புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பஞ்ச கிருஷ்ண தலங்கள்

தமிழகத்தில் உள்ள திருமாலின் ஐந்து திவ்ய தேசங்கள்..

News image
Updated On :23 ஆகஸ்ட் 2024, 12:00 pm

இரா. இரகுநாதன்

தமிழகத்தில் உள்ள திருமாலின் ஐந்து திவ்ய தேசங்களாக கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை திருக்கண்ணபுரம் ஆகிய ஊர்களிலுள்ள கோயில்கள் விளங்குகின்றன. கபிஸ்தலத்தைத் தவிர, மற்ற நான்கும் கிருஷ்ணர் நேரில் காட்சி தந்தவை என்றும் திருமங்கையாழ்வாருக்கு கபிஸ்தலம் கஜேந்திரவரதன் காவிரி ஆற்றங்கரையில் கிடக்கும் கண்ணனாகவே காட்சி தந்தவராகக் காணப்படுகிறார் என்றும் ஐதீகம்.

கபிஸ்தலம்: பள்ளிகொண்ட கோலத்து திருமாலை ஆற்றங்கரையில் கிடக்கும் கண்ணன் என்று திருமழிசை ஆழ்வார் மங்களாசாசனம் செய்கிறார். கபி என்றால் குரங்கு. இவ்வூரில் ஸ்ரீஆஞ்சநேயர் கடும் தவம் செய்து பெருமாளின் தரிசனம் பெற்றார்.

துர்வாச முனிவரின் சாபத்தால், அரசன் இந்திரத்யும்னன் யானைகளுக்கு அரசனாகப் பிறந்தான். அகத்தியர் தந்த சாபத்தால் குளக்கரையில் இருந்த கூஹூ என்ற அரக்கன் முதலையாக குளத்தில் வாழ்ந்தான். யானை கஜேந்திரன் தாமரைப்பூ பறிக்க குளத்துக்குள் செல்ல முதலையோ யானையின் காலைக் கவ்வியது. விடுவித்துக் கொள்ளமுடியாத யானை திருமாலை "ஆதிமூலமே' என்று அபயக்குரலில் அலறியது . திருமாலும் தோன்றி முதலையை சக்ராயுதத்தால் கொல்ல முதலை, யானை இருவருக்கும் சாபவிமோசனம் கிடைத்தது.

திருக்கோவிலூர்: பத்மபுராணம், பிரம்மாண்ட புராணக் குறிப்பும், ஆழ்வார்கள் முதல்முதலாகப் பாடிய இத்திவ்யதேசத்தை "கிருஷ்ணன் கோயில்' என்றே வடமொழிநூல்கள் குறிக்கின்றன. கோபாலன் என்னும் சொல்லே கோவாலன் எனத் திரிந்து ஊருக்கு "கோவாலனூர்' என்றாகி, "கோவலூர்' எனப்படுகிறது. ஆயனான கோபாலன் எழுந்தருளியுள்ள தலமே திருக்கோவிலூர் ஆயிற்று. தட்சிண பினாகினி எனப்படும் தென்பெண்ணையாற்றங்கரையில் இத்தலம் அமைந்துள்ளது.

ஒரே நேரத்தில் வாமன, திருவிக்ரம அவதார திருக்கோலக் காட்சியை தரிசிக்க விரும்பிய மிருகண்டு முனிவர் பிரம்மன் அருளியபடி கிருஷ்ண பத்திரா நதிக்கரையில் கிருஷ்ண ஷேத்திரத்தில், கிருஷ்ணர் கோயிலில் தவம் செய்தார். மகா விஷ்ணு வயதான பிராமணர் உருவில் வந்து அன்னம் கேட்டார். மிருகண்டு முனிவரும், மனைவியும் அன்னமிட வெளியே வர கிருஷ்ணன் சங்கு சக்ரதாரியாக காட்சி தந்தார். கிருஷ்ணர் சந்நிதியும் உற்சவர் ஆயன், ஆயனார், கோவலன் (கோபாலன்) எனவும் வணங்கப்படுகிறார்.

திருக்கண்ணங்குடி: ஒருமுறை திருமாலை ரிஷிகள் வேண்ட அவர்களுக்கு காட்சி கொடுக்க நினைத்தார். வசிஷ்டர் இளகாத வகையில் வெண்ணையைக் கொண்டு கிருஷ்ண விக்ரகம் ஒன்றுசெய்து வைத்து நாராயணனை மற்ற ரிஷிகளுடன் சேர்ந்து வணங்கிக் கொண்டிருந்தார். கிருஷ்ணன், வசிஷ்டரை சோதிக்க குழந்தையாக வந்து பூஜையில் இருந்த வெண்ணெய்யை எடுத்து வாயிலிட்டுக் கொண்டு ஓட, வசிஷ்டர் குழந்தைக் கண்ணனை துரத்த கோயிலில் உள்ள மகிழ மரத்தடியில் தவம் செய்த மகரிஷிகள் தாம்புக்கயிற்றால் கண்ணனை கட்டிப்போட்டு தங்க வைத்தனர்.

அங்கேயே கண்ணனை குடிகொள்ளச் செய்ததால் இத்தலத்துக்கு " திருக்கண்ணங்குடி' என்று பெயர் வந்தது.

மூலவர் தாமோதர நாராயணப்பெருமாள், லோகநாதப் பெருமாள், சியாமளமேனிப் பெருமாள் என நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். தாயார் அரவிந்தநாயகி என்னும் லோகநாயகித்தாயார். தல விருட்சம் மகிழ மரம். நாகப்பட்டினம் அருகே இந்தக் கோயில் உள்ளது.

திருக்கண்ணமங்கை: இந்தத் தலம் குறித்து சூத புராணிகர் தமது சீடர்களுக்கு கூறியதாக பத்மபுராணத்தில் பேசப்படுகிறது. திருமால் பாற்கடலைக் கடைந்தபோது, இறுதியில் மகாலட்சுமி தோன்றினாள். பாற்கடல் கடைந்த தோற்றத்துடன் இருந்த பெருமாளைக் கண்டு, வெட்கப்பட்டு இத்தலத்துக்கு வந்து கண்ணனையே கண்ணுள் கொண்டு மனதால் நினைத்து மெüன தவம் இருந்தாள். திருமால் அவளை விஷ்வக்சேனர் மூலம் முகூர்த்த நாள் குறித்து, முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை சூழ இங்கு எம்பெருமான் திருமகளை மணம் புரிந்து கொண்டார்.

மகாலட்சுமியை அடைய எம்பெருமான் தன்னுடைய பாற்கடலை (சிந்துவை) விட்டு புறத்தே வந்து இங்கு எழுந்தருளியதால் "பெரும்புறக்கடல்' என்பதே பகவானின் திருநாமமாகும். இவ்விடத்தே கிருஷ்ணருக்கு திருமணம் நடைபெற்றதால் "கிருஷ்ணமங்கள ஷேத்ரம்' என்றும் ஒரு தலத்துக்கு இருக்க வேண்டிய ஏழு வகை லட்சணங்களும் பொருந்தியிருப்பதால் "ஸப்தாம்ருத ஷேத்ரம்' என்றும் இதற்குப் பெயர். மூலவர் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம் சுமார் 16 அடி உயர திருவுருவம் உள்ளது.

திருவாருர் அருகே இந்தக் கோயில் உள்ளது.

திருக்கண்ணபுரம்: 108 திவ்ய தேசங்களுள் சிறப்புடைய கீழை வீடெனும் திருக்கண்ணபுரம் கண்ணனின் வீடாகக் கருதப்படுகிறது. பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் பாடியுள்ளனர். பெருமாள் கருவறையைத் தவிர ஸ்ரீ தாமோதரக்கண்ணன் என்ற தனி சந்நிதி உள்ளது. இந்த ஊரில் கண்ணன் தவழ்ந்து விளையாடியதால், "கண்ணன்புரம்' என அழைக்கப்படுகிறது. மூலவர் கிழக்கே திருமுக மண்டலத்துடன் நீலமேகப் பெருமாள், செüரிராஜன் என்ற பெயரோடு நின்ற திருக்கோலம். நன்னிலம் அருகே இந்தக் கோயில் உள்ளது.

ஆகஸ்ட் 27-இல் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.