

கொள்ளிடத்தின் வடகரையில் புருஷாமிருக மகரிஷியால் பூஜிக்கப் பெற்றது, திருமால், இந்திரனால் வழிபடப் பெற்றது, திருநந்தியெம்பெருமான் சுயசாம்பிகை தேவியாருடன் திருமணம் கொண்டது, மார்க்கண்டேயருக்காக வைகாசி விசாக நன்னாளில் மழுவேந்தி நடனக்காட்சி அருளியது, கொள்ளிடம் தென்வடலாகத் திரும்பி உத்திரவாகினியாகச் செல்லும் பெருமை பெற்றது உள்ளிட்ட சிறப்புகள் உடையதே "திருமழபாடி' தலமாகும்.
"மழபாடித் தாலவனம்', "பொய்கை வளநாடு', "இராஜேந்திர சிங்க வளநாடு', "தியாகவல்லிநாடு', "பரசுநர்த்தனபுரம்' உள்ளிட்ட சிறப்புப் பெயர்களுடைய இந்தத் தலத்தில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், ஐயடிகள் காடவர்கோன் உள்ளிட்டோர் திருப்பதிகங்களைப் பாடியுள்ளனர்.
கிழக்கு நோக்கிய கோயில் ஏழு நிலைகளையுடைய ராஜகோபுரத்துடன் காட்சி தருகிறது. கொடிமரம், பலிபீடம், நந்தி, பெரிய அலங்கார மண்டபம், இரு நந்தி சந்நிதிகள், ஒரே கல்லாலான சோமாஸ்கந்தரின் தனி
சந்நிதி, பிரம்மனுக்கு எதிரில் நான்கு வேதங்களும் நான்கு நந்திகள், சிவன் பிரகாரத்தில் இரண்டு தட்சிணாமூர்த்திகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
மூலவர் வயிரத்தூண் நாதர், பிரகாரத்தில் அகோர வீரபத்திரர், விநாயகர், முருகர் ஆகியோர் காட்சி தருகின்றனர். கருவறையும் சோமாஸ்கந்தர் கோயிலும் இணைந்து பெரிய கோயிலாகக் காட்சியளிக்கின்றன.
இரு அம்பாள் சந்நிதிகள் உள்ளன. பாலாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. கருவறை மேற்குச் சுற்றில் வள்ளி, தெய்வானையுடன் முருகர் காட்சி தருகிறார். தல விருட்சம் பனை மரம். கார்த்தியாயினி அம்மன் மயில் வாகனத்தில் காட்சி தருவது விசேஷம். முற்காலத்தில் உத்தரவாகினியாகப் பாய்ந்த ஆற்றை தெற்கு நோக்கி, தெற்குப் பக்கமாகத் திருப்பியதாகவும், அதன் காரணமாகவே விநாயகர் தெற்குப் பார்த்துக் காட்சி தருவதாகவும் சொல்லப்படுகிறது.
இத்தல நவகிரகங்களை ஈசன் தம் நெற்றிக்கண்ணால் அழித்ததாகவும், அதனால் முக மண்டபத்தில் சிவனுக்கும் நந்திக்கும் நடுவில் இருக்கும் மூன்று குழிகளை நவகிரகங்களாகக் கருதுவதாகவும் பக்தர்கள் கருதுகின்றனர். சரும நோயால் அவதிப்பட்ட சந்திரன் வழிபட்டபோது, அவருக்கு இறைவன் காட்சி அளித்து, நவகிரகக் குழிகளில் நெய்விளக்கு ஏற்றி வழிபட நோய் நீங்கப் பெற்றதாக தல வரலாறு.
சிபி சக்கரவர்த்தியின் நவகிரக தோஷமும் இங்கு வழிபட்டு நீங்கியதாகச் சொல்லப்படுகிறது. சனிக்கிழமைகளில் இந்தக் குழிகளுக்கு முன்னர் தீபம் ஏற்ற நவகிரக தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
சருமநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், பங்குனி மாதம் நான்கு அல்லது ஐந்து செவ்வாய்க்கிழமைகள் இந்தத் தலத்துக்கு வந்து, ஆற்றிலும் கோயில் தீர்த்தத்திலும் நீராடிவிட்டு, ஈர ஆடையுடன் ஒன்பது முறை அம்பாளை வலம்வந்து, உப்பும் மிளகும் போட்டு வேண்டிக் கொண்டால் நோய்களும், சங்கடங்களும் நீங்கும். சோமாஸ்கந்தருக்கு வெள்ளை வஸ்திரமும் ரோஜாப்பூ மாலையும் சாற்றி 11 நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். மயிலாடுதுறை அருகிலுள்ள வைத்தீஸ்வரன் தலத்துக்கான நேர்த்திக் கடனை இந்தக் கோயிலிலேயே நிறைவேற்றலாம்' என்பதெல்லாம் பக்தர்களின் நம்பிக்கையாகும்.
பங்குனி மாதம் புனர்பூசத்துக்கு முதல் நாளான மார்ச் 26 (வியாழக்கிழமை) திருவையாறு அருகே உள்ள அந்தணர்புரத்தில் நந்திதேவர் வயலில் கிடைக்கும் காட்சி நிகழ்த்திக் காட்டப்படும். அன்று மாலை திருவையாறு ஐயாறப்பன் கோயிலில் பட்டாபிஷேக விழா நடக்கிறது. மறுநாள் வெள்ளிக்கிழமை புனர்பூசம் நட்சத்திர நாளில் விடியற்காலை 4 மணி அளவில் நந்திதேவர் வெள்ளித் தலைப்பாகை, பட்டு வேட்டி, துண்டு, வெள்ளிச் செங்கோலுடன் மாப்பிள்ளைக் கோலத்தில் குதிரை வாகனத்தில் திருவையாறில் இருந்து புறப்படுவார். கூடவே வளர்ப்புப் பெற்றோர் ஐயாறப்பனும் அறம்வளர்த்த நாயகியும் வெட்டிவேர் பல்லக்கில் தொடர்வார்கள்.
இரு பல்லக்குகளும் திருநெய்த்தானம், கடுவெளி, வைத்தியநாதம்பேட்டை வந்து கொள்ளிடம் நதிக்கரைக்கு வரும். அங்கு மாப்பிள்ளை, சம்பந்தியை எதிர்கொண்டு அழைப்பர். கொள்ளிடப் பந்தலில் சுயம்பிரகாசாம்பிகையின் வளர்ப்புப் பெற்றோர் அழகிய கண்ணாடிப் பல்லக்கில் வந்து காத்திருந்து மாப்பிள்ளையை (நந்தி பெருமானை) வரவேற்று ஊர்வலமாக சுந்தராம்பிகை அம்மன் உடனாய அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோயிலின் முன் அமைக்கப்பட்டுள்ள கல்யாண மேடை பந்தலுக்கு அழைத்து வருவார்கள். இரவு 7.30 மணிக்கு மேல் இரவு 9 மணிக்குள் நந்தி திருக்கல்யாணம் நடக்கிறது.
திருமழபாடியில் நந்தி திருக்கல்யாணம் கண்டால் விரைவில் திருமணம் நடைபெறும்' என்கின்றனர் பக்தர்கள். இதை "நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி திருமணம்' என்ற வழக்கு மொழி உறுதி செய்கிறது. அரியலூர் மாவட்டத்தில் திருமழபாடி உள்ளது.
-தஞ்சை இரா.சுரேஷ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நந்தி நாதேஸ்வரா் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

இருசக்கர வாகனம் திருட்டு இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறை
மேட்டுப்பட்டி பகுதியில் நாளை மின் தடை
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

