திருக்கயிலாயப் பரம்பரைத் தருமையாதீனத்திற்குச் சொந்தமான திருக்கோயில்களில் ஒன்றான திருநின்றியூர் ஸ்ரீ உலகநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ லட்சுமிபுரீசுவர சுவாமி கோயிலிலும், தென் திருமுல்லைவாயில் ஸ்ரீ அணிகொண்ட கோதையம்மை உடனாகிய திருமுல்லைவனநாதர் ஆலயத்திலும் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் முறையே ஜனவரி 23 மற்றும் 27 }ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
தற்போதைய தருமையாதீனம் குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாரின் திருவுளப்பாங்கின்படியும், வழிகாட்டுதலுடனும் பல்வேறு சீரிய திருப்பணிகள் இவ்விரு ஆலயங்களிலும் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்த நிலையில், நடைபெறும் இவ்விரு கும்பாபிஷேக வைபவங்கள் நோய்த்தொற்று பரவாமல் இருக்க அரசின் விதி முறைகள் முற்றிலும் பின்பற்றப்பட்டு நடைபெறுவதாக ஆதீனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநின்றியூர் அமைவிடம்:
வைத்தீஸ்வரன் கோயில் ஸ்ரீ வைத்திய நாதசுவாமி தேவஸ்தானத்துடன் இணைந்த ஸ்ரீ லட்சுமி புரீசுவரர் சுவாமி திருக்கோயில் மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது. தேவாரப் பதிகம் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இத்தலம் 19}ஆவது ஆகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் திருப்பதிகங்கள் பாடப்பெற்றது.
தலச்சிறப்பு: திருமகள் வழிபட்டு நிலைபேறெய்திய தலமாதலின் "திருநின்றியூர்' எனப் பெயர் பெற்றது. (திருநின்றவூர் என்பது வேறு; அது தொண்டை நாட்டில் உள்ள வைணவ திவ்ய தேசம்) சுந்தரர் தன் பதிகத்தில் "செந்தண் மாமலர்ந்த திருமகள் மருவுஞ் செல்வத் தென்றிரு நின்றியூரானே!' என்று குறிப்பிடுகிறார்.
பரசுராமர், அகத்தியர், இந்திரன், காமதேனு, ஐராவதம் (வெள்ளை யானை) வழிபட்ட தலம். பரசுராமர் வேதம் ஓதும் அந்தணர்களுக்கு 360 வேலி நிலம் தந்த ஊர். சுந்தரரின் பதிகத்திலும் இக்குறிப்பு உள்ளது.
ஆலய அமைப்பு: கோட் செங்கோட் சோழன் கட்டிய மாடக் கோயில்களில் இதுவும் ஒன்று. பிற்காலச் சோழர்கள் காலத்தைச் சேர்ந்த சிதைந்த கல்வெட்டு இத்தலத்தில் காணப்படுகிறது. ராஜ கோபுரத்தோடும், தோரணத் திருவாயிலோடும், நாற்புறமும் அழகிய மதிலால் சூழப்பெற்று விளங்குகிறது. "நீல மலர்ப் பொய்கை' என்பது இத்தலத்தீர்த்தத்தின் பெயராக குறிப்பிடப்படுகிறது.
மூலவர் சிறப்பு: மன்னன் ஒருவன் கோயிலைக் கட்டுவதற்காக இங்கு வந்து பூமியை இடித்துப் பார்த்த போது, குருதி பீறிட, தோண்டிப்பார்க்கையில் சிவலிங்கம் இருப்பதைக்கண்டு சிவன் கோயில் கட்டினான் என்பது வரலாறு. மூலவர் சுயம்பு, உயர்ந்த பாணம், லிங்கத்தின் உச்சியில் இடித்ததனால் ஆன குழி உள்ளது. பட்டு சார்த்தி கம்பீரமாக காட்சியளிக்கிறார். வழிபாட்டுப்பலன்: இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு மகாலட்சுமி அருள் கிட்டும், சிவகதி எளிதில் கிட்டும் என்ற சிறப்புகளுடன் திகழ்கிறது இத்திருத்தலம். ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
கும்பாபிஷேகச் சிறப்பு: தற்போது நடைபெற உள்ள கும்பாபிஷேகம் 1955}ஆம் வருடத்திற்குப் பிறகு நடைபெறுகிறது. யாகசாலை பூஜைகள் ஜனவரி 21-இல் ஆரம்பமாகின்றன.
தென் திருமுல்லைவாயில் அமைவிடம்: சீர்காழி சட்டநாத சுவாமி தேவஸ்தானத்துடன் இணைந்த ஸ்ரீ முல்லைவன நாதர் ஆலயம் சீர்காழிக்கு வடகிழக்கே 13 கி.மீ. தொலைவில் கடற்கரையோரத்தில்
உள்ளது. தேவாரத் திருப்பதிகம் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இத்தலம் 7}ஆவது ஆகும். திருஞான சம்பந்தர் திருப்பதிகம் பெற்றது. திருநாவுக்கரசர் தேவாரத்தில் வைப்புத்தலமாக இடம் பெற்றுள்ளது. தலபுராணம் சீர்காழி வடுகநாத தேசிகர் அவர்களால் இயற்றப்பட்டது.
தலச்சிறப்பு: திருக்கயிலாயத்தில் அம்பிகை, ஈசனிடம் பஞ்சாட்சர உபதேசம் பெற்று இத்தலத்திற்கு வந்து, முல்லைவனநாதரை முறைப்படித் தொழுது ஐந்தெழுத்து மந்திரம் ஓதி, சிவஞானம் கை வரப்பெற்றாள். இதனை "அணிகொண்ட கோதை அவள் நன்றும் ஏத்த அருள் செய்த எந்தை' என ஞானசம்பந்தப்பெருமான் போற்றிப் பாடியுள்ளார்.
பிதுர்கடனை ஆற்ற இத்தலத்திற்கு வந்த சுசாவி என்ற அந்தணரின் மகன் இத்தலத்தில் உள்ள விஷ்ணு தீர்த்தத்தில் தன் தந்தையின் எலும்புகளை இட, தீர்த்தம் பட்டவுடனே எலும்பு ரத்தினமாக மாறியது. இத்தலத்தில் வாயு திசையில் உள்ள கிணற்றில் கங்கை வாசம் செய்வதாக ஐதீகம். பிரம்ம தீர்த்தம், சந்திர தீர்த்தம் முதலிய புண்ணிய தீர்த்தங்களும் உண்டு. பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சந்திரன் தனது வியாதியை போக்கிக்கொண்ட தலம். சிறந்த சிவபக்தையாகத் திகழ்ந்த ஒரு பரத்தைக்கு இத்தல பெருமான் சிவலோகமளித்தானாம். சோழமன்னன் ஒருவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய இடம்.
தமிழ்நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ள வடதிருமுல்லைவாயில் தல வரலாற்றைப் போலவே தென் திருமுல்லைவாயில் தலவரலாறும் அமைந்துள்ளது. சோழ மன்னன் கிள்ளிவளவன், வேட்டையாடும் பொருட்டு, முல்லை நிலமாக இருந்த இந்த வனப்பகுதிக்கு வந்தான். அவ்வமயம் அவன் அமர்ந்து வந்த குதிரையின் கால்கள் முல்லைக் கொடியில் சிக்கிக் கொண்டன. முல்லைக் கொடி அடர்ந்த புதரை, தன் வாளால் மன்னன் வெட்டியபோது, வாள் அங்கு புதரின் கீழ் இருந்த சிவலிங்கத்தின் மீது பட்டது. குருதி பெருகிற்று. சிவாபராதம் செய்து விட்டோமே என்று பதைபதைத்துப் போன மன்னன் தன் தவறை உணர்ந்து உடைவாளால் உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டான். உடனே அரசன் முன் ரிஷபாரூடராய்க் காட்சி தந்த சிவபெருமான் மன்னனின் மனத்துயரை மாற்றி அருளினார்.
கிள்ளிவளவன் அச்சிவலிங்கம் இருந்த இடத்தில் திருக்கோயில் எழுப்பித்தான். நித்திய வழிபாடுகளும், சிறப்பு விழாக்களும் நிகழ்த்த வழிவகுத்து இறையருள் பெற்றான்.
இக்காரணம் பொருட்டே இத்தல இறைவனுக்கு யூதிகா பரமேஸ்வரர் (யூதிகா } முல்லை) முல்லைவனேஸ்வரர் மற்றும் முல்லை வனநாதர் எனப் பல திருநாமங்கள் வழங்கப்படுகின்றன. தல மரமும் முல்லையே.
ஆலய அமைப்பு: மூலவர் சுயம்புத் திருமேனி பாணத்தில் வெட்டுத் தழும்புகள் உள்ளன. சத்யானந்த சௌந்தரி என்ற பெயருக்கு ஏற்ப அம்பாள் அழகான திருமேனி கொண்டு அருள்கிறாள். சிவபெருமான் குருவாக இருந்து அம்மனுக்கு உபதேசித்த தலமாதலால் இங்கு பள்ளியறை பூஜை கிடையாது என்பது தனிச்சிறப்பு.
வழிபாட்டுப் பலன்: மகோதய புண்ணியகாலம், சூரிய, சந்திர கிரகணங்கள் நடைபெறும் நாள்கள், அமாவாசை முதலிய நாள்களில் இத்தல இறைவனை ஐந்தெழுத்தோதி வழிபடுவோர் வினை அகன்று நன்மை பெறுவர். இத்தல பாடல்கள் பத்தையும் இசையோடு பாடும் பக்தர்கள் அகன்ற வானுலகை மிகவும் அரசாள்வர். பித்ருதோஷம், கிரகதோஷம், புத்திரதோஷ நிவர்த்தி வேண்டி இத்தலத்திற்கு பக்தர்கள் வருவது கண்கூடு. தைப்பூச நாளில் 108 காவடிகள் வழிபாடு நடைபெறுவது விசேஷமானது.
கும்பாபிஷேக சிறப்பு: தற்போது நடைபெற உள்ள கும்பாபிஷேகமானது 1989}ஆம் வருடத்திற்குப் பிறகு நடைபெற உள்ள மகா கும்பாபிஷேகமாகும். யாகசாலை பூஜைகள் ஜனவரி 24 }இல் ஆரம்பமாகின்றன.
தொடர்புக்கு: திருநின்றியூர் ஆலய சிவாச்சாரியார்: 76391 77416 ; திருமுல்லைவாயில் ஆலய குருக்கள்: 98430 48780.
-எஸ்.வெங்கட்ராமன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இனிப்பு வழங்கி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா்

செஞ்சி ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளா் பிரசாரம்

செஞ்சி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

தென்காசி - நெல்லை - பெங்களூருக்குமீண்டும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி வீடியோ செய்தி...

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி வீடியோ செய்தி...

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
தினமணி வீடியோ செய்தி...
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

