தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குளத்தில் வெளிப்பட்ட கூத்தன்

News image
Updated On :5 ஜூலை 2024, 11:15 am

கே.பி.பத்மநாபன்

சோழ வளநாட்டில் உள்ள "தில்லை விளாகம்' என்னும் அழகிய திருத்தலத்தில் ராமரும், நடராஜரும் அருகருகே வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

திருவாரூர்} காரைக்குடி இருப்புப் பாதையில் தில்லை விளாகம் ரயில் நிலையத்திலிருந்து தெற்கே 3 கி.மீ. தொலைவில் இந்தத் திருத்தலம் உள்ளது. அருகில் உள்ள பெரிய ஊர் முத்துப்பேட்டையாகும்.

ஒரு காலத்தில் இந்தப் பகுதி தில்லை மரங்கள் சூழ்ந்த வனப்பகுதியாகத் திகழ்ந்துள்ளது. முன்னோர்களால் "தில்லைவனம்' என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஊரைச் சுற்றி கழுகுக்காடு, ஜாம்புவன் ஓடை, தம்பிக்கோட்டை, அதிவீரராமபட்டினம் போன்ற பல ஊர்கள் ராமாயணத்துடன் தொடர்புடையதாய் அமைந்திருக்கின்றன.

"படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் பஞ்சகிருத்திய தாண்டவத்தை சிவன் உமையுடன் முதல்முதலில் இத்தலத்தில் செய்தார்' என்றும் "ராவண வதத்தால் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமர் இங்கு வழிபட்டார்' என்றும் நகரத்தார்களால் 1938}ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட "தில்லை விளாகம்' என்கிற "ஆதிசிதம்பர மகாத்மியம்' என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிருஷ்டி ஆரம்பத்திலேயே இத்தலத்தில் சிவன் நடனம் செய்தமையால் "ஆதிசிதம்பரம்' என்ற பெயரும் பெற்று இத்தலம் விளங்குகிறது. நாரதர் பூலோகத்தில் இடையூறின்றி தவம் செய்ய, இத்தலம்தான் சிறந்தது என பிரம்மாவால் உபதேசிக்கப்பட்டார். உ.வே.சா. எழுதிய ஆராய்ச்சி நூலை மேற்கோள் காட்டி, காஞ்சி மகானும் இத்தலத்தைப் பற்றி மிகவும் சிலாகித்துக் கூறி அருளாசி வழங்கியுள்ளார்.

இத்தலத்தில் உள்ள புகழ்பெற்ற வீரகோதண்டராமர் கோயிலிலிருந்து சுமார் அரை கி.மீ. தூரத்தில் உள்ள அம்பலக்குளம் என்ற ஊருணியிலிருந்து 1892}ஆம் ஆண்டு 5 அடி உயரமுள்ள நடராஜர், சிவகாமி அம்மை, மாணிக்கவாசகர் விக்கிரகங்கள் கண்டெடுக்கப்பட்டன.

நடராஜர் ஆஜானுபாகுவாய் ராமர் கோயிலுக்கு அருகில் மூலஸ்தானத்தில் மிகப் பெரிய திருவாசியுடன் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். நர்த்தன சுந்தர நடராஜனாக சிவகாம சுந்தரியுடன் மாணிக்கவாசகர் உடனிருக்க முயலகனை மிதித்துக்கொண்டு ஆடும் நடன கோலம் மெய்சிலிர்க்கவைக்கும்.

இதே ஊரில் மற்றொரு குளத்தில் (தியாகராஜ கட்டளை) நடராஜர், சிவகாமி அம்மை, மணிவாசகர், சில சிலைகள் கண்டெடுக்கப்பட்டு ஊர்மக்கள் உதவியுடன் காரைக்குடி முத்துப்பட்டினம் நகரத்தார் வகையறாக்களால் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கோயில் கட்டப்பட்டு 1922}ஆம் ஆண்டில் முதலாவது கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இரண்டாவதாக கிடைக்கப் பெற்ற நடராஜர் விக்கிரகம் உற்சவமூர்த்தியாக வீதி உலாவுக்குப் பயன்பாட்டில் உள்ளது.

102 ஆண்டுகளுக்குப் பின்னர் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு, கடந்த மார்ச் 29}இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சிவன், அம்பாள், முருகன், நால்வர், தட்சிணாமூர்த்தி, துர்கை, சண்டிகேஸ்வரர், கஜலெட்சுமி, பைரவர், நவக்கிரகங்கள் போன்ற

சந்நிதிகளும் வழிபாட்டில் உள்ளன.

ஜூலை 12}இல் ஆனித் திருமஞ்சனத்தையொட்டி, நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

அனைத்து உயிர்களுக்கும் ஜீவன் முக்தி அளிக்கும் தலமாக இத்தலம் கருதப்படுகிறது. இங்குள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீராடி சிவ, ராம தரிசனம் செய்பவர்களுக்கு சர்வாபீஷ்டங்களும் பெற்று சாயுஜ்ய பதவி கிட்டும் என்பது ஐதீகம்.

-கே.பத்மநாபன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.