மதங்களைக் கடந்த மாரியம்மன்

தாய்லாந்தில் தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் மாரியம்மன் கோயில்..

Updated On :

"தமிழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்தனர்; தமிழ் மன்னர்கள் பலர் கடல் கடந்து சென்று ஆட்சிகளை அமைத்தனர்' என்பதை வரலாற்றின் வாயிலாக அறியலாம். வெளிநாடுகளுக்குச் சென்ற தமிழர்கள் ஆங்காங்கு கோயில்களை உருவாக்கி, இந்து மதத்தின் இறையுணர்வு, கலாசாரம், பண்பாடுகளை வெளிநாட்டவர்களும் அறிய வாய்ப்பை ஏற்படுத்தினர்.

அந்த வகையில் இயற்கை எழிலுடைய கடற்கரையால் சுற்றுலாப் பயணிகளுக்கு மனச்சோர்வையும், உடல் சோர்வையும் நீக்கி, புதுத் தெம்பை அளிக்கும் தாய்லாந்து நாட்டில், பாங்காக் நகரில் அருள்மிகு மகா மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஆங்கிலேயர்களின் ஆட்சியின்போது, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வசித்து வந்த தமிழர்கள் இந்தியாவில் இருந்து கடல் கடந்து மியான்மர், மலேசியா, சிங்கப்பூர், தென் கிழக்கு ஆசியாவிலுள்ள தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று குடியேறினர். அங்கு விவசாய வேலை, கட்டுமான வேலைக்குச் சென்ற தமிழர்கள் ஒரு கூட்டமாக வாழ்ந்தனர்.

தஞ்சாவூரைச் சேர்ந்த வைத்திலிங்க படையாச்சி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் தாய்லாந்துக்குச் சென்றனர்.

"இங்கு கரும்பு விவசாயிகளின் நலனுக்காக மாரியம்மன் கோயில் இருந்தால் மும்மாரி பொழிந்து நாட்டின் வளமும், நலனும் சிறப்பாக இருக்கும்' என்கிற எண்ணம் வைத்திலிங்க படையாச்சிக்கு ஏற்பட்டது.

இவர் அன்றைய ஆட்சியாளர்களின் அனுமதியுடன் தமிழர்களின் ஆதரவுடன் மாரியம்மன் கோயிலைக் கட்டினார்.

1879}ஆம் ஆண்டில் கோயிலின் முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்தக் கோயிலை "உமாதேவி கோயில்', "வாட்கீக் கோயில்' என்றெல்லாம் அழைக்கின்றனர். பெüத்த மதத்தைத் தழுவிய 90 சதவீதம் பெரும்பான்மையான தாய்லாந்து மக்களும், சீன வம்சாவளிகளும் வாழும் இடத்தில் புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் ஒருங்கிணைந்து கட்டிய இந்தக் கோயில் தாய்லாந்தை இன்றளவும் சுபிட்சமாக வைத்துள்ளது என்கின்றனர் அந்த நாட்டு மக்கள். அனைத்து மதத்தினரும் இங்கு வந்து வழிபடுகின்றனர்.

திராவிட பாணியில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த கம்பீரமான ராஜகோபுரம், சிலிர்ப்பூட்டும் மூலவர் மாரியம்மன், கோயில் வளாகத்தில் பிரமிப்பூட்டும் வகையில் வண்ண அலங்கார வேலைப்பாடுகள், காசி விஸ்வநாதர் சந்நிதி, திருச்சுற்றில் கணபதி, கந்தன், விஷ்ணு, கிருஷ்ணர், காளி, காத்தவராயன் சந்நிதிகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

இந்துப் பண்டிகைகள் அனைத்தும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி, சதுர்த்தி நாள்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

புத்தர் சிலை இருப்பது தனிச்சிறப்பு. கோயில் அமைந்துள்ள பகுதியைச் சுற்றி வண்ண வண்ண நறுமலர்கள், அழகாக நேர்த்தியாகக் கட்டிய மாலைகள், பூஜை பொருள்கள் விற்கும் கடைகள் நிறைந்துள்ளன. வைதீக முறைப்படி பூஜைகள், ஹோமங்கள் நடைபெறுகின்றன.

தமிழிலும் வழிபாடு நடைபெறுகிறது.இதுகுறித்து கோயில் நிர்வாகத் தலைவர் சுரபாங் சிரிதோர்குல் கூறியது:

""புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆதரவால் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த மாரியம்மன் கோயில் வைதீக நெறியுடன், ஆகம விதிப்படி முறையாகச் செயல்பட்டு வருகிறது. மைசூரு, குலசேகரப்பட்டினம் தசரா விழாக்களைப் போன்று, தாய்லாந்து மாரியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா சிறப்புமிக்கதாகும். ஒன்பது நாள்களும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள், ஹோமங்கள் நடைபெறுகின்றன. கடைசி நாளில் தேரோட்டம் நடைபெறும்போது லட்சக்கணக்கானோர் திரள்வார்கள்.

இந்து மதத்தின் கலை, கலாசாரம், பண்பாடுகளைப் பறைசாற்றும் வண்ணம் இக்கோயில் அமைந்துள்ளது. தாய்லாந்து அரசும், உள்ளூர் மக்களும் கோயிலுக்கு முழு ஆதரவை அளிக்கின்றனர்'' என்கிறார்.

தாய்லாந்து நாட்டில், பாங்காக் நகரில் வணிக மையப் பகுதியான சிலோம் சாலையில் அருள்மிகு மகா மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.

- முனைவர் இரா.இராஜேஸ்வரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.