ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்! 500 பேர் கைது!செய்யறிவால் பறிபோகும் மற்றும் அசைக்க முடியாத வேலைகள்! ஃபோர்டு நிர்வாகி தகவல்தொடர் விடுமுறை! மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்!இளையராஜா இசை ஆராய்ச்சி மையம்! பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்!மதுராந்தகம் இடைத்தேர்தல்! முதல்வர் விஜய்யின் சாலைவலம் தொடங்கியது!“ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?” - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் பேசிய பிரதமர் மோடி! மதுராந்தகம், தாராபுரத்தில் அக். 5, 6 பள்ளிகளுக்கு விடுமுறை!

முக்திநாத் யாத்திரையின் பலன்!

முக்திநாத் யாத்திரையின் பலனை தரும் தஞ்சை கோயிலின் அபூர்வ சாளக்கிராமத் திருமேனி..

Published On :

புராண வரலாற்றுப்படி தஞ்சாசுரன் என்னும் அரக்கனை ஆனந்த வல்லியம்மை அழித்த தலம், தஞ்சாவூர் என்று பெயர் பெற்றதாக "வராக மான்மியம்' என்னும் நூல் கூறுகிறது. அருள்மிகு ஆனந்தவல்லியுடன் தஞ்சபுரீஸ்வரர் அருள்பாலிக்கும் கோயில் தஞ்சாவூரில் அமைந்துள்ளது. இங்கே ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ள தஞ்சை மாமணிக் கோயிலும் சிறப்பாக உள்ளது.

தஞ்சைக்குக் கிழக்கே ஆறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில். அக்கோயிலுக்கு வடபாலில் அமைந்துள்ள கோதண்ட ராமர் கோயில் வரலாற்றுச் சிறப்புடையது. ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கூடிய இக்கோயில் மிக அழகாகவும் விசாலமாகவும் அமைந்துள்ளது.

தஞ்சை மராட்டிய மன்னன் பிரதாபசிம்மனால் (1739 } 1763) கட்டப்பெற்று கம்பீரமாகக் காட்சியளிக்கும் கோபுரத்தில் கலைநுணுக்கங்களுடன் கூடிய சுதைச் சிற்பங்கள் அருமையாக உள்ளன. கோயிலுக்கு முன்புறம் கிழக்கில் உள்ள தேர் மண்டபத்தில் வடக்கு நோக்கி தனி சந்நிதியில் ஹயக்ரீவர் அருள்பாலிக்கிறார்.

ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், மிகப் பெரிய மகா மண்டபம் கல் தூண்களுடன் காட்சியளிக்கிறது. கொடிமரம் செப்புத் தகட்டினால் போர்த்தப்பட்டுள்ளது. கொடிமரத்தின் அடிப் பகுதியில் மராட்டிய மன்னன் சிவாஜியின் (1832 } 1855) பட்டத்தரசியான காமாட்சியம்பாயி சாகேப் என்னும் பெயர் குறிக்கப்பட்டுள்ளது.

மகா மண்டப உட்புறச் சுவர்களில் கருடாழ்வார், அனுமார், ராமபிரான் பட்டாபிஷேக காட்சி ஆகியவை தஞ்சை ஓவியப் பாணியில் அழகிய வண்ண ஓவியங்களாகத் தீட்டப் பெற்றுள்ளன. கொடிமரத்தின் முன்புறம் கருடன் சந்நிதி அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்தின் நுழைவு வாயிலின் முன் இருபுறமும் துவார பாலகர்களும், தென்புறம் விஷ்வக்úஸனரும் காட்சியளிக்கின்றனர்.

கருவறை விமானம் சிற்பக்கலையின் 96 வகையிலுள்ள செüந்தர்ய விமானம் என்ற அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நேபாள மன்னரால் மராட்டிய மன்னருக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்ட "சாளக்கிராமத்தினால்', மூலஸ்தானத்தில் ராமபிரான், சீதாதேவி, லட்சுமணர் ஆகிய திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. நேபாள நாட்டில் பாயும் கண்டகி நதியில் ஏராளமான சாளக்கிராமக் கற்களைக் காணலாம்.

இந்த வகைக் கற்கள் அங்கு மட்டுமே கிடைக்கும். வைணவத்தில் பிரசித்தி பெற்ற இந்தச் சாளக்கிராமக் கற்களைத் திருமாலாகவே பாவித்து இன்றும் பூஜை செய்வதைப் பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இங்கே பல்வேறு வகையான உருவங்களில் சாளக்கிராமக் கற்கள் காணப்படுகின்றன. மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களிலும், மடங்களிலும் இந்தச் சாளக்கிராமக் கற்களை வைத்துப் பூசித்து வருகிறார்கள்.

வடஇந்தியாவில் மராட்டிய மன்னர்கள், ஆட்சி செய்தபோது நேபாள நாட்டுப் பெண்களை மணப்பது வழக்கம். இவ்வகையில் நேபாள நாட்டு மன்னர் தனது மகளுக்கு அந்நாட்டிலிருந்து ஏராளமான சீர்வரிசைகளுடன் அபூர்வமான பெரிய சாளக்கிராமக் கற்கள் பலவற்றையும் அனுப்பினாராம். இவை அனைத்தும் மராட்டிய அரண்மனையில் பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள்.

தஞ்சாவூரைக் கைப்பற்றி ஆட்சியை அமைத்த மராட்டிய மன்னர்கள் தங்களது ஊரில் இருந்து வரும்போது தங்களது குடும்ப வழக்கப்படி சீதனமாகக் கிடைத்த நேபாள நாட்டுச் சாளக்கிராமக் கற்களைத் தஞ்சைக்கு எடுத்து வந்தார்களாம். இது பலகாலம் தஞ்சை அரண்மனையில் பாதுகாப்பாக இருந்து வந்தது. பிரதாபசிம்மன் ஆட்சிக்காலத்தில் அரண்மனையில் வைத்திருந்த சாளக்கிராமக் கற்களைக் கொண்டு ராமபிரான், சீதாதேவி, லட்சுமணன் மற்றும் சுக்ரீவன் முதலானோர் சிலைகள் செய்யத் தேர்ந்த சிற்பியிடம் ஒப்படைத்தாராம்.

அபூர்வமான கோலத்தில் ராமன், சீதாதேவி மற்றும் அனைத்துச் சிலைகளையும் சிற்பி உருவாக்கியுள்ளார். இவைகளைப் பிரதிஷ்டை செய்வதற்காகப் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே கோதண்டராமர் கோயிலைப் புதியதாகப் பிரதாபசிம்மன் நிர்மாணம் செய்து, புதியதாகச் சிற்பி செய்த சாளக்கிராம விக்ரகங்களைப் பிரதிஷ்டை செய்தாராம்.

இந்தியாவில் சாளக்கிராமம் கொண்டு செய்யப்பட்ட ராமர் சிலை ஐந்து அடி உயரத்தில் அமைந்திருப்பது இங்கு மட்டுமே என்று கூறப்படுகிறது. இப்படி மிகப்பழைமையான உயர்ந்த வகை சாளக்கிராமக் கற்களால் ஆன கோதண்ட ராமர் வடிவத்தை இக்கோயிலில் கண்டு தரிசித்து இன்புறலாம்.

உற்சவ விக்ரகங்களில் ராமபிரான் வலப்புறம் சீதாதேவியும், இடப்புறம் லட்சுமணனும் அற்புதமான எழிலுடன் காட்சியளிக்கின்றனர். திருக்கோயிலின் தெற்குப்புறம் பெரிய திருமடைப் பள்ளி, தும்பிக்கை ஆழ்வார் சந்நிதி, மகாசுதர்சனமூர்த்தி பதினாறு கரங்களுடன் அமைந்த அற்புத திருமேனி, பின்புறம் யோகநரசிம்மர் ஆகிய சந்நிதிகள் உள்ளன.

மராட்டிய மன்னன் பிரதாபசிம்மனின் அரசி யமுனா பாய் சாஹேப் இத்திருக்கோயில் பூஜைக்காக ஒட்டக்குடி, ரிஷியூர், கொட்டையூர், மகிமாலை ஆகிய கிராமங்களில் சுமார் 130 ஏக்கர் நஞ்சை நிலங்களை வழங்கியுள்ளதாக வரலாறு தெரிவிக்கிறது. கோயிலின் உட்பிரகாரச் சுவர்களில் ராமாயண வரலாற்று நிகழ்ச்சிகள் ஓவியங்களாகத் தீட்டப் பெற்று நேர்த்தியாக இருப்பதைக் காணலாம்.

கோயிலில் பிரதிஷ்டை செய்யப் பெற்றுள்ள ராமபிரானைத் தரிசிப்பது, வடஇந்தியாவில் முக்திநாத் யாத்திரை சென்று வந்த பலனைத் தரும் என்றும், பகவான் நேரடியாக வாசம் செய்வது சாளக்கிராமத் திருமேனி என்றும் இந்தக் கோயில் பட்டர் தெரிவிக்கிறார்.

- வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

(செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்ட "தமிழ்நாட்டில் இராமர் கோயில்கள்' எனும் நூலில் இருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.