போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!நேபாள வெள்ளம்! பலி 1,290 ஆக உயர்வு; 10-வது நாள்களாக மீட்புப் பணிகள் தீவிரம்!நேபாள வெள்ளம்! 9 நாள்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட இருவர்!ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

பரசுராமர் நிறுவிய பகவதி அம்மன்

இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் முக்கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது..

Published On :39 வினாடிகள் முன்பு

இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் முக்கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது, சிறப்புமிக்க அருள்மிகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில்.

அம்மனின் சிலை பரசுராமரால் நிறுவப்பட்டு, கோயிலும் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. பாண்டியர்கள் ஆட்சியின்போது கோயில் புதுப்பிக்கப்பட்டது. தமிழ், மலையாளம், சம்ஸ்கிருதம் என மூன்று மொழிகளிலும் தலபுராணம் கொண்ட கோயில்.

அசுரர்களின் அரசன் பாணாசுரன், உலக மக்களுக்கும், தேவர்களுக்கும் பெருந்துன்பம் விளைவித்து வந்தான். அவனை அழிக்க பராசக்தியால் மட்டும் முடியும் என திருமால் மூலம் அறிந்த தேவர்கள், சக்தியை வேண்டினர். அதன்படி கன்னியாகப் பாறையில் தவம் இயற்றினாள். அவளது அழகில் மயங்கிய சிவன் மணம்புரிய விரும்பினார். அதற்கு நாரதர் சூரிய உதயத்துக்கு முன் மணம்புரிய வேண்டும் என நேரம் குறித்தார். கன்னிக்கு மணம் முடிந்துவிட்டால், அசுரனை அழிக்கும் பலம் கிடைக்காது என்பதால், தாணுமாலயன் மணம் முடிக்கும் நாளன்று பொழுதுவிடிவதற்கு முன்பாகவே நாரதர் சேவல் போல் கூவினார். இதனால் பொழுது விடிந்ததாகக் கருதிய சிவன், கன்னியை மணம் புரியாமல் திரும்பிவிட்டார்.

இதற்கிடையில், தவமியற்றிய கன்னியை அடைய பாணாசுரன் வந்தான். இந்தத் தருணத்தைப் பயன்படுத்திய தேவி, பாணாசுரனை வாள்வீசி வதம் செய்து அழித்தாள் என்கிறது தலபுராணம்.

கல்வெட்டுகள் நிறைந்த கோயில். 10} ஆம் நூற்றாண்டு முதல் உள்ள 84 கல்வெட்டுகள் கிரந்தம், வட்டெழுத்து, தமிழ், மலையாளம், சம்ஸ் கிருதம் எனப் பல்வேறு மொழிகளில் கண்டறியப்பட்டுள்ளன.

கிழக்கு நோக்கிய வாசல், சுவாமி விவேகானந்தர் பாறையை நோக்கி அமைந்துள்ளது. என்றாலும், வடக்கு வாசலே பயன்பாட்டில் உள்ளது. எளிய நுழைவாயில், வெளிப்பிரகாரம், கொடிக்கம்பம், பலிபீடம், முகமண்டபம், நவராத்திரி மண்டபம், தியான மண்டபம், முன்மண்டபம், கருவறை எனக் கோயில் அமைந்துள்ளது. கருவறைக்குள் சிறு பெண்ணாக கன்னியாகுமரி பகவதி அம்மன், கிழக்கு முகமாய் அருளாட்சி வழங்குகின்றாள். கருவறை விமானம், ஜகதி, முப்பட்டை, குமுதம், கண்டம், பட்டி, வேதிகை என முறைப்படி அமைந்துள்ளது.

கன்னியாகுமரி அம்மனை அர்த்தமண்டபத்தில் இருந்தே எளிதில் தரிசிக்கும் விதமாக கருவறை அமைந்துள்ளது. அன்னை நின்ற கோலம். ஒரு கரத்தில் ருத்ராட்சம் தாங்கி நிற்க, மற்றொரு கரம் வரத முத்திரையுடன் அமைந்துள்ளது. கழுத்தில் அணிகலன்கள், அன்னை வசீகரமான கலைநுணுக்கத்துடன் காட்சிதருவதை அபிஷேக காலங்களில் காண

முடியும். அன்னையின் மூக்குத்திக் கல், நாகம் உமிழ்ந்தது எனப் பரம்பரை கதை கூறப்படுகிறது. அதன் ஒளி கிழக்குவாசல் வழியே வீசியதால், கடலில் சென்ற கப்பல்கள் வழி தவறி வந்து விடும் என்ற கதையும் கூறப்படுகிறது.

வெளிப்பிரகாரத்தில் கிழக்குப் பகுதியில் மரத்தடி சாஸ்தா, நாகர், குரு, நாகர்கள் உள்ளனர். முகமண்டபத்தில் காலபைரவர், கன்னி மூலையில் விநாயகர், தென்மேற்கில் ராணி மங்கம்மாள் செய்தளித்த பால செüந்தரி அம்மன் சிலை உள்ளன. இதற்கு நிவந்தங்களும் தரப்பட்டன. முன்மண்டபத்தில் உள்ள இரண்டு யானைச் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை.

யானையின் நீண்ட துதிக்கையின் கீழ் குட்டியானை, யானையின் வாயில் கல் உருண்டை அமைந்துள்ளது. இது சிற்பக் கலையின் மேன்மையைக் காட்டுகிறது. இது தவிர, தூண்களில் கங்காள நாதர், யட்சி, வாள், கேடயம் தாங்கிய வீரன், வில்லேந்திய ராமன், சங்கு சக்கரம் தாங்கிய விஷ்ணு ஆகிய சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. இவை தவிர, ராமாவதாரம், கிருஷ்ணாவதாரக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

புரட்டாசி நவராத்திரி மற்றும் வைகாசி விசாகத்தில் தலா பத்து நாள்கள் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இதுதவிர, ஆடி, தை அமாவாசை சிறப்பு நாள்களாகும். நவராத்திரி நிறைவு நாளன்று, அம்மன் வெள்ளிக் குதிரையில் மகாதானபுரம் வரை பரிவேட்டைக்குச் சென்று வருவது சிறப்பு.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், தரிசனத்துக்காக காலை 4.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.