைபெறுகின்றன.
கும்பாபிஷேகச் சிறப்பு: தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் இவ்வாலயத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஏப்ரல் 25}ம் தேதி, திங்கள்கிழமை திருக்குட முழுக்கு விழா சிறப்பாகநடைபெற உள்ளது. ஆன்றோர்களும், அருளாளர்களும், முக்கியப் பிரமுகர்களும் இவ்வைபவத்தில் பங்கேற்கின்றனர்.
யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 22) தொடங்குகிறது. நம் கவலைகளை மறந்து கந்தனுக்கு நடைபெறும் கொண்டாட்ட வைபவங்களை கண்டு களித்து அவனருள் வேண்டு
வோமாக!
தல இருப்பிடம்: பல்லாவரத்திற்கு மேற்கே 8 கி.மீ. தொலைவிலும், பூந்தமல்லியிலிருந்து வடகிழக்கே 8 கி.மீ தூரத்திலும் உள்ளது குன்றத்தூர். அவ்வூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ தூரத்தில் உள்ளது மலைக்கோயில்.
-எஸ்.ஸ்ரீராம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...