24,300 புள்ளிகளை கடந்த நிஃப்டி, சென்செக்ஸ் 965 புள்ளிகள் உயர்வு!!சென்னையில் வெளுத்து வாங்கும் பலத்த மழை! எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்! கால நீட்டிப்பு இல்லை! அமெரிக்காவுக்குப் பதிலடி! வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவிப்பு! ஹோர்முஸ் நீரிணையில் பிரிட்டிஷ் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்!எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்!நீட் தேர்வு முடிவுகள்: மனநல ஆலோசனைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்!தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி!
/

திருமண வரம் அருளும் நெல்லியப்பர்!

சித்தர்கள் பலர் தவம் செய்த பூமியாகவும், காரைக்கால் அம்மையார், ஆதிசங்கரர் வழிபட்ட தலமாகவும் திகழ்கின்றது,

News image
Updated On :17 ஜூலை 2026, 4:46 pm IST

சித்தர்கள் பலர் தவம் செய்த பூமியாகவும், காரைக்கால் அம்மையார், ஆதிசங்கரர் வழிபட்ட தலமாகவும் திகழ்கின்றது, சென்னை பட்டாபிராம் அருகில் அமைந்துள்ள சித்துக்காடு நெல்லியப்பர் கோயில். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு உகந்த தலம்.

அக்காலத்தில் "திருமணம்' என்ற பெயரில் இவ்வூர் அழைக்கப்பட்டுள்ளது. "திருமன்றம்' என்ற பெயரே நாளடைவில் மருவி "திருமணம்' எனப் பெயர் பெற்று, பின்னர் "சித்துக்காடு' என்றே அழைக்கப்படுகிறது.

நெல்லியப்பர் சிவாலயம் பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரங்களாக இங்குள்ள சிற்பங்களும் கட்டட வடிவமைப்பும் உள்ளன.

மேலும், இவ்வூரில் உள்ள ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோயிலின் ராஜகோபுர முகப்பில் 1868} ஆம் ஆண்டைச் சேர்ந்த முதலாம் சுந்தர பாண்டியன் கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. அதில் இவ்வூர் "புலியூர் கோட்டத்து திருமன்றம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருமாள் கோயிலில் ஆண்டாள் சந்நிதி தூணில் கருடக்கொடி சித்தர் குடிகொண்டுள்ளார். இவர் கண் கோளாறுகளை நீக்க வல்லவர். நெல்லியப்பர் திருக்கோயிலுக்கு மேற்கே கூவம் ஆற்றின் கரையோரம் தொன்மை வாய்ந்த வாலீஸ்வரர் சிவாலயமும் அமைந்துள்ளது.

இத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவனும், விஷ்ணுவும் திருமண வரம் அருள்பவர்கள் என்பதால் இவ்வூர் "திருமணம்' என்று அழைக்கப்பட்டிருப்பது பொருத்தமே என்பது ஆன்மிக அன்பர்களின் கருத்து.

இங்குள்ள முதலாம் சுந்தர பாண்டிய மன்னரின் கல்வெட்டில் பிடாரிப்பட்டு சிவன் கோயிலுக்கு அருளானந்தன் திரு

விடையாட்டம் நிலத்தை நீக்கி கோயிலுக்கு நன்கொடை வழங்கிய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

பிராண தீபிகா சித்தர், சிவாலயத்தில் உள்ள நந்தி தேவர் மண்டபத்தின் முகப்புத் தூணிலே புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளார். இதயக் கோளாறு உள்ளவர்கள் இவரை வேண்டி வணங்கி வந்தால், கோளாறு நீங்கும் என்பது நம்பிக்கை. அதேபோல ஜடாமுடி சித்தர் எனப்படும் படுக்கைச் சித்தர் அம்மன் கோயிலையொட்டியுள்ள மண்டபத்தில் புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளார்.

உலக உயிர்கள் அனைத்தையும் காக்கும் பணியை தாந்திரீய முறையில் செய்பவர் இவர் என்கிறார்கள். இதேபோல் சிவன் கோயிலின் ஒவ்வொரு தூண்களிலும் பெயர் அறியப்படாத சித்தர்களின் சிற்பங்கள் நிறைந்துள்ளன.

கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் நம்மை கிழக்கு முகமாக வரவேற்கின்றது. அதையொட்டிய எழில் மிகுந்த மிகப் பெரிய திருக்குளம் கண்களுக்கு விருந்தாகிறது. ராஜகோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் பலிபீடம், கொடிமரம், நந்திதேவரை தரிசிக்கலாம்.

மூலவர் நெல்லியப்பர் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். நெல்லி வனத்தில் தோன்றியவர் என்பதால், இறைவன் திருப்பெயர் நெல்லியப்பர். இவரே தாத்திரீஸ்வரர் எனவும் வழங்கப்படுகிறார்.

தலவிருட்சம் நெல்லி மரம். இதனை 21 முறை வலம் வருவது சிறப்பு. நெல்லிக்கனி கிடைக்கும் நாள்களில் நெல்லிக்கனி பிரசாதமாக வழங்கப்படுவது சிறப்பு. இறைவனை நெல்லிச்சாறு அல்லது நெல்லிப்பொடியால் அபிஷேகம் செய்து வழிபட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

சிவன் சந்நிதியின் அருகே தெற்கு முகமாக அழகிய கோலத்தில் அருள்கிறார் இறைவி பூங்குழலி. அன்னை தோன்றிய இடம் பூந்தோட்டம் என்பதால், பூங்குழலி என்ற திருப்பெயர் நிலைத்துவிட்டது. அன்னைக்கு பிரசூன குந்தளாம்பிகை என்ற பெயரும் வழங்கப்படுகின்றது. அம்பாளுக்கு வளையல் அணிவித்து வழிபட்டு வந்தால் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. சுவாமியும் அம்பாளுமே திருமண வரம் அருளுபவர்கள்.

பொதுவாக சிவாலயங்களில் நடராஜர் உற்சவராக இருப்பதும், அவருக்கு ஆருத்ராவில் அபிஷேகம், தரிசனம் நடப்பதையும் அறிவோம். அந்த நடராஜருக்கு ஆருத்ரா அன்று இங்கு திருமண வைபவம் நடப்பது சிறப்பு.

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லியில் இருந்து பட்டாபிராம் செல்லும் வழித்தடத்தில் சித்துக்காடு உள்ளது. தரிசனத்துக்காக காலை 8 மணி முதல் 10.30 மணிவரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.

- பனையபுரம் அதியமான்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.